26 January 2025

நமது குடியரசு தினம் ....

  நமது  76ஆவது  குடியரசு தினம் .......!




குடியரசு தினம் என்பது ...

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகின்றோம்.

1930 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸால் செய்யப்பட்ட பூர்ண ஸ்வராஜ் பிரகடனம் செய்யப்பட்ட நாளும் இதே நாள்தான். அதே ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் கோரும் பிரகடனம் இது.

குடியரசு தின அணி வகுப்புக்கான தயாரிப்புகள் எல்லாம் முந்தைய ஆண்டு ஜூலை மாதமே தொடங்கிவிடும். ஒரு வருடம் முன்பு குடியரசு தின விழா அணி வகுப்பில் யாரெல்லாம் பங்கேற்பாளராக இருப்பார்கள் என்பது தெரிவிக்கப்படும். அணிவகுப்பு நடைபெறும் நாளில், அவர்கள் அதிகாலை 3 மணிக்குள் அணி வகுப்பு இடத்திற்கு வந்துவிடுவார்கள். இந்த அணி வகுப்புக்காக மட்டும் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், வேறொரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது ஒரு நாட்டின் அதிபர் குடியரசு தின அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

முதல் துப்பாக்கிச் சூடு நடந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அடுத்த துப்பாக்கிச் சூடு 52 வினாடிகளுக்குப் பிறகு சுடப்படும். துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் பீரங்கிகள் 1941 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை. 


ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்திற்கு பிரத்யேகமாக ஒரு கருப்பொருள் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசுத் துறைகள் அந்த கருப்பொருளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மாநில வாகனங்களை தயார் செய்யும். இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் காட்சிப் பொருளுக்கான கருப்பொருள் 'ஸ்வர்ணிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்.

 குடியரசு தின விழா நாளில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கும். ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து தொடங்கி, கர்தவ்ய பாதை வழியாக, இந்தியா கேட் வழியாக, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை இந்த அணி வகுப்பு அடையும்.

இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர் டாக்டர் பிஆர் அம்பேத்கர். அவர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசியலமைப்பு வழியாகவே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து துறைகளும் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

  
முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் (இப்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றன. இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,000 வீரர்களும் பங்கேற்றனர்.

  
குடியரசு தினத்தன்று, உயிர்களைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் விதிவிலக்கான துணிச்சலைக் காட்டிய குழந்தைகளை கௌரவிப்பதற்காக தேசிய துணிச்சல் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

 இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், நாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவரால் குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.







பாரத நாடு


பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு

சரணங்கள்

1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

2. தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

3. நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

5. வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

6. யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

7. ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

8. தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)




குடியரசு தினம் பற்றிய தகவல்கள் உள்ள  முந்தைய பதிவுகள் ....





வாழ்க பாரதம்!!!! 
ஜெய் ஹிந்த்!!!


 அன்புடன்
அனுபிரேம் 💖💖💖




2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நம் நாட்டின் குடியரசு தினத்தை ஒட்டிய நிகழ்வுகளை நன்றாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் . படிக்கவே அதன் பாரம்பரிய செயல்பாடுகள் பிரம்மாண்டமானதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீங்கள் தந்தவை அனைத்தையும் ரசித்துப் படித்தேன்.பதிவுக்கேற்ற மஹாகவி பாரதியார் அவர்களின் பாடலும் நன்று.
    வாழிய பாரதம். வந்தேமாதரம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாசித்தமைக்கு நன்றிகள் கமலா அக்கா

      Delete