12 March 2022

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்

 நேற்று சுவாமி திருக்கச்சி நம்பிகள் அவதார திருநட்சத்திரம் .....மாசியில்  மிருகசீரிஸம்













வாழி திருநாமம்!

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே







 திருக்கச்சி நம்பிகள்

திருநக்ஷத்ரம்: மாசி, மிருகசீரிஸம்
அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி
ஆசார்யன்: ஆளவந்தார்
சீடர்கள்: எம்பெருமானார்
முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி
படைப்புகள்: தேவராஜ அஷ்டகம்

திருக்கச்சி நம்பிகள் கலி 4110 (ஆங்கில ஆண்டு 1009) ஆம் ஆண்டு சௌம்ய வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் தசமி திதி வியாழக்கிழமை மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் சென்னைக்கு அருகாமையில் உள்ள , பூவிருந்தவல்லியில் வைஸ்ய குலத்தை சேர்ந்த வீரராகவ செட்டியாருக்கும் கமலை தாயாருக்கும் நான்காவது   குமாரராய் " ஸேனை முதலியார் " அம்சமாக அவதரித்து, பார்கவப்பிரியர், கஜேந்திரதாசர்  என்ற திருநாமங்களுடன் அழைக்கப்பட்டு வந்தார்.


இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் வல்லவர்.










ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள்:

1.தேவப்பெருமாள் நியமனப்படி, நம்பிகள் ஸ்ரீரங்கம் வந்து, பெரிய நம்பிகளின் புருஷஹாரத்தில் ஸ்ரீஆளவந்தாரை ஆசார்யராக ஏற்று பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து கொண்டார். ஆளவந்தார் அவருக்கு "பேரருளாள தாசர்" என்று தாஸ்ய நாமம் சூட்டினார்.

2.தேவப்பெருமாள் ஒரு சேவகன் போன்று, திருக்கச்சி நம்பிகளுக்கு கைங்கர்யங்கள் செய்தது கண்டு மனம் பதைத்து, காஞ்சியை விட்டே சென்று விடலாம் என்று முடிவு  செய்து, திருமலை சென்றார்.  
திருவேங்கடவருக்கு ஆலவட்டக் கைஙகர்யம் செய்ய முடியாமையால், ஸ்ரீரங்கம் வந்தார். அரங்கர் தாம் ஏற்கனவே இரண்டு காவேரிகளுக்கு நடுவில் பள்ளிகொண்டு, குளிர்ச்சியாக இருப்பதால், ஆலவட்டம் வீசவேண்டாம் என்று கூறிவிட்டார். 

கைங்கர்யம் கிடைக்காத நம்பிகள் தம் ஆசார்யர் திருமாளிகையிலேயே தங்கி, அவருக்கு அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்து வந்தார். தம் ஆருயிர் பக்தனைப் பிரிந்த தேவப்பெருமாள் ஆளவந்தார் கனவில் தோன்றி, நம்பியை உடனே காஞ்சிபுரம் அனுப்பிவைக்கும்படி உரைத்தார். ஆளவந்தாரும் அவ்வாறே நம்பியை உடனே காஞ்சிபுரம் செல்லுமாறு உரைத்தார்.

ஆசார்யர் நியமனத்தை மீறமுடியாத திருக்கச்சி நம்பி,காஞ்சிபுரம் புறப்பட்டார்.

3. ஸ்ரீராமாநுஜரை ஆளவந்தாருக்கு அடையாளம் காட்டியவர் திருக்கச்சி நம்பி. 
அப்போது தான் ஆளவந்தார் ராமாநுஜரை, "ஆம்; முதல்வன்" என்று கொண்டாடினார்.
யாதவப் பிரகாசரிடம் பாடம் கேட்டு வந்த, இளையாழ்வாரைத் திருத்திப் பணிகொண்டு, தேவப்பெருமாளிடம் "ஆறுவார்த்தை" பெற்றருளி, பெருமாள் மூலம் அவரை 'எதிராஜர்' ஆக்கி, ராமாநுஜர் ஸ்ரீரங்கம் எழுந்தருள்வதற்கான ஆயத்தங்களை எல்லாம் செய்தார் திருக்கச்சி நம்பிகள்.

4. ஸ்ரீரங்கத்தில்,திருக்கச்சி நம்பிகள் சந்திதி, கருட மண்டபத்தில் நுழைந்தவுடன், வலப்புறத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.திருக்கச்சி நம்பிகளுக்கும்,அவர் ஆராதித்த தேவப்பெருமாளுக்கும்,ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்கும் தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன.


தேவராஜ அஷ்டகம்
         
திருக்கச்சி நம்பிகள் அருளிச் செய்த ஒரே கிரந்தம் தேவராஜ அஷ்டகம்- 
8 ஸ்லோகங்களைக் கொண்டது. 

தம் ஆசார்யரும், ஸ்வாமி ராமாநுஜரின் பரமாசார்யருமான ஸ்ரீஆளவந்தார் அருளிய "ஸ்தோத்ர ரத்னம்" என்னும் கிரந்தத்தின் ஸாரத்தைக் கொண்டு நித்யாநுஸந்தேமாயும், சுலபமாயும், சுக்ரமாயும், சர்வவர்ணார்ஹமாயும் ஆன தேவராஜ அஷ்டகம் என்னும் ஸ்தோத்ர மாலையை அருளிச்செய்தார். 

ஸ்லோகம்-1:
"நமஸ்தே! ஹஸ்திசைலேச!
ஸ்ரீமந் அம்புஜலோசன;
சரணம்த்வாம் ப்ரபன்னோஸ்மி
ப்ரணதார்த்திஹரா அச்யுத!!"

ஸ்ரீபெருந்தேவித்தாயாருக்கு, வல்லபன்ஆனவனே, அத்திகிரி என்னும் குன்றின் அதிபதியே!

அரவிந்தநிவாஸிநியான பெருந்தேவித் தாயாரையும், அவருடைய ஆசனமான தாமரையையும் பார்த்துப் பார்த்து, அவர் உருவத்தைத் தம் கண்மலர்களில்கொண்டவனே!

உன் திருவடிகளில் சரணமடைந்தோர் அனைவருடைய வருத்தங்களையும் நாசம் செய்பவனே! உன்னை அண்டியவர்களை விடாதவனே! அச்சுதனாய், ப்ராப்யனாய்,என் எதிரே அர்ச்சாவதரமாய், ஸுலபனாய் நிற்கிற உன்னையே- சரணமாக- உபாயமாகப் பற்றுகிறேன்.

நின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.


(-அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் ...  -  பாமரரும் புரிந்துக் கொள்ளும் வகையில்  இப்பதிவை தந்தருளிய ஸ்வாமிக்கு நன்றிகள் பல ) 











இரண்டாம் திருவந்தாதி 

2276
என் நெஞ்சம் மேயான், என் சென்னியான் * தான் அவனை 
வன் நெஞ்சம் கீண்ட மணிவண்ணன் * -முன்னம் சேய் 
ஊழியான் ஊழி பெயர்த்தான் * உலகு ஏத்தும் 
ஆழியான், அத்தியூரான்.



2277

அத்தியூரான் ,புள்ளை ஊர்வான் * அணி மணியின் 
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் * - மூத்தீ 
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் 
இறை ஆவான் எங்கள் பிரான். 



ஓம் நமோ நாராயணாய நம!!
திருக்கச்சிநம்பிகள் திருவடிகளே சரணம் !!



அன்புடன்
அனுபிரேம்..

1 comment:

  1. திருக்கச்சி நம்பிகள் தெரியும் ஆனால் தேவராஜ அஷ்டகம் பற்றி எல்லாம் தெரியாது அனு. இப்போதுதான் அறிகிறேன்.

    கீதா

    ReplyDelete