ஸ்ரீ ரங்கநாயகித் தாயாரும் நம்பெருமாளும் சேர்த்தி சேவை...
பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)
பங்கயப் பூவிற் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே
இருபத் தஞ்சுட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே
பங்குனி உத்திரம்...
பிராட்டியாரோடு சேர்ந்த பரந்தாமன்தான் பரம்பொருள்.
எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தால் கூட, இந்த ஒரு நாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டிற்கொருமுறை, அருள்பாலிப்பது அற்புதமான ஒரு நிகழ்வு.
இந்த நாள் ஒரு இனிய நாள்..! பரிவு பொங்கும் பெருநாள்..! கற்பகத்தரு போன்று வேண்டியது நல்கும் நன்னாள்..!
இதனை நன்கறிந்தவர் உடையவர். இந்நாளில்தான் அவர்தாம் இயற்றிய, ஸ்ரீரங்க்கத்யம், வைகுண்டகத்யம், சரணாகதி கத்யம் ஆகிய ஒப்பற்ற மூன்று இரத்தின பாமாலைகளை திவ்யதம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, திருப்பாதங்கள் சரணடைந்து, தமக்கும், அவர் அடியார்களாகிய நம் அனைவருக்கும் பரமபதம் பிரார்த்தித்து, கிடைக்கப்பெற்றார்.
இந்த உற்சவமானது, பெரிய பெருமாளின் அவதார நட்சத்திரமான ரோஹிணியில் தொடங்குகின்றது.
கமலவல்லித் தாயாரின் அவதார நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் (6ம் திருநாள்) அவருடன் சேர்த்தி கண்டருளி அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தன்று (9ம் திருநாள்) பெரியபிராட்டியாரோடு சேர்த்தி கண்டருளியும், தம்மை தரிசிப்பவர்களுக்கெல்லாம், அதீத வாஞ்சையுடனும், அன்பு மிகுந்து அருள்பாலிக்கும், வேண்டிய வரமெல்லாம் நல்கும், ஒரு கருணைமிக்க உற்சவம்.
சேர்த்தி திருமஞ்சனம் -
தாயார் சந்நிதி சேர்த்தி மண்டபத்தில் பகல் 2 மணி முதல், இரவு 11 மணி வரை பெரியபிராட்டியுடன் சேர்த்தி உற்சவம்.
இரவு 11 மணிக்கு கத்ய த்ரயம் சேவிப்பார்கள். அது முடிந்ததும் 12 மணிக்கு உடையவர் சந்நிதியில் சாற்றுமுறை, தீர்த்தம், முதலியாண்டான், பிரசாதம்.
12 மணிக்கு மேல் அதிகாலை வரை நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் 18 முறை திருமஞ்சனம் நடைபெறும்.
(உடையவர் திருக்கோஷ்டியூருக்கு 18 முறை சென்றதைக் குறிக்கும் வண்ணம்).
அதன்பின் பிராட்டி தாயார் சந்நிதிக்கு எழுந்தருள்வார்.
முக நூலில் இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
நான்முகன் திருவந்தாதி
இன்று ஆக, நாளையே ஆக * இனிச் சிறிதும்
நின்று ஆக நின் அருள் என்பாலதே * - நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் * நாரணனே!
நீ என்னை அன்றி இலை.
7 2388
இலை துணை மற்று, என் நெஞ்சே! ஈசனை வென்ற *
சிலை கொண்ட செங் கண் மால் சேரா * - குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடழித்த *
கூர் அம்பன் அல்லால், குறை.
8 2389
குறை கொண்டு, நான்முகன் குண்டிகை நீர் பெய்து *
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி * - கறைகொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் *
அண்டத்தான் சேவடியை, ஆங்கு.
9 2390
ஆங்கு ஆரவாரம், அதுகேட்டு * அழல் உமிழும்
பூங்கார் அரவு அணையான் பொன் மேனி * - யாம் காண
வல்லமே அல்லமே? மா மலரான்,வார் சடையான் *
வல்லரே அல்லரே? வாழ்த்து !
10 2391
பெருமாள் திருவடிகளே சரணம் !!
தாயார் திருவடிகளே சரணம் !!
அன்புடன்
அனுபிரேம்
படங்களும் சேர்த்தி திருமஞ்சன விவரங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது அனு.
ReplyDeleteகீதா
சேர்த்தி படங்களும், தகவல்களும் சிறப்பு.
ReplyDelete