திருப்பாவை 24
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி !
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் ! திறல் போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி !
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி !
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி !
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி !
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
விளக்கம்
எம்பெருமானை போற்றி பாடுதல்
பாரதப் போரில் அர்ஜுனன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டு போய் நிறுத்து’ என்று சொல்ல, அப்படியே செய்த கண்ணன், பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதவன் ஆதலால் அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்களே, இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித் திருப்பள்ளியறையில் இருந்தும், திவ்ய சிம்மாசனம் வரை வரத் தொடங்க,
அதனைக் கண்ட ஆய்ச்சியர்கள்,
பல ஆண்டு காலமாக தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராம பிரானைக் கண்டவுடனே ராக்ஷகசர்களால் நமக்கு நேரும் துன்பங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று காத்து கொண்டு இருந்தவர்கள், இராமபிரானைக் கண்டவுடன் ராக்ஷஸ துன்பங்களை மறந்து, மங்களா சாஸநம் பண்ணத் தொடங்கினாற் போல,
இவர்களும் தங்கள் மனோரதங்களை எல்லாம் மறந்து ‘இந்த திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது!’ என வருந்தி அந்த திருவடிகளை எடுத்து முடி மேல் புனைந்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
முன்பு உலகளந்து அருளினவற்றையும், சகடம் உதைத்தவாற்றையும் நினைந்து, இந்த திருவடிகளுக்கு ஒரு தீங்கும் நேராது ஓழிய வேணும் என்று மங்களாசாஸனம் செய்வதாய்ச் செல்லும் பாசுரம்,
அன்று இவ்வுலகம் அளந்தாய் என்ற பாசுரம். “அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி!” என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஆறு வார்த்தைகள் / கட்டளைகள். உன்னுடைய வீர சரித்திரங்களை ஏற்றி பேசியே உன்னை அனுபவிப்போம் என்கிறார்கள்.
அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை ஆச்சியர்கள் குறிப்பிடுகிறார்.
24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
மார்கழி பதிவு சிறப்பு. படங்கள் வழமை போல நன்று.
ReplyDelete