குரு புஷ்யம்
நேற்று தை மாதம் பூச/புஷ்ய நட்சத்திரம். இந்த திருநட்சத்திரத்தன்று தான், எம்பெருமானாரின் "தானுகந்த திருமேனி", கந்தாடை ஆண்டான் ஸ்வாமியால் (கி.பி.1137)ஶ்ரீ பெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
எனவே இந்த நட்சத்திரம் குருபுஷ்யம் என்று கொண்டாடப்படுகிறது.
![]() |
கந்தாடையாண்டான் ஸ்ரீ ராமாநுஜரிடம், அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் சர்வகாலத்திலும், சர்வசேதநர்களுக்கும், சேவையாகும்படி, அவருடைய அர்ச்சாவிக்ரகத்தை எழுந்தருளப் பண்ண வேணும் என்று விண்ணப்பம் செய்தார்.
'அப்படியே செய்யும்' என்று உடையவர் நியமித்தருள, ஆண்டான் ஒரு சிறந்த சிற்பியின் மூலம்,
"ஆதியஞ்சோதி உருவை,
அங்கு வைத்து,இங்குப் பிறந்த" என்கிறபடியே தத்ரூபமாக சிற்பம் வடித்து,அந்த அர்ச்சாவிக்ரகத்தை எம்பெருமானார் திருமுன்பு எழுந்தருளச் செய்தார்.
உடையவர் திருக்கண் சாற்றி கடாட்சித்து, அந்த விக்ரகத்தில், தம்முடைய சர்வசக்தியும் பிரகாசிக்கும் படி காடாலிங்கனம் செய்து கொடுத்து, இந்த விக்ரகத்தை தை மாதம் குருபுஷ்யத்தில் பிரதிஷ்டை செய்யும் என்று திருமுகம் எழுதி, தினம் குறித்து அனுப்பினார்.
ஆண்டானும், உடையவரைச் சேவித்து, அந்த விக்ரகத்தை எழுந்தருள் வித்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் வந்து, குருபுஷ்ய நாளில் திருப்பிரதிஷ்டை செய்தார்.
ராமாநுஜரது மூலவர் விக்ரகத்தையும் செய்து, எழுந்தருளப் பண்ணினார்.
ஶ்ரீ பெரும்புதூரில் அந்த திருமேனி பிரதிஷ்டை செய்த நாளன்று, அங்கு ஶ்ரீரங்கத்தில் இருந்த ராமாநுஜர் திருமேனி தளர்ச்சியுற்று, பலஹீனம் அடைந்தார். (அவருடைய சக்தி அனைத்தும், ஶ்ரீ பெரும்புதூர் தானுகந்த திருமேனியில் இருந்ததால்.)
ஸ்ரீபெரும்புதூரில் குருபுஷ்யம் உற்சவம்:
ஸ்ரீபெரும்புதூரில் இந்த உற்சவம் மூன்று நாள் உற்சவமாக வைபவமாகக் கொண்டாடப் படுகிறது.
நேற்று காலை 5 மணிக்கு ஸ்வாமி விஸ்வரூபதரிசனம்.
காலை 8 மணிக்கு உடையவர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு கண்டருள்வார். மதியம் 11.30 மணிக்கு முன் மண்டபத்தில் திருமஞ்சனம்; திருமஞ்சனம் முடிந்து ஈரவாடைத் தீர்த்தம், முதலியாண்டான் (ராமாநுஜர் திருவடிகள்) சாதிக்கப்படும்.
பின்னர் உடையவருக்குத் திருமண் காப்பிடும் வைபவம் அற்புதமாக நடைபெறும்.
திருமண்பெட்டி, திருமண் இடும்போது, சாற்றிக்கொள்ளும் பவித்ர மாலைகள்,சிறப்பு அங்கவஸ்த்ரம், பெருமாள்/ஆசார்யர் திருவடி லச்சினைகள் வைத்துள்ள பெட்டியை திருப்பரிவட்ட மிராஸ்தார் என்னும் கைங்கர்யபரர்,தம் தலையில் தாங்கி எடுத்து வருவார்.
இன்னொரு அர்ச்சகர் தம் தலையையும்/வாயையும் பட்டு வஸ்த்ரத்தால் கட்டி மூடிக் கொண்டு, திருமண் காப்பு இடுவார். அவ்வமயம்,அத்யாபகர்கள் திருப்பாவை ஜீயருக்கு திருப்பாவை சேவிப்பார்கள்.
திருமண் இட்டு முடிந்ததும், திவ்யதேச எம்பெருமான்கள், ஆசார்யர்கள் திருக்ஹஸ்தம்/திருவடிகளின் லச்சினைகளை, எம்பெருமானார் திருமுகத்தில் ஒற்றி எடுப்பார்கள்.
இறுதியாக அவருக்குப் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்த ஆசார்யர், பெரியநம்பி ஸ்வாமியின் திருவடி லச்சினைகள் சாற்றப்படும். பிறகு பவித்ர மாலைகளைக் களைந்து மற்றெல்லாவற்றுடன் பெட்டியில் வைத்து திருப்பரிவட்ட மிராஸ்தார் எடுத்துச் செல்வார்.
பின்னர் நைவேத்யம் ஆகி, சாற்றுமறை முடிந்தபின் தீர்த்தம்/முதலியாண்டான் சாதிக்கப்படும்;
உடையவருக்கு இட்ட திருமண் சேஷம் அனைவருக்கும் வழங்கப்படும்.
பிரசாதங்கள் விநியோகிக்கப்படும்.
இரவு 6.30க்குமணிக்கு ஸ்ரீபாஷ்யகாரர்,சந்திர ப்ரபை வாகனத்தில் புறப்பாடு கண்டருள்வார்.
அத்யாபகர்கள்,இராமாநுச நூற்றந்தாதி சேவித்துக் கொண்டு வருவார்கள்.
இரவு 9.30 க்கு ஸ்ரீராமாநுஜருக்கு, பெருமாள் பஹுமானம்,மரியாதை ஆகும்.
எம்பார் அருளிய எம்பெருமானார் வடிவழகு பாசுரம்
பற்பம் எனத் திகழ் பைங்கழலுந்தண் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
எம்பார் இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திருமேனி அழகில் மிகவும் ஈடுபட்டு, அதை நாம் எல்லாரும் அனுபவிக்கும்படி வெளியிடுகிறார். அத்தோடு, தாம் எம்பெருமானாரின் வடிவழகில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பதால் தமக்கு ஒப்பானவர் ஆருமில்லை என்று துணிந்து அறிவிக்கிறார். இந்தப் பாசுரத்தைப் பெரிய பெருமாள் விஷயமாகத் திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் என்னும் அற்புத ப்ரபந்தத்தைப் போலே திருவடி முதல் திருமுடி வரை அனுபவிக்கும் விதமாக அமைத்துள்ளார்.
பற்பமெனத் திகழ் பைங்கழலுன்றன் பல்லவமே விரலும் – எம்பெருமானாருடைய திருவடிகளும் அவற்றில் இருக்கும் விரல்களும், தாமரைப் புஷ்பங்களும் அவற்றின் இதழ்களும் போல அமைந்துள்ளன.
பாவனமாகிய பைந்துரவாடை பதிந்த மருங்கழகும் – எம்பெருமானாருடைய திருத்துடைகளில் சேர்ந்திருக்கும் புனிதமான காஷாய (காவி) வஸ்த்ரம் அழகாக அமைந்துள்ளன.
முப்புரிநூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும் – எம்பெருமானாருடைய திருத்தோள்களில் சாற்றப்பட்டிருக்கும் மூன்று புரிகளையுடைய யஞ்ஜோபவீதமும் திருக்கையில் ஏந்திய மூன்று தண்டங்களையுடைய த்ரிதண்டமும் அழகாக அமைந்துள்ளன.
முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடும் முறுவல் நிலாவழகும் – எம்பெருமானாருடைய புன்முறுவலோடு இருக்கும் திருவதரங்களில் (உதடுகள்) ஆழ்வார்கள் மற்றும் முன்னோர்களின் திவ்யமான வார்த்தைகளே நிறைந்துள்ளன. இவையும் அழகாக அமைந்துள்ளன.
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும் – எம்பெருமானாருடைய கற்பக மரத்தைப் போன்ற கருணையைப் பொழிந்து கொண்டிருக்கும் தாமரை போன்ற கண்களும் அழகாக அமைந்துள்ளன.
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற் சிகைமுடியும் – காரி என்கிற சிற்றரசரின் திருக்குமாரரான நம்மாழ்வாருடைய திருவடிகளைத் தம் திருமுடியில் (தலையில்) சூடியுள்ளார். அங்கிருக்கும் மிகவும் அழகான சிகை (குட்மி) அழகாக உள்ளது.
எப்பொதுழும் எதிராசன் வடிவழகு என்னிதயத்துளதால் – இப்படிப்பட்ட எம்பெருமானாராகிய யதிகட்கு இறைவனின் திருமேனி அழகை நான் எப்பொழுதும் என் மனதில் சிந்தித்துக்கொண்டே இருப்பதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே – எனக்கு ஸமமாக யாரும் இல்லை என்பதை மூன்று முறை சொல்லி உறுதிப்படுத்துகிறேன்.
அதாவது எம்பெருமானாரின் திருமேனி அழகில் இடுபட்டிருப்பதால், தனக்கு எப்பொழ்தும் ஸத்வ குணம் நிறைந்திருக்கும் என்றும், அப்படி இருப்பதால் எப்பொழுதும் எம்பெருமான் மற்றும் எம்பெருமானார் விஷயத்தில் மட்டுமே ஈடுபட்டிருப்பார் என்றும் சொல்லி, இப்படித் தம்மைப்போலே இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை என்றும் “ஸாத்விக அஹங்காரத்துடன்” (ஸத்வ குணம் நிறைந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் பேருகப்புடன்) அறிவிக்கிறார். இதன் குறிக்கோளாவது, நாமும் இப்படி எம்பெருமானார் திருமேனி அழகிலேயே ஈடுபட்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்த.
![]() |
வாழி யதிராஜன்!
வாழி யதிராஜன்!!
அன்புடன்
அனுபிரேம்💖💖









No comments:
Post a Comment