13 January 2025

30.பாசுரம் - வங்கக் கடல் கடைந்த

திருப்பாவை 30




  வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

     திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

     பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

     இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


நன்றி: Upasana Govindarajan Art


பொருள்: 

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.


விளக்கம் - பலஸ்ருதி

தங்களுடைய மநோரதம் நிறைவேற்ற பட்டதை பிற்காலத்திலே அந்த கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இந்த பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி மகிழப்பெறுவர் என்று சொல்லும் பாசுரம். ஆண்டாள் தான் கிருஷ்ணன் இருந்த காலத்தில் இருந்தது போல இந்த மார்கழி மாத நோன்பு நோற்றதாக இந்த பாடல்களை பாடினாலும், அவளுக்கு பலன் கிடைத்தது. “ஸம காலத்திலே அநுஷ்டித்தது ஒரு பாதியும், அநந்தர காலத்தில் அனுக்காரத்தாலே (செய்வதால்) ஒரு பாதியும், பிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்கும் என்று ஆறாயிரம் சொல்வது. திருவாய்பாடியிலும் பின்பு பரமபதம் சென்றால் அங்கும் எம்பெருமானின் திருவருள் பெற்று இன்புறுவர் என்று சொல்கிறார்.

விடியும் போதே எழுந்திருந்து முப்பது பாட்டையும் தப்பாமல் அநுஸந்தித்தல், சிறந்தது, முடியாதவர்கள் ‘சிற்றஞ்சிறுகாலை’ என்கிற பாட்டை அநுஸந்தித்தல் வேண்டும். அதுவும் முடியாதவர்கள் நாம் இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்வர்.  “நாம் இருந்த விருப்பை” என்றது அவர் இப்பிரபந்தத்தை அநுஸந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை சொல்கிறது.இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்குப் பலம் சொல்லி முடிக்கிறார். இந்த பிரபந்தத்தின் பயனைச் சொன்ன இந்தப் பாசுரம் திருநாமப் பாட்டென்றும், பல சுருதி என்றும் சொல்லப்பெறும். 


இப்பாடல் கூறும் திவ்யதேசம்  - 

30)வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).















ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺


No comments:

Post a Comment