03 January 2025

19.பாசுரம் - குத்து விளக்கு

திருப்பாவை 19




குத்து விளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

      மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்

கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

      வைத்துக் கிடந்த மலர் மார்பா!வாய்திறவாய்,

மைத் தடங்கண்ணினாய்!நீ உன் மணாளனை

      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்

      தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art


பொருள்: 

குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா. 


விளக்கம் - 

கண்ணன் திருபள்ளிஎழுச்சி

திருப்பாவையின் மூன்று பாசுரங்களில் நப்பின்னை பிராட்டி துயிலெழுப்பப்படுகிறாள். அதாவது 18,19 மற்றும் 20வது பாசுரங்களில். அவற்றில் இது இரண்டாவது ஆகும். சென்ற பாசுரத்தில் நப்பின்னையை "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்றழைத்த ஆண்டாள், இப்பாசுரத்தில், "கொத்தலர் பூங்குழல் நப்பின்னை" என்றும், அடுத்த பாசுரத்தில் (முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று) "செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்கல் நப்பின்னை நங்காய்" என்றும் இளைய பிராட்டியைப் போற்றுகிறார்.

“மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்!” என்று கோபியர் இருக்க, நப்பின்னை பிராட்டியோ "கொத்தலர் பூங்குழலுடன்", "மைத்தடங்கண்ணினாய்" ஆக பரமனை இறுகப் பற்றிக் கொண்டு அவனை துயிலெழ விடாமல் செய்வது கண்டு கோபியர் பிராட்டியிடம் 'இது உன் இயல்புக்கு தகாது' என்று சொல்லி, கிருஷ்ண பக்தியில் மனம் உருகி நிற்கின்றனர்.

இருந்தும், கோபியர் இவ்வளவு வருத்தத்துடன், சற்று கடுமையாகவேப் பேசியும் கூட கதவு ஏன் திறக்கவில்லை ? சில சமயங்களில், பரமன், பிராட்டி என்று இருவருமே, அடியவரின் உதவிக்கு விரைந்து வர நினைத்து, யார் முதலில் செல்வது என்று அவர்களுக்கு இடையே போட்டியே வந்து விடுகிறது!!! அதனால் பக்தனுக்கு திருவருள் கிட்ட தாமதமாகி விடுகிறது. இப்போதும் யார் சென்று கதவைத் திறப்பது என்ற குழப்பத்தினால் தான் கதவு திறக்க இத்தனை தாமதம்.

சென்ற பாசுரத்தில் "சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்" என்று நப்பின்னை பிராட்டியை கோபியர் அழைத்தபோது, கண்ணன் தானே கதவைத் திறக்க அவசரமாக எழுந்து செல்ல முற்பட்டபோது கால் தடுக்கி, நப்பின்னை மேல் விழுந்து விடுகிறான்! அடியவர் குறை தீர்க்க பரமன் படும் அவசரம் நமக்குத் தெரியாதா என்ன? பரமனும் பிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, அப்படியே இருந்து விட கதவு திறக்கத் தாமதம்.


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.





ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் -  திருவிடந்தை





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய பாசுர பதிவு அருமை.பாசுரமும், அதன் விளக்கம், மற்றும் பொருள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. இறைவனை அவன் நாமாவளியை துதித்து என்றுமே அவனை நினைத்தபடி வாழ இறைவன் நமக்கருள வேண்டுமென இறைவனை மனதாற வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete