20 July 2026

7. அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..

  பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...

 6.ஸ்ரீ  ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி  ரத யாத்திரை ..





7.ஸ்ரீ குண்டிச்சா கோவில்  அடப மண்டபத்தில் எழுந்தருளல் 

இரண்டு நாட்கள் திருத்தேர்களில் உலகெங்குமுள்ள பக்தர்களுக்கு சேவை சாதித்த ஸ்ரீ ஜகந்நாதப் பெருமாள், ஸ்ரீ பலபத்ரப் பெருமாள், ஸ்ரீ சுபத்ரா தேவி  , ஆகம மரபின்படி நடைபெற்ற புனித கைங்கர்யங்களின் பின், குண்டிச்சா மண்டபத்திற்குள் மங்களகரமாகப் பிரவேசம் செய்தனர்.


அதற்கு முன், திருக்கோயில் கைங்கர்யபரர்கள் சிம்ஹாசன மஜ்ஜனம், சந்த்யா தூபம், தோரா லாகி, புஷ்பாஞ்சலி முதலான நித்ய கைங்கர்யங்களை சமர்ப்பித்து, எம்பெருமான்களுக்கு அழகிய தாஹியா திருமுடி அலங்காரத்தைச் செய்து சேவை சாதித்தனர்.


பின்னர் நடைபெற்ற புனித கோடி பஹாண்டி சேவையில், முதலில் ஸ்ரீ சுதர்சனாழ்வார், தொடர்ந்து ஸ்ரீ பலபத்ரப் பெருமாள், ஸ்ரீ சுபத்ரா நாச்சியார், இறுதியாக ஸ்ரீ ஜகந்நாதப் பெருமாள் ஆகியோர் பேரானந்தத்துடன் அடப மண்டபம் (ஜன்ம வேதி) எழுந்தருளி அருள்பாலித்தனர்.

சுவாமியின்  அவதார ஸ்தலமாகப் போற்றப்படும் ஸ்ரீ குண்டிச்சா மண்டபத்திற்கு அடப மண்டப பிஜே உற்சவத்தின் மூலம் மங்களாசாசனங்களும் "ஜய ஜகந்நாத!" என்ற பக்த கோஷங்களும் முழங்க எழுந்தருளினார்கள்.


இந்த ஒன்பது நாட்களும் ஸ்ரீ குண்டிச்சா மண்டபத்திலேயே எம்பெருமான்களுக்கு நித்ய ஆராதனைகள், திருமஞ்சனம், நைவேத்யம் மற்றும் உற்சவ கைங்கர்யங்கள் அனைத்தும் விமரிசையாக நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் அடப அபடா (மகாபிரசாதம்) பெற்றுத் திருவருள் அனுபவிக்கும் அரிய பாக்கியத்தைப் பெறுகின்றனர்.


ஸ்ரீ ஜகந்நாத சம்பிரதாயத்தில், ஸ்ரீ குண்டிச்சா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை சேவிப்பது, எண்ணற்ற பிறவிகளில் சேர்த்த பாபங்களைப் போக்கி, பகவத் கடாக்ஷத்தைப் பெற்றுத் தரும் மகாபுண்ணியமாகக் கருதப்படுகிறது. 

இவ்வாறு ஒன்பது நாள் திவ்ய வாசத்தை அருளிச் செய்த பின்னர், பஹுடா யாத்திரை நாளில் ஸ்ரீ ஜகந்நாதப் பெருமாள், ஸ்ரீ பலபத்ரப் பெருமாள் மற்றும் ஸ்ரீ சுபத்ரா நாச்சியார் மீண்டும் ஸ்ரீமந்திரம் (ஜகந்நாதர் திருக்கோயில்) எழுந்தருளி, பக்தர்களுக்கு திருக்காட்சி அருளுவர்.







"ஜய ஜகந்நாத! ஜய பலபத்ர! ஜய சுபத்ரா நாச்சியார்!"



திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி - ஏழாம் பத்து 

7- 7 திருவுக்கும் திருவாகிய

திருவழுந்தூர்  -3



1614

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!
கார் வண்ணா! கடல்போல் ஒளி வண்ணா!
இறுத்திட்டு ஆன் விடை ஏழும், முன் வென்றாய்!
எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்!

பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணாப்
போகமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!

7.7.7


         

 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!




தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💙


No comments:

Post a Comment