22 July 2026

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .

  பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...

 6.ஸ்ரீ  ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி  ரத யாத்திரை ..

7.  அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .

" ஹேரா பஞ்சமி " உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து  நாட்களுக்கு பின்னர் வருகிறது.




 ஹேரா பஞ்சமி

 புரி ஜகந்நாத ரத யாத்திரையில் இந்த தினம் *மஹாலக்ஷ்மி* தாயாருக்காகக் கொண்டாடப்படுகிறது !

பகவான் ஜகந்நாதன், அண்ணன் பலராமன், தங்கை சுபத்திராவோடு தன்னுடைய அவதாரம் நிகழ்ந்த *குண்டீசா பவனம் எனப்படும் சுந்தராசலம்* செல்வதே ரத யாத்திரை !

மஹாலக்ஷ்மியிடம் அடுத்த நாளே வருவதாகச் சொல்லிவிட்டு செல்கிறார்.

 ஆனால் துவிதியை அன்று சென்ற ஜகந்நாதன் பஞ்சமி வரை வராததால், கலக்கமும், கோபமும், ஊடலும் கொண்டு தாயார் தன்னுடைய கோவிலை விட்டு குண்டீசா பவனத்திற்கு இருளடைந்த பிறகு செல்வாள். பகலில் சென்றால் ஊரில் உள்ளவர் எல்லாம் "இன்னும் உன் கணவன் வீடு திரும்பவில்லையா" என்று கேட்பார்களே... அதனால் தாயார் இரவில் செல்கிறாள்.


கோபத்தோடு கணவனைப் பார்க்க மஹாலக்ஷ்மி செல்வதால் இதற்கு *ஹேரா பஞ்சமி* என்று பெயர். ஹேரா என்றால் தரிசிக்க/பார்க்க என்று அர்த்தம். பஞ்சமி என்பது 5ம் நாள்.

தாயார் கோபத்துடன் ரதவீதி வழியாக தன்னுடைய சேவகர்களோடு குண்டீசா பவனம் செல்வாள். தாயாரின் கோபத்தை தன்னுடைய சேவகர்கள் மூலம் அறிந்த ஜகந்நாதன், பயத்தில்  குண்டீசா பவனத்தின் வாயில்கதவை அடைக்கச் சொல்லிவிடுவான்.

உள்ளே நுழையமுடியாத கோபத்தில்,மஹாலக்ஷ்மி கிண்டலாக *ஆமாம் ! அண்ணன், தங்கை எல்லாம் ரொம்ப முக்கியம்; மனைவி அவ்வளவு முக்கியமல்ல !* எப்படியும் திரும்ப நீலாசலம் வரவேண்டுமே, அப்போது பார்த்துக்கொள்கிறேன் என்று வேகமாகக் கோவிலுக்குத் திரும்புவாள்.

குண்டீசா வாயிலில் நிற்கும் ஜகந்நாதனின் கருடத்வஜ ரதத்தைப் பார்த்தவுடன், கோபம் அதிகமாகி, தன் சேவகர்களை அந்த ரதத்தின் ஒரு பகுதியை சிதைக்கச் சொல்வாள். 

பிறகு ரதவீதி வழியாகச் சென்றால், ஊரில் எல்லோரும் கேள்வி கேட்பரே என்று *ஹேரா கோஹிரி சஹி* என்னும் வேறு குறுக்கு வழியில் தன்னுடைய கோயிலுக்கு வந்துவிடுவாள் !


கபிலேந்திர தேவன் என்னும் ராஜாவின் காலத்திற்கு முன் இந்த வைபவம், பிராமணர்களின் வேத கோஷத்தோடு மட்டுமே நடந்தது.

ஆனால் ராஜா இந்த வைபவம் எல்லோரும் அனுபவிக்கும்படியாக, ஒரு தங்க மஹாலக்ஷ்மி மூர்த்தியை எழுந்தருளப் பண்ணி, கோயிலிலிருந்து குண்டீசா பவனம் செல்லுதல் போன்று மாற்றியமைத்தார்.

அந்த உற்சவ மஹாலக்ஷ்மியை *சுவர்ண லக்ஷ்மி* ( _ஒடிசா பக்தர்கள் - சுபர்ண மஹாலக்ஷ்மி என்பர்_) என்றழைப்பர். 

ஒரு விதத்தில் மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் இது ! 


கடந்த திங்கள் அன்று புரியில் நடந்த ஹேரா பஞ்சமி நிகழ்வின் படங்கள் கீழே ...















"ஜய ஜகந்நாத! ஜய பலபத்ர! ஜய சுபத்ரா நாச்சியார்!"


திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி - ஏழாம் பத்து 

7- 7 திருவுக்கும் திருவாகிய

திருவழுந்தூர்  -3



1615

நெடியானே! கடி ஆர் கலி நம்பீ!
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை
கடியார் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த அக் காவலைப் பிழைத்து

குடி போந்து, உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
கூறை, சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி ஆண்டு கொள் எந்தாய்!
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!

7.7.8


         

 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!




தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💙

No comments:

Post a Comment