திருப்பாவை 29
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
விளக்கம்
எம்பெருமான் அருள்வது
நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் சுருக்கமாக சொல்லிய ஆச்சியர்கள் இந்த பாட்டில் பிராப்ய பிராபகங்களை விவரிக்கிறார். பறை என்று அடைய வேண்டியதை முதலில் சொல்லி, தருவான் என்று பிறகு சாதனத்தை சொல்கிறார்கள்.
சென்ற பாடல்களில் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சியர்கள் அந்த பறையின் பொருளை விவரித்து விண்ணப்பம் செய்யும் பாசுரம், ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை காரணமாகக் கொண்டு வந்து புகுந்தோம். இதனை தவிர, எங்களுக்கு மிகவும் சிறந்தது என்று நாங்கள் நினைப்பது, உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் செய்வதுதான். இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிய முடியாது; வேறு ஒருவகையான விருப்பமும் எங்களுக்கு பிறவாத வண்ணம் நீயே அருள் புரிய வேணும்’ என்று அவன் காலைக் கட்டி நிற்கிறார்கள். ‘உன்னை அல்லால் எங்களுக்கு வேறு ஒருவரும் இல்லை’, ‘உன்னை அல்லால் வேறு ஒரு போக்கியமும் இல்லை’, ‘உன்னை அல்லால் வேறு ஒன்றும் உபாயம் ஆகபோவது இல்லை; என்று இருப்பவர்கள் நாங்கள் என்கிறார்கள். நித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் இருப்பைத் தவிர்த்து, இந்த இடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாமோ, எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாது போனால் உன்னுடைய இந்த அவதாரம் / இந்த பிறவி பயனற்றதாகும் என்கிறார்கள்.
எம்பெருமானுடைய பிறவி தோறும் சேர்ந்து பிறக்கும் பிராட்டியைப் போலே, தாங்களும் சேர்ந்து பிறந்து கைங்கர்யம் செய்ய நினைக்கிறார்கள். எங்களை ஆட்கொள்ள தோன்றிய உனக்கு நாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டாமா என்கிறார்கள்.
சரியான காலத்தில் உணர்வதும், பகவத் சந்நிதி ஏற வருகையும், சேவிக்கையும், விக்ரக அனுபவம் செய்வதும், அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும், ஆர்த்தி (விருப்பம்) பிரகாசிப்பிக்கையும், ஸ்வரூப விரோதிகளை போக்கி தர விண்ணப்பம் செய்வதும், கைங்கர்ய ருசி உடையார்க்கு சில ஸ்வரூப லட்சணங்கள் ஆகும் என்கிறார். இவற்றை எல்லாம் கண்ணன் திருமுகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள்.
29. சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
No comments:
Post a Comment