10 January 2025

26.பாசுரம் - மாலே ! மணிவண்ணா!

 திருப்பாவை 26



மாலே ! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

     மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

     பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே

     சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே, கொடியே, விதானமே

     ஆலின் இலையாய்! அருள் ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art  


பொருள்: 

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.


விளக்கம் 

‘பெண்களே “உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள், எம்மிடம் ஆசை / பிரியம் உடையவர்கள், என்னை தவிர வேறு ஒன்றுக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள், ஆகவே நீங்கள் வேண்டுவன எவை, இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணன் நியமித்து அருள, 

அது கேட்ட ஆய்ச்சியர்கள், ‘உன் முகவொளியை வெளியிலே கண்டு உன் திருநாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு உதவியாக இருப்பதோரு நோன்பை இடையர் நடத்தும் போது அது உன்னோடு சேர்க்கைக்கு இடையூறாக இருந்ததை கருதி இடையர்கள் பக்கம் நன்றி ‘நினைவாலே’ அந்த நோன்பை மேற்கொண்டோம் ; 

முன்னோர்கள் செய்வது உண்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களான அங்கங்களும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் மாலே மணிவண்ணா என்ற பாசுரம். 

நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது வேதங்களில் சொல்லபட்ட சரணாகதி விதிகள் போல அல்ல என்றும், பிரபல பிரமாணம் போல ஆகும் என்றும் மேலையார் செய்வனகள் என சொல்கிறார்கள்.

 திருப்பள்ளியெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக் கொண்டு போகும்படி மங்கள தீபம் வேண்டும்; நெடும் தூரத்திலேயே எங்கள் கூட்டங்களைக் கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக் கொண்டு போவதற்குக் கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும் போது பனி தலை மேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டு வேண்டும்?  இந்த உபகரணங்களை எல்லாம் நீ தந்து அருள வேண்டும் என்கிறார்கள். 

உன்னுடைய சிறிய வயிற்றிலே பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து செய்ய முடியாதவற்றையும் செய்யவல்ல உனக்கும் கூட அரியது என்ற ஒன்று உண்டோ என்று கேட்கிறார்கள்.


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.















ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

No comments:

Post a Comment