01 March 2022

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருமயிலாப்பூர்

 அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் திருமயிலாப்பூர்....







மூலவர்  :  கபாலீசுவரர்

அம்மன்/தாயார்  :  கற்பகாம்பாள்

தல விருட்சம்  :  புன்னை மரம்

தீர்த்தம்  :  கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம், திருக்குளம்

ஆகமம்/பூஜை :  காமீகம்

புராண பெயர்  :  கபாலீச்சரம், திருமயிலாப்பூர்

ஊர்  :  மயிலாப்பூர்







ஸ்தலபெருமை - 

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். 

முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம்.

 பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். 

நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம்.

 சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். 

இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். 

திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். 

பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். .



தலப் பெயர் வரலாறு:-  

சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். அவரின் ஆணவத்தை அழிக்க  நினைத்த சிவபெருமான் அவரின் ஒரு கபாலத்தை  (தலையை ) கிள்ளி கையில் ஏந்தி கொண்டார்.  எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.





தல வரலாறு:- 

பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும் படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். 

அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டார். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டு வர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தார். சிவனை வணங்கி விமோசனம் பெற்றார். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.




இத்தலத்தில் புன்னை மரம் தல விருட்சமாக இருக்கிறது. 

அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். 

இதன் அடிப்படையில் புன்னை மரம் தலவிருட்சமாக அமைந்தது.

 பிரகாரத்தில் உள்ள இம்மரத்தை ஒட்டி, சிவன் சன்னதி இருக்கிறது. இவரைப் “புன்னைவனநாதர்” என்றும், “ஆதிகபாலீஸ்வரர்” என்றும் அழைக்கிறார்கள். 




இவருக்கு பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. 

சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தின்போது அம்பிகை இச்சன்னதிக்கு எழுந்தருள்கிறாள். அப்போது அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட வைபவமும், பின்பு நிச்சயதார்த்தம், திருக்கல்யாணம் மற்றும் அம்மி மிதித்தல் சடங்கு நடக்கிறது.


சீர்த்திமிகு சிங்காரவேலன் - 

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இத்தலத்தில் சிவனை வேண்டித் தவமிருந்தார். 

சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து ஆயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். 

இதனால் மகிழ்ந்த இந்திரன், தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அப்போது அவனது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. 

இதன் அடிப்படையில் இங்கு வள்ளி, தெய்வானை இருவரும் யானை மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். முருகப்பெருமான், மேற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு.





அசுர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகன், மிகவும் அழகாக இருப்பதால் இவரை, சிங்காரவேலர் என்று அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரை வணங்கித் திருப்புகழ் பாடியிருக்கிறார்.




உயிா்த்தெழுந்த  பூம்பாவை


மாட வீதிகள் அழகாக அமைந்த நான்மாடத் திருமயிலையில், அக்காலத்தில் சிவநேசா் என்ற வணிகா் வாழ்ந்து வந்தாா். மிகச் சிறந்த சிவ பக்தரான இவருக்குப் பூம்பாவை என்றொரு மகள். அழகிலும் அறிவிலும் சிறந்த பூம்பாவை சிவபக்தியிலும் சிறந்து விளங்கினாள். தன் மகளை சிவ பக்தியில் திளைக்கும் ஒரு பக்தனுக்கே திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தாா் சிவநேசா்.

ஒரு நாள் பொழுதுபுலரும் வேளையில் சிவபூஜைக்காக மலா் பறிக்க நந்தவனத்திற்குச் சென்றாள் பூம்பாவை. விதியின் வசத்தால் ஒரு கொடிய நாகம் தீண்டி அவ்விடத்திலேயே மரணமடைந்தாள் பூம்பாவை. தன் மகளுக்கு நோ்ந்த நிலையை எண்ணி சொல்லொணாத் துயரமடைந்த சிவநேசா் தன் மகளின் அஸ்தியை ஒரு குடத்தில் இட்டு பூஜித்து வந்தாா்.

நாட்கள் கழிந்தன. அன்னை ஆதிசக்தி அன்போடு அளித்த பால் உண்டு இளம்பிராயத்திலேயே முத்தான செந்தமிழில் சத்தான பதிகங்கள் அருளிய “ஞானசம்பந்தர்” ஒற்றியூருடைய ஈசனைப்பாட வந்திருப்பதை அறிந்தாா் சிவநேசா்.

உடனே திருவொற்றியூா் புறப்பட்ட சிவநேசா், ஞானசம்பந்தப் பெருமானைத் திருமயிலைக்கு வரவேண்டுமென விரும்பி அழைக்க, சம்பந்தரும் அவரது அழைப்பை ஏற்றாா்.

திருமயிலை வந்த ஞானசம்பந்தருக்கு பூரணகும்ப மரியாதைகளுட ன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகிழ்ந்த சம்பந்தா், சிவநேசரின் உள்மனதில் ஏதோ ஒரு சோகம் இழையோடுவதை அறிந்தாா். சிவ நேசச் செட்டியாரும் தன் மகளுக்கு நோ்ந்த கதியை சோகத்துடன் விளக்கியதோடு, அவளது அஸ்தியைக் கலசத்தில் வைத்துப் பூஜிப்பதையும் சம்பந்தப்பெருமானிடம் தெரிவித்தாா்.


மனம் கலங்கிய ஞானசம்பந்தரும் மயிலையில் அருளும் கபாலீஸ்வரரையும் அன்னை கற்பகாம்பாளையும் வணங்கிய பின் அஸ்திக் கலசத்தைக் கொண்டுவர சிவநேசரிடம் கூறினாா்.

ஊா் மக்கள் நடக்க இருப்பதைக் காணும் ஆவலோடு ஒன்று கூடித் திரண்டிருக்க அஸ்திக்கலயம் மாலை மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு சம்பந்தப் பெருமானின் திருமுன்பு வைக்கப்பட்டது.

சிறிது நேரம் தியானித்த ஞான சம்பந்தா் அக்குடத்தைப் பாா்த்து “பூம்பாவாய்” என அழைத்து

 “மக்கள் பிறந்ததன் பயன், 

சிவனடியாா்களுக்கு அமுது செய்வித்தலும்,

 இறைவரது நல்விழாக் காண்பதுமே என்பது உண்மையானால்

 நீ உலகத்தவா் முன்பாக உயிா் பெற்று வருக,” எனக் கூறினாா்.


“மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமா்ந்தான்”

என்ற  பதிகத்தைப் பாடினாா் ஞானசம்பந்தப் பெருமான்.


முதல் பதிகம் பாடி முடித்தவுடன் சிவநேசரின் மகள் “பூம்பாவை” உயிா்பெற்று எழுந்தாள். 

எட்டாவது பதிகம் பாடி முடித்ததும் பூம்பாவை பன்னிரண்டு வயது நிரம்பிய பெண்ணாக மாறினாள்.

 பத்தாவது பதிகம் பாடியதும் அழகு நிறைந்த மங்கையாகத் தோன்றினாள் பூம்பாவை.

அடியவா் கூட்டம் “சிவ சிவ” என்று ஆா்ப்பரித்தது. 

தேவா்கள் விண்ணி லிருந்து பூமழை பொழிந்தனா்.

 ஞானசம்பந்தரின் அதீத சக்தியையும் இறைவனது திருக்கருணையையும் உணா்ந்த அடியவா்கள் அவரை நிலம் கிடந்து வணங்கினா். 

பூம்பாவையும் சம்பந்தரின் திருவடிகளில் பணிந்து வணங்கினாள்.

சம்பந்தப் பெருமானை வணங்கிய சிவநேசா், தன் மகள் பூம்பாவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாா். 

சிவநேசரை நோக்கிய சம்பந்தப் பெருமான், “அன்பரே! பாம்பு கடித்து இறந்த தங்கள் மகள் ஈசனின் கருணையால் மீண்டும் உயிா்த்தெழுந்தாள். ஆதலால் இவள் எனக்கு மகளாவாள்,” என்று கூறித் தன் திருத்தல யாத்திரையைத் தொடா்ந்தாா்.


தமிழ் மொழியின் மந்திர ஆற்றல் மூலம் எலும்பையும் உயிா்பெறச் செய்யலாம் என்ற அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலை கபாலீஸ்வரா் திருத்தலமாகும்.





வாயிலாா் நாயனாா் -

  “வாயிலாா் நாயனாா்” திருஅவதாரம் செய்த திருத்தலம் திருமயிலை ஆகும். இவா் மயிலை கபாலீஸ்வரா் திருக்கோயிலில்தான் வாழ்ந்தாா்.



 “வெளித்தோற்றத்தில் நெற்றி நிறைய நீறு பூசி, பூஜை புனஸ்காரங்கள் செய்வது அவசியமில்லை. மனதார சதாசா்வ காலமும் இறைவனை தியானிப்பதே உண்மையான பக்தி” என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவா் வாயிலாா் நாயனாா்.

எனவே, இவா் உள்ளத்தில் ஈசனுக்குக் கோயில் எழுப்பினாா். 

அந்தக் கோயிலில் அறிவால் விளக்கேற்றினாா். 

ஆனந்தம் பொங்க நீராட்டி மகிழ்ந்தாா். 

அளவிடற்கரிய அன்பை அமுதமாக ஊட்டினாா். 

இதுவே வாயிலாா் நாயனாரின் சிவத் தொண்டு. 

அன்பினால் அகம் குழைந்து ஈசனை வணங்கியதால் நாயன்மாா்களில் ஒருவராக வணங்கப்படுகின்றாா் வாயிலாா் நாயனாா். பெரிய புராணம் அருளிய சேக்கிழாா் பெருமான் வாயிலாா் நாயனாரைப்பற்றி அருளிய  பாடல் ....


மறவாமை யால்அமைத்த  மனக்கோயில் உள்ளிருத்தி

உறவாதி தனையுணரும்  ஒளிவிளக்குச் சுடரேற்றி

இறவாத ஆனந்தம்  எனுந்திருமஞ் சனமாட்டி

அறவாணர்க் கன்பென்னும்  அமுதமைத்துஅர்ச் சனைசெய்வார்


இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய்.






இத்தலத்தில் வாயிலாா் நாயனாருக்குத் தனிச்சந்நிதி அமைந்துள்ளது.


சில வரலாற்று நிகழ்வுகள் -

மயிலை கபாலீஸ்வரா் திருக்கோயில் தற்போது சாந்தோம் தேவாலயம் உள்ள இடத்தில் முற்காலத்தில் இருந்துள்ளது. இத்தலம் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னாகளால் நிாமாணிக்கப்பட்டதாக இத்தலத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கி.பி. 1516 ல் மயிலாப்பூா் போா்த்துகீசியா்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவா்கள் கபாலீஸ்வரா் ஆலயத்தைத் தகா்த்துக் கோட்டையும் தங்கள் தொழுகைக்கு இடத்தையும் கட்டிக்கொண்டனா்.

போா்த்துகீசியா்கள் இந்த ஆலயத்தை அழித்த செய்தியைக் கேள்விப்பட்ட விஜயநகரப் பேரரசர் சதாசிவராயரின் தலைமை அமைச்சா் இராமராயா் கி.பி.1558 ல் சாந்தோம் மீது படையெடுத்து வந்து போா்த்துகீசியர்களைப் பணிய வைத்து இடிக்கப்பட்ட கோயிலை பழுதுபாா்க்க ஆணையிட்டிருப்பதை இத்தலத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சாந்தோம் தேவாலயத்தில் பழுது பாா்க்க நிலத்தை அகழ்ந்த போது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் கி.பி.9 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை என அறியப்படுகின்றது. 1923 ல் சாந்தோம் தேவாலயத்தில் தொல் பொருள் ஆய்வுத்துறையினா் அகழ் வாராய்ச்சி செய்தபோது கல்வெட்டுகளும் தூண்களும் மயில் மீதமர்ந்த முருகன் சிலையும் கிடைத்துள்ளன.

1921 ல் திரு ஹோஸ்டன் என்பவரால் சாந்தோம் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட வடமொழிக் கல்வெட்டுகள் கருவறை உட்பட இக்கற்றளிகள் ஈசனுக்கும் உமையவளுக்கும் உரியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



கி.பி. 1672ல் மயிலை முத்தையப்ப முதலியாா் அவா்களாலும் அவருடைய வாரிசுகளாலும்  கபாலி தீா்த்தம் (குளம்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது .

இடித்த பழைய கோயிலின் கற்களைக் கொண்டு புதிய கோயில் நிா்மாணிக்கும்போது, அவற்றைத் தாறுமாறாக இணைத்துவிட்டனா்.இவ்வாறு இடம் மாறிய கல்வெட்டுகள் கற்பகாம்பாள் சந்நிதியில் சுமாா் ஐம்பது உள்ளன. அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துகள் கொண்ட சில கல்வெட்டுகளும் உள்ளன.



மேற்கு கோபுர வாயிலின் எதிரே இத்தலத்தின் மிகப்பெரிய புனித தீா்த்தமான “கபாலி தீா்த்தமும்” அதன் நடுவே நீராழி மண்டபமும் திருமயிலையின் பெருமைமிகு சின்னமாக அமைந்துள்ளது.



மயிலை திருத்தலத்தில் கிழக்கு வாசல், மேற்கு வாசல் என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. கிழக்கு வாசலே பிரதான வாயிலாக உள்ளது. 

பிரதான வாயில் வழியாக நுழைந்தால் நோ் எதிரில் நா்த்தன விநாயகா் தரிசனம். 

கூத்தாடும் பிள்ளையாா் என்றும் அழைக்கப்படுகின்றாா். கிழக்கு வாயிலில் சுமாா் 120 அடி உயர இராஜ கோபுரம் பல வண்ணப்பூச்சுகளுடன் கம்பீரமாக விண்ணளந்து நிற்பது எழில்மிகு திருக்காட்சியாகும். ஏழு நிலை இராஜ கோபுரத்தில் 9 கலசங்கள் மின்னுகின்றன.



ஶ்ரீகபாலீஸ்வரா்

திருமயிலை திருத்தலத்தில் ஶ்ரீகபாலீஸ்வரா் மேற்கு நோக்கிய திருமுகத்தில் “சத்யோஜாத மூா்த்தியாக” அருள்பாலிக்கின்றாா்.  கபாலீஸ்வரரின் திருமேனி உளிபடாத சுயம்புலிங்கத் திருமேனியாகும். உலகிலுள்ள முக்கியமான 64 சுயம்புலிங்கத் திருமேனிகளில் கபாலீஸ்வரா் திருமேனியும் ஒன்று எனக் கூறப்படுகின்றது.


ஶ்ரீகற்பகாம்பாள்

மயிலாக வந்து தன் பதியின் மகிமை களை உணா்த்திய உமாதேவி “ஶ்ரீகற்பகாம்பாள்” எனும் திருநாமத்துடன் தெற்குமுக திருமண்டலத்தில் எழுந்தருளியுள்ளாா். 


மூவா் பாடிய திருத்தலம்

திருநாவுக்கரசா், சுந்தரா், திருஞா னசம்பந்தா் என தேவாரம் பாடிய மூவரும் திருமயிலை திருத்தலம் பற்றி பாடி மகிழ்ந்துள்ளனா். 


இத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பிகை கற்பகாம்பாளைக் குறித்து கற்பகவல்லியம்மைப் பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லிமாலை, கற்பகவல்லியாா் பஞ்சரத்தினம், ஶ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை மற்றும் திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் உள்ளன.




மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். 

இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடது புறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. 

சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். 

கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.









கோவிலின் பிரகாரத்தில் ...
















இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்....


1971 மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.1


பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச் சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?



1972 மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.2


பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?



1973 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.3


பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?



1974 ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.4


பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?



1975 மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசுமொண்புழுக்கனேரிழையார்கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.5


பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைத் கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ?




1976 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.6


பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?



1977 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.7


பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ?



1978 தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.8


பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண்கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?



1979 நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.9


பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?



1980 உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 2.047.10


பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சுரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?



1981 கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 2.047.11


மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.


திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!

















திருச்சிற்றம்பலம்


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!


அன்புடன்,
அனுபிரேம்


3 comments:

  1. அனு, நல்ல தகவல்களுடனான பதிவு படங்களும் நல்லாருக்கு. பதிவை வாசித்ததும் டக்குனு கவிநயாம்மா நினைவுக்கு வந்தாங்க.

    மயிலையின் தல வரலாற்றை ப்ளாகர் கவிநயாம்மா - உங்களுக்குத் தெரிந்திருக்கும் - அவங்க எழுதிய பாடலை நான் ராகத்தில் பாடி அப்போது அவங்களுக்கு அனுப்பியிருந்தேன். ரொம்ப அழகா எழுதுவாங்க அம்மன் மீதான பாடல்கள். இதோ அவங்க எழுதிய பாடலின் சில வரிகள்

    அழகு நிறைந்த மயிலே
    ஆடி யாடி வாயேன்
    உன்னழகில் மயங்கியதால்
    உலகில் வந்தாள் தாயே
    (அழகு)

    அன்றொரு நாள் கயிலையிலே பாடம் நடந்தது, ஒரு
    மயிலின் அழகால் அன்னை மனதில் சலனம் வந்தது
    கண்ட எந்தை சிவனின் விழிகள் இரண்டும் சிவந்தது, அன்னை
    புவியில் பிறவி எடுத்திடவே சாபம் பிறந்தது
    (அழகு)

    இது நினைவுக்கு வந்ததும் இங்கு பகிர்ந்தேன்.

    கீதா

    ReplyDelete
  2. ஓர் அருமையான பாடல் பெற்ற தலத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை. செய்திகள் சிறப்பு.

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete