வாழ்க வளமுடன் ...
முந்தைய பதிவில் வண்டலூர் பூங்கா பற்றி பார்த்தோம் ...இன்று அதன் வரலாறு காணலாம் ..
ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவிற்கு அடித்தளம், ஒரு தனிநபரின் முயற்சி .. ..அந்த சாதனை மனிதர் தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் (Edward Green Balfour).
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த பால்ஃபருக்கு, குடும்ப நண்பர் மூலம் மெட்ராசில் துணை சர்ஜன் வேலை கிடைத்தது. இதற்காக 1834 இல் மெட்ராஸ் புறப்பட்ட பால்ஃபர், வழியில் மொரீஷியஸ் சென்றார். இந்த பயணம் அவரது வாழ்வை மட்டுமின்றி மெட்ராசின் வாழ்வையும் மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது. அங்கு மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் களையிழந்து கிடந்தது பால்ஃபரின் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
1836இல் இந்தியாவில் கால்பதித்த பால்ஃபர், மருத்துவராக நாடு முழுவதும் சுற்றினார். இந்த பயணத்தின்போது இந்தி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளை ஆர்வமாக கற்றுக் கொண்டார். இதனால் உள்ளூர் மக்களுடன் பேசிப் பழக வசதியாக இருக்கும் எனக் கருதி, இவரை சிறிய கிராமப் பகுதிகளில் பணியாற்ற அனுப்பினர். இதுமட்டுமின்றி அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் அடிக்கடி பால்ஃபர் பயன்பட்டு வந்தார்.
இந்த பணிக்கு இடையில், பால்ஃபர் இந்தியா குறித்த பல்வேறு புள்ளிவிவரங்களைத் திரட்டினார். இவற்றைக் கொண்டு, வெவ்வேறு தட்பவெட்ப நிலையில் படையினரின் உடல்நலனைப் பேணுவது எப்படி? பருவ மாற்றத்தில் மரங்களின் பங்கு என்ன? என்பது போன்ற கட்டுரைகளை வெளியிட்டார். அவர் ஒரு மருத்துவராகவும் இருந்ததால், பருவநிலை மாற்றம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவாக விளக்க முடிந்தது.
இதுமட்டுமின்றி மொரீஷியசில் பார்த்ததை வைத்து, மரங்கள் அழிக்கப்பட்டால் அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அரசுக்கு தெரியப்படுத்தினார். ஏற்கனவே பல பஞ்சங்களைப் பார்த்து பதறிப் போயிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பால்ஃபரின் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்ற ஒன்று தொடங்கப்பட்டது.
சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பால்ஃபர், ஒரு புலி, ஒரு சிறுத்தை என இரண்டு விலங்குகளை அதே வளாகத்தில் கூண்டில் பார்வைக்கு வைத்தார். இந்த விலங்குகளைப் பார்க்க வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இன்னும் சில விலங்குகளை பார்வைக்கு வைத்ததும், கூட்டம் அதிகரித்தது. விலங்குகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது, அருங்காட்சியகத்திற்கு வரும் கூட்டமும் அதிகரிக்கிறது என்பதை கணக்கெடுப்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட பால்ஃபர், மெட்ராசில் உயிரியல் பூங்கா ஒன்று வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தார். இப்படித்தான் 1855இல் ‘மெட்ராஸ் உயிரியல் பூங்கா’ தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் வனவிலங்கு பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தின் கடைசி நவாப்பான குலாம் கவுஸ் கானுடன் (Nawab Ghulam Ghouse Khan) பால்ஃபருக்கு நல்ல நட்பு இருந்தது. இதைப் பயன்படுத்தி நவாப்பிடம் இருந்த காட்டு விலங்குகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். நவாப்பும் அனுப்பி வைக்க, 1856ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்தில் 360 விலங்குகள் இருந்தன. மிகப்பெரிய நீர்வாழ்விலங்குகள் காட்சியகம் (Aquarium) ஒன்றும் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தது.
பின்னர் மாநகர சபை விலங்கினக் காட்சிசாலைக்கு பொறுப்பேற்றதும், 1861ஆம் ஆண்டு, தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் இருக்கும் இடத்திற்கு மெட்ராஸ் உயிரியல் பூங்கா இடம்மாறியது. அப்போது இங்கு 116 ஏக்கரில் பீப்பிள்ஸ் பார்க் இருந்தது. இதன் ஒருபகுதியைத் தான் விலங்கியல் காட்சியகமாக மாற்றினர். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்கா இங்குதான் இருந்தது. மூர் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் இந்த விலங்குகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர், கட்டணமெல்லாம் கிடையாது.
1975இல் பூங்காவும் வளர்ந்துவிட்டது, மெட்ராசும் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. எனவே பூங்காவை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் நகரின் மையப் பகுதியில் இதற்கு மேல் இடம் ஒதுக்க முடியாததால், இங்கிருந்த வனவிலங்குகள் எல்லோரும் மெகா ஊர்வலமாகப் புறப்பட்டு புறநகர் பகுதியான வண்டலூருக்கு சென்றனர்.
1985 ஜூலை 24ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை முறைப்படி திறந்துவைத்தார். இப்படித்தான் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை, இன்று 1200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
வரலாறு தெரிந்து கொண்டோம்.
ReplyDeleteசூப்பர் அனு! முதல்ல ஒன்று இரண்டு விலங்குகளைப் பார்க்கவே மக்கள் கூட்டம் அதுவும் தூரத்திலிருந்து!!! முதல் வனவிலங்கு பூங்கா என்பது தெரியும் வரலாறும் கொஞ்சம் தெரியும். மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டேன் அனு. உங்கள் பதிவின் வழி.
ReplyDeleteபடங்கள் நல்லாருக்கு. வீடியோக்களும் நல்லாருக்கு
கீதா
தகவல்கள் அனைத்தும் சிறப்பு. வண்டலூரில் தான் முதலிலிருந்தே இருப்பதாக நினைத்தேன். தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete