நேற்று திருக்கச்சி நம்பிகள் அவதார திருநட்சத்திரம் .....மாசியில் மிருகசீரிஸம்
வாழி திருநாமம்!
மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
திருக்கச்சி நம்பிகள்
திருநக்ஷத்ரம்: மாசி, மிருகசீரிஸம்
அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி
ஆசார்யன்: ஆளவந்தார்
சீடர்கள்: எம்பெருமானார்
முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி
படைப்புகள்: தேவராஜ அஷ்டகம்
அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி
ஆசார்யன்: ஆளவந்தார்
சீடர்கள்: எம்பெருமானார்
முக்தியடைந்த இடம்: பூவிருந்தவல்லி
படைப்புகள்: தேவராஜ அஷ்டகம்
திருக்கச்சி நம்பிகள் கலி 4110 (ஆங்கில ஆண்டு 1004) ஆம் ஆண்டு சௌம்ய வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் தசமி திதி வியாழக்கிழமை மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் சென்னைக்கு அருகாமையில் உள்ள , பூவிருந்தவல்லியில் வைஸ்ய குலத்தை சேர்ந்த வீரராகவ செட்டியாருக்கும் கமலை தாயாருக்கும் நான்காவது குமாரராய் " ஸேனை முதலியார் " அம்சமாக அவதரித்து, பார்கவப்பிரியர், கஜேந்திரதாசர் என்ற திருநாமங்களுடன் அழைக்கப்பட்டு வந்தார்.
இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் வல்லவர்.
வாரணாசி யாத்திரையின் போது தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்த பின் காஞ்சி திரும்பிய இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்), தன் தாயாரின் அறிவுரையின்படி ஆளவந்தாரின் சீடரும் காஞ்சி தேவப்பெருமாளின் அந்தரங்க கைங்கர்யபரரான திருக்கச்சி நம்பிகளைத் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்.
நம்பிகள், இளையாழ்வாரைக் காஞ்சி தேவப்பெருமாள் கோயிலிலிருந்து சிறிது தூரத்திலுள்ள சாலைக்கிணற்றிலிருந்து தினமும் தீர்த்தம் கொண்டு வந்து காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்யும்படி கூறினார். இளையாழ்வாரும் அந்த ஆணையை மகிழ்வுடன் ஏற்று தினமும் தீர்த்த கைங்கர்யத்தைச் செய்து வந்தார்.
பெரிய நம்பிகள் ஆளவந்தாரின் விருப்பத்தின் பேரில், ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக இளையாழ்வாரை ஆசாரியராக நியமிக்கவும், அதன் பொருட்டு இளையாழ்வாரை சம்பிரதாயத்தில் ஈடுபடுத்தவும் எண்ணம் கொண்டு காஞ்சிபுரம் விஜயம் செய்தார்.
பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகளை அணுகித் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்தார். திருக்கச்சி நம்பிகளும் அதற்கு மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு பெரிய நம்பிகள் ஆளவந்தாரின் பெருமைகளை இளையாழ்வாருக்கு எடுத்துரைத்தார். பெரிதும் ஈர்க்கப்பட்ட இளையாழ்வார் ஆளவந்தாரை சரணடையும் பொருட்டு பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். ஆனால் ஆளவந்தாரை இளையாழ்வார் சந்திப்பதற்குள் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார்.
இதனால் மனமுடைந்த இளையாழ்வார் காஞ்சிபுரம் திரும்பி, தீர்த்த கைங்கர்யத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்..
நாளடைவில் இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடு ஏற்பட அவரையே சரணடைந்து தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவித்துத் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
திருக்கச்சி நம்பிகள் தான் பிராமணன் அல்லாததால் தனக்கு ஆசார்யனாகும் தகுதி இல்லை என்றும் அதனால் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க இயலாது என்றும் தன்னுடைய இயலாமையை எடுத்துக் கூறினார்.
சாஸ்திரங்களில் தனக்கு இருந்த அதீத நம்பிக்கையினால் திருக்கச்சி நம்பிகளின் கூற்றை இளையாழ்வார் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டார்.
ஒரு முறை திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை (அவர் உண்ட பிரசாதத்தின் மிகுதியை) ஸ்வீகரிக்க விரும்பிய இளையாழ்வார், திருக்கச்சி நம்பிகளைத் தன் இல்லத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்தார்.
திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
மிகுந்த மகிழ்ச்சியடைந்த இளையாழ்வாரும் தன் மனைவியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு தன்னுடைய தீர்த்த கைங்கர்யத்துக்காகச் சென்றிருந்தார்.
அவர் வீடு திரும்புவதற்குள் திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வார் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு சென்று விட்டார். இளையாழ்வாரின் மனைவி இளையாழ்வார் வீடு திரும்புவதற்குள், திருக்கச்சி நம்பிகள் (அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்) சாப்பிட்ட இலையை அப்புறப்படுத்தி விட்டு, அவர் சாப்பிட்டு முடித்த இடத்தையும் சாணமிட்டு மெழுகி சுத்தம் செய்தபின் தானும் குளித்து விட்டார்.
தன் கைங்கர்யத்தை முடித்து விட்டு வீடு திரும்பியதும் திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை உண்ண எண்ணியிருந்த இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளின் மகிமையை அறியாமல் அவரது குலத்தின் தாழ்ச்சியை மட்டும் நினைத்து தன் மனைவி தஞ்சம்மாள் செய்த செயல்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் அளித்தன.
நம்பிகள் தேவப்பெருமாளுடன் நேரிடையாக உரையாட வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்திருந்த உண்மை. இளையாழ்வாரின் மனதில் நெடுநாட்களாக சில சந்தேகங்கள் இருந்துவந்தன. அவர் திருக்கச்சிநம்பிகளை அணுகி தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை (குறிப்பு: ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய மறு அவதாரம் ஆகியபடியால் அனைத்தும் அறிந்தவர். என்றாலும் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளை ஸ்தாபிக்கும் முகமாக) தேவப்பெருமாளிடமிருந்து பெற்றுத்தருமாறு வேண்டினார்.
அன்றைய தினம் இரவு தன்னுடைய கைங்கர்யங்களை முடித்திருந்த நம்பிகளை தேவப்பெருமாள் வழக்கமான மிகுந்த கருணையுடன் நோக்கினார்.
தேவப்பெருமாள் அனைத்தும் அறிந்தவர் ஆகையால் நம்பிகளை நோக்கி “நீர் ஏதாவது கூற விரும்புகிறீரா?” என்று வினவினார்.
நம்பிகளும் பெருமாளிடம் இளையாழ்வாரின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அதற்கான விளக்கங்களைத் தந்தருளுமாறு வேண்டினார்.
உடனே தேவப்பெருமாளும் “நான் கலைகளைக் கற்பதற்காக ஸாந்திபினி ஆஸ்ரமத்திற்கு சென்றதைப் போல (ஆதிசேஷ அவதாரமான) அனைத்து சாத்திரங்களிலும் வல்லவரான இளையாழ்வாரும் தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை என்னிடம் கேட்கிறார்” என்று கூறினார்.
பிறகு தேவப்பெருமாளும் அனைவராலும் “ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார்.
அவைகள்:
1.அஹம் ஏவ பரதத்வம்! (நானே பரமாத்மா)
2.தர்சனம் பேத ஏவ சா! (சித்,அசித்,ஈஸ்வரன் மூன்றுக்கும் இடையே பேதமுள்ளதே நம் மதம்-விசிஷ்டாத்வைதம்)
3.உபாயேதி பிரபத்திஸ்யாத் ! (என்னை அடைவதற்கு சரணாகதியே உபாயம்)
4.அந்திம ஸ்மிருதி வர்ஜனம் ! (என்னைச் சரணடைந்தோர், இறக்கும் தருவாயில் என்னை நினைக்காவிட்டாலும் அவர்களுக்கு மோட்சமுண்டு).
5.தேஹ வாஸநே முக்திஸ்யாத்! (இந்தப் பிறவியின் இறுதியிலேயே, உயிர், உடலைப் பிரிந்தவுடன் மோட்சம்)
6.பூர்ணாசார்ய ஸமாஸ்ரயே ! (மஹாபூரணர் என்னும் பெரிய நம்பிகளை ஆசார்யராக ஏற்றுக்கொள்)
திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார். இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
அதே சமயம் இளையாழ்வாரும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு பேர் உவகை எய்தினார் இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து,
இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை ஆசார்யனாக ஏற்று மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டு ஸ்ரீராமானுஜர் என்ற திருநாமத்தை ஏற்றார்.
எம்பெருமானார் துறவறம் மேற்கொண்டு, தேவப் பெருமாளின் அனுமதி பெற்று , திருவரங்கம் செல்லும் பொழுது, அவரை வழியனுப்பி வைத்தவர் திருக்கச்சிநம்பிகளே.
திருக்கச்சிநம்பிகள் தேவப் பெருமாளிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவராகையால் , அவரிடம் இருந்து ஏழு உபதேஸங்களைப் பெற்றார்.
அவை:-
1) கருடத்யானம் - இதன் மூலம் வேதங்களின் சாரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2) பாகவத சேஷத்வம் - பகவத் கைங்கர்யத்தை விட பாகவத கைங்கர்யம் மூலம் எளிதில் பேறு பெறலாம்.
3) ஸ்வப்ரயத்நஹாநி - தன் முயற்சியின் மூலம் பகவத் க்ருபையை அடைய முடியாது. பாரதந்திரியம் என்னும் பகவத் கடாக்ஷத்தின் மூலமே பகவத் க்ருபையை பெற முடியும்.
4) வைஷ்ணவ சமபுத்திஹாநி - ஸ்ரீவைஷ்ணவர்களை, தமக்கு சமமாக எண்ணாது, உயர்ந்தவர்களாக கருத வேண்டும்.
5) ஜாதி பேத அபசாரம் - ஸ்ரீவைஷ்ணவர்களை ஜாதியை காட்டி, உயர்வு, தாழ்வு பார்ப்பது அபசாரமாகும்.
6) வைஷ்ணவ சகவாஸம் - நல்ல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் சகவாஸாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
7) வைஷ்ணவ ஜலபானம் - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவடி தீர்த்தத்தை ஏற்று ஸ்வீகரிக்க வேண்டும்.
பொதுவாக, சனி தோஷம் , ஏழரை வருடம் பிடிக்குமாதலால், திருக்கச்சிநம்பிகளுக்கும் சனி பிடித்தது, ஆனால் தேவப் பெருமாள் க்ருபையினால் அது ஏழரை நாழிகையாக அவருக்குக் குறைக்கப்பட்டு,
அதன் காரணமாக, அவர் கைங்கர்யம் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் பெருமாளின் ரத்ன மாலை காணாமல் போக, அதற்கு அவர்தான் காரணம் என்று கூறி அதிகாரிகள் , அவரை சிறையிலடைத்தனர்.
ஆனால் ஏழரை நாழிகளுக்குள், அந்த ரத்ன மாலை கிடைக்கப் பெற்ற காரணத்தினால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பெற்றார்.
திருக்கச்சிநம்பிகள் , ஒரு சமயம், தனக்கு பரமபதம் எப்பொழுது கிட்டும் என்று, தேவப்பெருமாளிடம் கேட்க, அவரோ "உமக்கு பரமபதம் கிடையாது " என்று கூற,
அதைக் கேட்ட, நம்பிகள், எம்பெருமானிடம் " நாம் உமக்கு ஆலவட்டம் வீசி, கைங்கர்யம் செய்தேனே, ஏன் எனக்கு பரமபத ப்ராப்தி இல்லை எங்கிறீர் " என்று பெருமாளிடம் கேட்க, அவரும் " நீர், வீசினதற்கு, நாம் உம்மிடம் பேசினோம். ஆக, வீசியதற்கு, பேசியது சரியாகப் போய் விட்டது. மேலும் நீர், ஆச்சார்ய கைங்கர்யம் செய்யாத காரணத்தினால், உமக்கு பரமபத ப்ராப்தி கிடையாது. உமக்கு பரமபத ப்ராப்தி கிடைக்க வேண்டுமென்றால், முதலில் ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வாரும் " என்று சொல்லி அனுப்பினார்.
ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால்தான், பரமபதம் கிட்டும் என்ற நிலையில், திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று , ஆச்சார்ய கைங்கர்யம் செய்ய முடிவெடுத்தார்.
ஆனால் தன் சுய உருவில் சென்றால், அவரிடம் கைங்கர்ய ப்ராப்தி கிடைக்காது என்று எண்ணி, ஒரு மாடு மேய்ப்பவனாக வேடமிட்டுக் கொண்டு, அவரிடம் சேர்ந்து , ஆச்சார்ய கைகர்யம் செய்து வந்தார்.
பின் வெறொரு சமயத்தில், திருக்கோட்டியூர் நம்பி , இவர் யார் என்று தெரிந்து கொண்டு, அவரிடம், " இப்படி செய்யலாமா" என்று கேட்க, அவரும் சற்று நாணத்துடன் நடந்த சம்பவங்களைக் கூற , திருக்கோட்டியூர் நம்பியும், திருக்கச்சிநம்பிகளை ஆசிர்வதித்து, காஞ்சிக்கு திருப்பி அனுப்பினார்.
திருக்கச்சிநம்பிகள் " தேவராஜ அஷ்டகம் " என்று எட்டு அற்புத ஸ்லோகங்களை அருளிச்செய்தார். அவைகளைத்தாம், தம் சிஷ்யர்களுக்கு, சமாஸ்ரயணத்தின் போது, ஆச்சாரியர்கள் அனுசந்தித்து உபதேசிகிறார்கள்.
இப்பூவுலகிலே ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் ஜீவித்த , திருக்கச்சிநம்பிகள், ஆளவந்தாரை , நினைத்துக் கொண்டே பர்மபதம் எய்தினார்.
2060
வங்கத்தால்மாமணிவந்துந்துமுந்நீர்
மல்லையாய்! மதிள்கச்சியூராய்! பேராய்! *
கொங்கத்தார்வளங்கொன்றையலங்கல்மார்வன்
குலவரையன்மடப்பாவைஇடப்பால்கொண்டான்
பங்கத்தாய்! * பாற்கடலாய்! பாரின்மேலாய்!
பனிவரையினுச்சியாய்! பவளவண்ணா! *
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னைநாடி
ஏழையேன்இங்ஙனமேஉழிதருகேனே.
2066
கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய
களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப்பழனவேலி
அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *
சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்
தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *
மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே
மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)
ஓம் நமோ நாராயணாய நம!!
திருக்கச்சிநம்பிகள் திருவடிகளே சரணம் !!
அன்புடன்
அனுபிரேம்...
எப்போதும் போல, மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்
ReplyDeleteதேவராஜ அஷ்டகத்தில் ஏதேனும் ஸ்லோகத்தையும் இதில் சேர்த்திருக்கலாம். அதில், காஞ்சி தேவரஜனைப் பணிந்து, அவனது அருளை வேண்டுகிறார். அதில்,
உலக வாழ்க்கை என்பது ஒரு பாலைவனம், அதில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள். பாலைவனத்தில் அபூர்வச் சோலைகள் போல், அற்பசுகங்கள் நிறைந்திருக்கின்றன. ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பாலைவனத்தில், இவை செய்யவேண்டியவை, இவை செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும், இங்குமங்கும் அலையும் பேராசை உடையவனாகவும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனாகவும், திறமையற்றவனாகவும், உடல் திண்மை, மனோதிடம், உடல் ஆரோக்கியம் இவைகள் இல்லாதவனாகவும் கிலேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும், பலவகை துக்கங்களால் தாபமடைந்தவனுமாகிய என்னை, தேவராஜனே! நீ கடாக்ஷிக்கவேண்டும்
என்று வேண்டுகிறார்.
தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி சார் ...
Deleteபல இடங்களில் வாசித்து தொகுத்த பதிவே இது .... மேலும் தேவராஜ அஷ்டகம் வாசிக்கும் ஆவலை தங்களின் வார்த்தைகள் உண்டாக்குகிறது ..விரைவில் வாசிக்க வேண்டும் ..
இராமானுசர், திருக்கச்சி நம்பிகள் மற்றும் பல்வேறு ஆச்சார்யர்கள் தங்களைப் பற்றி எழுதும்போது தங்களை மிகக் குறைவாக மதிப்பீடு செய்து எழுதியிருக்கின்றனர் (சமீபத்தில் கத்யத்ரயம் வாசிக்க நேர்ந்தது). அப்போ நாமெல்லாம், அதள பாதாளத்தில்தான் இருக்கோம் என்று நினைத்துக்கொண்டேன்.
Deleteநம் ஆச்சாரியர்கள் பெயர்களையும், அவர்களை பற்றியுமே அறிந்துக் கொள்ள இன்னும் கடளவு உள்ளது.....இப்பொழுது தான் அவர்களை அறியும் திசை நோக்கியே செல்ல ஆரம்பித்து இருக்கிறேன் ...
Delete