08 February 2021

ஹியூகோ வுட் - ஒரு வரலாறு

வாழ்க வளமுடன் முந்தைய பதிவுகள் 


10.மீண்டும் சவாரி ....

11.கோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்

12.யானை சவாரி...


இத்தனை நாள் டாப்ஸ்லிப் பற்றி கண்டோம் ,... 

நீண்ட இடைவெளிக்கு பிறகு  இன்று இந்த வனம்  பற்றி...
தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இம்மலைத்தொடர் அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றை தடுத்து, மழைப்பொழிவைத் தருகிறது. தற்போது இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம்.  ஒரு நெடிய வரலாற்றையும், பெரும் துயரத்தையும் மையமாக கொண்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மொட்டையாகி, பொட்டல் காடாகிப்போன இந்த மலைப்பகுதியை மீண்டும் இயற்கையான சோலையாக மாற்றியவர்  ஒரு ஆங்கிலேயர்  .... 

இருநூறு ஆண்டுகளில் இந்திய நாட்டின் பெரும்பாலான பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடித்தாலும், கொங்கு நாடான கோவை மண்டலத்தை அவர்களால் கைபற்ற முடியவில்லை.


 காரணம், மைசூரை தலைமையாக கொண்டு ஆட்சி செய்த திப்புசுல்தானின் ஆளுமையின் கீழ் கொங்கு நாடு இருந்தது. திப்புவின் எல்லைக்குள் ஆங்கிலேயர்களால் நுழைய முடியவில்லை. மைசூர் அருகிலுள்ள ஸ்ரீரங்கப்படிணத்திலிருந்த திப்புவை சூழ்ச்சியால் வீழ்த்தி பல ஆண்டுகள் நடந்த மைசூர் போரை 1799-ல், முடிவுக்கு கொண்டுவந்த பிறகுதான் கொங்குநாடு ஆங்கிலேயர் வசமானது.

புதிதாக தங்களுக்கு கிடைத்த கொங்கு நாட்டை எப்படி நிர்வாகிப்பது என்பது குறித்த ஆய்வுக்காக 1801-ல், சென்னை மாகாண கவர்னர் ஜெனரலாக இருந்த எட்வார்டு கிளிவ் (Edward Clive) என்பவரின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து நடையாகச் புறப்பட்ட மருத்துவ அலுவலரும், ஆய்வாளரும் இயற்கை ஆர்வலரான டாக்டர்.பிரான்சிஸ் புக்கானன் (Buchanan Francis Hamilton) என்ற ஆங்கிலேயர், கேரளா கடற்கரை வரை பயணம் மேற்கொண்டார்.

கொங்குநாட்டில் வசித்துவந்த கிராமப்புற மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக பயணம் மேற்கொண்ட இவர் மற்றவர்களை போல இல்லாமல், முற்றிலும் கிராமங்களின் வழியே நடந்து சென்றுள்ளார். 

பொள்ளாச்சியிலிருந்து மலபார் நோக்கி பயணம் செய்யும் போது அங்கிருந்த ஒரு மாபெரும் வனப்பகுதியை பார்த்துள்ளார். 

மலையின் அடிவாரத்திலிருந்து 24-கல் தொலைவில் இருந்த “ஆனைமலை” என்ற ஊர் வரை இம்மலைக்காடுகள் பரந்திருந்தன, அங்கே பல அறிய உயிரினங்கள் வாழ்ந்தாகவும், யானைகள் நிறைந்திருந்த காடுகள் இருந்ததால் தான் “ஆனைமலை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்று தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பொள்ளாச்சி, ஆனைமலை வழியாக பயணம் மேற்கொண்ட இவர் அங்குள்ள காடுகளின் வளத்தைப் பற்றியும் அதிலுள்ள தேக்கு, பலா, கடம்பு, வேங்கை, ஈட்டி, கடுக்காய் உள்ளிட்ட வலிமையான மரங்களைப் பற்றியும், மரங்களை வெட்டி வெளியில் கொண்டுவர முடியாத அளவுக்கு அவை உயர்ந்தோங்கி வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும் பக்கம் பக்கமாகத் தனது பயண நூலில் எழுதிக் கொடுத்துவிட்டார்.

18-நூற்றாண்டின் துவக்கத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரும் தொழில் புரட்சி ஏற்பட்டதன் காரணமாக அங்கே ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. 

ஐரோப்பிய நாடுகளில் “ஓக்” மரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

 இங்கிலாந்தின் காடுகளிலிருந்த வலிமையான “ஓக்” மரங்கள் அனைத்தும் வெட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாக கப்பல் கட்டவும், தொழிற்சாலைகளை அமைக்கவும், புதிய இரயில் பாதைகளை அமைக்க, துறைமுகங்கள் கட்ட, தந்திக்கம்பம் நட எனப் பல்வேறு பணிகளுக்காக பெருமளவில் மரம் தேவைப்பட்டது. 

அப்போது தான், தங்களின் காலனியில் உள்ள ஆனைமலைப்பகுதியில் பெருமளவில் தேக்குமரம் இருப்பதை மேற்கண்ட அறிக்கையின் மூலம் பிரிட்டிஷ் அரசு தெரிந்தது.

ஐரோப்பிய நாட்களில் உள்ள “ஓக்” மரங்களைப் போலவே உயரமும் வலிமையும் கொண்டிருந்ததால், இந்த தேக்கு மரங்களை “இண்டியன் ஓக்” என்று பிரிட்டிஷார் குறிப்பிட்டனர். ஆனைமலைப்பகுதியில் இருந்த “இண்டியன் ஓக்” மரங்களை, வெட்டும் வேலையை துவக்கியது பிரிட்டிஷ் அரசு. இதற்காக, பொள்ளாச்சியிலிருந்து மலையின் அடிவாரம் வரை தெற்காகவும் மேற்காகவும் பாதைகள் அமைக்கப்பட்டது.

பின்னர் மலை மக்களை ஏற்றி மரங்களை வெட்ட உத்தரவிட்டனர். 

தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பயிர்களை நட்டு வளர்ப்பதற்கு ஆனைமலைப்பகுதியில் உள்ள இயற்கை சூழல் ஏற்றதாக இருப்பதை தெரிந்த கிழக்கிந்திய கம்பெனியின் பெரும் தொழிலதிபர்கள் காடுகளை அழித்து அதிலிருக்கும் மரங்களை வெட்டி தங்களின் மன்னர்களுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு மரம் வெட்டிய பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தங்கள் கையகப்படுத்தி சீர்செய்து தேயிலைத் தோட்டம் அமைத்தனர்.

மலை மீதிருந்த பெரும் நிலங்கலெல்லாம் பிரிட்டிஷ் முதலாளிகளின் கைவசமானது. வால்பாறை பகுதிகளிலும், அதன் பின்புறத்தில் உள்ள கொடைக்காணல் மலைச்சரிவிலும் இப்போது உள்ள பல தேயிலை தோட்டங்கள் எல்லாமே இயற்கையான காடுகளை அழித்து அந்த இடத்தில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட “எஸ்டேட்” என்ற “பசும் பாலைவனங்களே.

மலையின் கீழே இருந்த சிறு,சிறு நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு அந்த நிலங்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த இந்திய “ஜமீன்”களின் கைக்கு போனது.

ஆனை மலைக்கு மேற்கிலுள்ள மலை மீது மக்கள் நேராக ஏறமுடியாத அளவுக்கு உயரமாக இருந்ததால் சேத்துமடை வழியாக மலைமீது மக்கள் ஏற்றப்பட்டனர். பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலிருந்த உயர்ந்தோங்கிய தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு மலை உச்சியிலிருந்த ஒரு சமதளத்தில் கொண்டுவந்து அடுக்கப்பட்டது. சாலை வசதியில்லாத மலைப்பகுதியில், 2000-அடி உயரத்தில் இருந்த அந்த மரங்களை கீழே கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பெயர்தான் “ஆபரேஷன் டாப்சிலிப்” என்பது.

இந்த நடவடிக்கையின் படி மலை உச்சியில் இருந்த ஒரு சமதளத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் ஒரு பள்ளத்தின் வழியாக அடுக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளை கீழே தூக்கிப்போட்டனர். ஆயிரக்கணக்கில் போடப்பட்ட மரத்துண்டுகள் ஒன்றோடு ஓன்று மோதி, முட்டி, சரிந்து கீழே வந்து விழுந்தது. இப்போது சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இருந்த பள்ளத்தில் வந்து விழுந்த மரங்களை மாட்டு வண்டியின் மூலமாக சுப்பேகவுண்டன் புதூரில் கொண்டுவந்து சேர்த்தனர்.
அங்கிருந்து புகைவண்டி மூலமாக இந்த மரங்கள் கொச்சின் துறைமுகத்துக்கும், இந்தியாவின் பிறபகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காகவே ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன் துவக்கப்பட்டது. 

மலையிலுள்ள பாறை இடுக்குகளில் சிக்கும் மரங்கள் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்போது உப்பாற்று தண்ணீரில் மிதந்துகொண்டு வரும். இப்போதுள்ள அம்பராம்பாளையம் அருகில் ஒதுங்கும் அந்த மரத்துண்டுகளை அங்கே சேகரித்து வைத்துள்ளனர்.


இப்படியாக மலை முகட்டிலிருந்து மரங்களை கீழே தள்ளப்பட்ட இடத்திற்கு “டாப்ஸ்லிப்” (Top Slip) என்று பெயர் ஏற்பட்டுள்ளது. முதன் முதலாக இங்கே துவங்கிய ஒரு அஞ்சலகத்திற்குத்தான் “டாப் ஸ்லிப்” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலேயர்களால் சூட்டப்பட்டது. இப்போது உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு பக்கத்தில் உள்ள பள்ளத்தில் தான் அந்த காலகட்டத்தில் மரங்களை தூக்கி கீழே தள்ளிவிடும் வழியாக இருந்துள்ளது.

ஆனைமலை காடுகளில் வெட்டவெட்ட குறையாமல் இருந்த மரங்களை வெட்டி வெளியே கொண்டுவர முடியாத நிலையில், 1850-ஆம் ஆண்டு, கேப்டன் மைக்கேல் என்பவரால், “டாப்சிலிப்”பிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழியிலுள்ள சிச்சுழி என்ற இடம்வரை 11 கி.மீ. நீளத்திற்கு ஒரு பதை அமைக்கபட்டது.

 1956- கேப்டன் கோஷ்லிங் என்பவரால், இப்போதுள்ள பரம்பிக்குளம் செல்லும் வழியில் ஒரு புதிய பாதை அமைத்துள்ளார். இந்த வழியில், யானைகளால் இழுக்கப்பட்ட பெட்டிகள் மூலம் மரங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இங்கிலாந்தின் மறைமுகத் தேவைக்காக ஆனைமலையில் மீதமிருந்த மரங்களும் கோடாலிக்கு பலியானது. இந்த மலைப்பகுதியில், அதிகமான மரங்களை வெட்டி, காடு திருத்திய வேட்டைகாரன்புதூர் ஒப்பந்த(ஜாமீன்)தாரர் ஒருவருக்கு பிரிட்டிஷ் அரசு, யானை தந்தத்தால் ஆன பல்லக்கு ஒன்றைப் பரிசளித்தது என்று பழைய வரலாற்று கதை ஒன்று உண்டு.

இங்கிலாந்தின் தேவைக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அனைத்தும் மொட்டையான நிலையில், மழைப்பொழிவு குறைந்தது. காட்டு விலங்குகள் நாட்டுக்குள் படையெடுத்து. அடுத்தடுத்து ஏற்பட்ட மரத்தின் தேவைகளுக்காகவும் இந்திய காடுகளை வளர்க்கவேண்டிய அவசியம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.


இந்நிலையில், ஆனைமலைத் தொடரில் அழிந்த வனப் பகுதியை மீட்டெடுக்கும் நோக்கில், மறுசீரமைப்பு பணிக்காக 1915-ம் ஆண்டு டாப்சிலிப் பகுதிக்கு ஹியூகோ வுட்டை அனுப்பினர். அவர் பணியில் சேர்ந்தவுடன், மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில் பயணம் செய்து, அரசுக்கு செயல்திட்டம் சமர்ப்பித்தார்.மரத்தை வேரோடு வெட்டாமல், நிலத்துக்கு மேலே ஒரு அடி விட்டு வெட்டுவது. 

25 ஆண்டுகளைக் கடந்த மரங்களை மட்டும் வெட்டுவது. 

ஒரு மரத்தை வெட்டினால் நான்கு மரக்கன்றுகளை நடுவது என்ற, காடுகளைப் பாதுகாக்கும் இவரது திட்டத்தை ஆங்கிலேய அரசு ஆமோதித்தது.
ஏற்கெனவே வெட்டப்பட்ட மரங்களால் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களைப் பழங்குடியின மக்கள் உதவியுடன் செய்து, அதை அரசு அலுவலகங்களுக்கு விற்று, அதில் கிடைத்த பணத்தில் புதிய மரக்கன்றுகளை நடச் செய்தார். 
இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ். படித்த வுட், பங்களாவில் தங்காமல், டாப்சிலிப் அருகே உலாந்தி பள்ளத்தாக்கில் ‘மவுன்ட் ஸ்டுவர்ட்’ என்ற சிறிய வீட்டில் தங்கி, முறையான பாதை இல்லாத காடுகளில் பயணம் செய்து பணியாற்றினார்.வேலை போக மீதி நேரம் தனியாக காடுகளில் நடந்து செல்லும் ஹியூகோ வுட், சட்டைப் பைகளில் எடுத்துச் செல்லும் தேக்கு விதைகளை, தனது வெள்ளிப் பூண் போட்ட ஊன்றுகோலால் நிலத்தில் குத்தி, அந்தக் குழியில் ஒரு தேக்கு விதையை விதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி பல ஆண்டுகள் நடந்து நடந்து இவர் விதைத்த தேக்கு மரங்கள் இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து நிற்கின்றன.அப்போது ஒன்றிணைந்த சென்னை மாகாணத்திலும், இப்போது கேரளா மாநிலத்தின் கட்டுபாட்டில் உள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பக வணபகுதியிலும் உள்ள தேக்கு மரங்கள் அனைத்துமே “ஹியூகோ வுட்” போட்ட விதைதான் என்கின்றனர் அங்குள்ள காடர் இன பழங்குடி மக்கள்.

மருத்துவ வசையில்லாத அந்த கலத்தில், காசநோய் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரியவரும் இவர் பணி ஓய்வு பெற்ற பின் குன்னூரில் தங்கியுள்ளார். 

24.10.1933-ல், மெட்ராஸ் ரீஜென்சி முதன்மை வனப்பதுகாவலருக்கு தான் எழுதிய உயில்(WIll) சாசனத்தில், தனது உடலை, தான் நேசித்த ஆனைமலை காட்டிலுள்ள தான் வசித்த,வந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” வீட்டுக்கு அருகிலேயே புதைக்கப்பட வேண்டுமென்று எழுதியதுடன், அவரது கல்லறை அமைக்கவும் அதை பராமரிக்கவும் ஒரு தொகையையும் ஒதுக்கி வைத்திருந்தார்.

12.12.1933- அன்று அவர் மரணமடைந்த பின் அவரது உடல் “டாப் ஸ்லிப்” கொண்டுவரப்பட்டு அவர் வாழ்ந்துவந்த “மவுன்ட் ஸ்டுவார்ட்” இல்லத்தின் கிழக்கில் அடர்ந்த தேக்குகாடுகளுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. 

சேத்துமடையிலிருந்து “டாப் சிலிப்” பகுதிக்கு இப்போது நாம் செல்லும் பாதை அப்போது “ஹியூகோ வுட்” அவர்களால் குதிரை சவாரிக்காக அமைக்கப்பட்ட பாதை. அதன் வழியாகத்தான் ஹியூகோ வுட்டின் உடல் மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. “ஹியூகோ வுட்” அவர்களை அடக்கம் செய்த போது ஏழு வயது சிறுமியாக இருந்த மெக்கரீன் என்ற கோவை மாவட்ட வன அலுவலரின் மகள் கடந்த 2004-ம் ஆண்டில் தனது 83-வயதில், இந்தியாவுக்கு வந்து “ஹியூகோ வுட்” அவர்களின் கல்லறையை பார்த்து விட்டு, “ஹியூகோ வுட்” உடலடக்கம் நடந்த அன்று நிகழ்ந்த சில நினைவுகளை அங்கிருந்த தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து சென்றுள்ளார்.

18-ம் நூற்றாண்டில் அழிந்துபோன ஒரு மலையை “ஹியூகோ வுட்”, மறு சீரமைப்பு செய்துள்ளார். 

டாப்ஸ்லிப் பற்றிய தகவல்களை  தேடும் பொழுது இந்த தகவல்கள் கிடைத்தன, வாசிக்கவே வியப்பாக இருந்ததால் இங்கும் பகிர்கிறேன் ...

தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம் 


4 comments:

 1. நிறைய தகவல்கள்... நம்ம ஊர் சொத்தைத் திருடிச் சென்றவரின் கதை படிக்க வித்தியாசமாக இருந்தது.

  ReplyDelete
 2. ஆனைமலை பயணநூல் தெரிந்து கொண்டேன்.

  ஓரு மரத்தை வெட்டினால் நான்கு மரத்தை நடுவது நல்ல செயல்.

  ReplyDelete
 3. எத்தனை எத்தனை தகவல்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவின் எந்த வளத்தினையும் விட்டு வைக்கவில்லை! எத்தனை முடியுமோ அத்தனை சுரண்டிச் சென்றிருக்கிறார்கள்.

  மரம் வளர்த்த ஆங்கிலேயர் குறித்த தகவல்களும் நன்று. அந்த நல்ல மனிதருக்குப் பாராட்டுகள். இப்போதும் அவர் போல பலர் தேவை நம் நாட்டிற்கும் அழிக்கப்படும் காடுகளுக்கும்!

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரி

  நல்ல பதிவு. ஆனைமலை பற்றிய தகவல்கள், ஆங்கிலேயரான ஹியூகோவுட் பற்றிய செய்திகள் எனப் படித்து தெரிந்து கொண்டேன். பல மரங்களை அழித்தாலும், மறுபடி பல மரங்கள் முளைக்கத் செய்திருக்கிறார். முதலிலிருந்து பதிவை ஸ்வாரஸ்யமாக படித்தேன். படங்களனைத்தும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete