26 February 2026

திருக்கச்சி நம்பிகள் - மாசி மிருகசீரிஷம்

 மாசி மிருகசீரிஷம் திருக்கச்சி நம்பிகள் அவதார நக்ஷத்திரம் திருநாள் இன்று 




வாழி திருநாமம்!

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே



திருக்கச்சி நம்பிகள்

திருநக்ஷத்ரம்: மாசி, மிருகசீரிஸம்
அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி
ஆசார்யன்: ஆளவந்தார்
சீடர்கள்: எம்பெருமானார்
முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி
படைப்புகள்: தேவராஜ அஷ்டகம்


மஹீசார க்ஷேத்ரம் என்கிற திருமழிசைக்கு அருகிலேயே பூவிருந்தவல்லி (இன்று இவ்வூர் பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது) என்று ஒரு ஊர் உள்ளது. அதற்கு முன்காலத்தில் இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது. 

பிறகு, திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது. 

இந்த திவ்யதேசத்தில், வைஸ்ய குலத்தைச் சேர்ந்த வீரராகவ செட்டியாருக்கும், கமலையார்க்கும் நான்காவது குமாரராய், கலி கடந்த 4110ல் (கி.பி.1009) ஸௌம்ய வருடம், மாசி மாதம், சுக்ல பக்ஷம்,தசமி திதி, வியாழக்கிழமை, மிருகசிரீஷ நக்ஷத்திரத்தில் திருக்கச்சி நம்பிகள் அவதாரம் செய்தார். 

இவரது இயற்பெயர் கஜேந்த்ர தாசர் என்பதாகும். தாம் கைங்கர்யம் செய்து வந்த பார்க்கவரான திருமழிசைஆழ்வாருடைய அருளாலே பிறந்ததால், இவர் தந்தையார் இவருக்கு "பார்க்கவப்ரியர்" என்றும் பெயரிட்டார்.  

இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராவார். 

ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், "பேரருளாள தாஸர்" என்பதாகும்.

கச்சியில் (காஞ்சிபுரம்) வாழ்ந்ததால், திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சீபூர்ணர் என்றும் அழைக்கப்பட்டார். 

காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்) கைங்கர்யம் செய்துவந்தவர்.

🙏🏼எம்பெருமானார் (இராமானுசர்) தம் ஆசார்யர்களில் ஒருவராக அபிமானிக்கப் பெற்றவரும், ஆளவந்தாருடைய அந்தரங்க சிஷ்யர்களில் ஒருவர் திருக்கச்சி நம்பிகள்.

🙏🏼பேரருளாளன் கட்டளைப்படி திருக்கோட்டியூர் நம்பிகளிடம் தம்மை மறைத்துக்கொண்டு, மாட்டுக்காரனாக இருந்து பாகவத அபிமானம் பெற்றார்.

🙏🏼நம்பிகள் ஒரு சமயம் இரவு நெடுநேரம் பெருமானுடன் வார்த்தைகளாடி விட்டு வெளியேவந்தார். மழை பெய்துகொண்டிருந்தது.  தம் சிஷ்யனான வரதனைக் கூப்பிட்டார் நம்பிகள். 

வரதன் அங்கு இல்லை. 

இரண்டுமுறை அழைத்தபின், ஸாக்ஷாத் காஞ்சி வரதராஜ பெருமானே, சிஷ்யன் வரதானாக வந்து, அவருக்குப் பாத ரக்ஷையை இட்டு, ஒரு கையில் தீவட்டியையும் (வெளிச்சம் தரும் நெருப்புப் பந்தம்), இன்னொரு கையில், குடையையும் பிடித்துக்கொண்டுபோய், அவரை மடத்தில் சேர்த்துவிட்டான்.

சற்று நேரத்திற்க்கெல்லாம், உண்மையான சிஷ்யன் வரதன் வந்து தான் உறங்கிவிட்டதாகவும், அதனால், தன்னை மன்னிக்கும்படியாகவும் நம்பிகளிடம் விண்ணப்பித்தபோது, இதை அறிந்த நம்பிகள், பேரருளாளனே இதைச் செய்தான் என்று வியந்து, ஒரே நேரத்தில் பெருமான் தன் அடியார் மீது வைத்துள்ள அன்பை நினைத்து உருகியும் இக்காரியத்தைப் பெருமான் போய் நமக்குச் செய்தானே என்று வேதனைப் பட்டும் கலங்கினார்.














இரண்டாம் திருவந்தாதி 

2276
என் நெஞ்சம் மேயான், என் சென்னியான் * தான் அவனை 
வன் நெஞ்சம் கீண்ட மணிவண்ணன் * -முன்னம் சேய் 
ஊழியான் ஊழி பெயர்த்தான் * உலகு ஏத்தும் 
ஆழியான், அத்தியூரான்.



2277

அத்தியூரான் ,புள்ளை ஊர்வான் * அணி மணியின் 
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் * - மூத்தீ 
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் 
இறை ஆவான் எங்கள் பிரான். 



திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்💞💞

No comments:

Post a Comment