11 February 2021

அன்னை அபிராமி...

 வாழ்க வளமுடன் 


இன்று தை  அமாவாசை ....

அபிராமிப் பட்டருக்கு அன்னை காட்சி  அருளிய நாள் ...






தன் பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பாடும் வேளையில் 79 வது பாடலில் தன் காதில் அணிந்திருக்கும் தாடங்கத்தை வானத்தில்  கழற்றி நிலவை வரவழைத்த தினம் இன்று........


திருக்கடையூரில் வசித்த சுப்பிரமணியன் என்ற பக்தர் அபிராமி அம்மனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். நிலா போல ஒளித்தன்மை கொண்ட அம்பிகையின் முக அழகில் எப்போதும் லயித்திருப்பார். ஒருசமயம், அவர் அம்பிகைய தரிசித்துக் கொண்டிருந்தபோது, சரபோஜி மன்னர் அங்கு வந்தார். 

அவரைக் கவனிக்காத சுப்பிரமணியன், மன்னருக்குரிய மரியாதையை செய்யவில்லை. 

கோபம் கொண்ட மன்னர், அவர் அருகில் சென்று இன்று என்ன நாள்? என்று கேட்டார்.
அம்பிகையின் முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தவர் பவுர்ணமி என்று சொல்லிவிட்டார். மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. 

ஏனென்றால் அன்று அமாவாசை. 

மன்னர் அவரிடம் இன்று பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்! என எச்சரித்துச் சென்றுவிட்டார். 

அபிராமி அம்பிகை மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட சுப்பிரமணியன் அமாவாசை தினமான அன்று நிலா உதிக்க வேண்டும் என வேண்டி, அம்பிகையின் புகழைச் சிறப்பித்து நூறு பாடல்கள் பாடினார்.


அதுவே அபிராமி அந்தாதி என்னும் அற்புதமான பொக்கிஷ நூலாகும். 

அவரது பாடலில் லயித்த அம்பிகை, நிலவை ஒளிரச் செய்து, அவரது பக்தியை உலகம் உணரச் செய்தாள். மேலும் தனது பெயராலேயே, அவர் அழைக்கும்படியாகவும் அருள்புரிந்தாள். 

இதனால் அவர் அபிராமி பட்டர் என்று பெயர் பெற்றார். அமாவாசையை பவுர்ணமியாக்கிய வைபவம் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் திருக்கடையூரில் நடக்கும்.








1.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.


7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.



23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.




24. நோய்கள் விலக

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.



79. கட்டுகளில் இருந்து விடுபட

விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.



94. மனநிலை தூய்மையாக

விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,
சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.


95. மன உறுதி பெற

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!



100. அம்பிகையை மனத்தில் காண

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.


101. நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.



அபிராமி அன்னையின் திருவடிகளே சரணம் ...


அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. அன்னை அபிராமியின் படங்களும், அருள்வரிகளும் அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய தினம் அபிராமி பட்டருக்கு அன்னை அருள் புரிந்த நன்னாள் என்பதை தெரிந்து கொண்டேன் இந்தக் கதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது. படமும், அபிராமி அந்தாதி பாடல்களும் அருமை. திருக்கடையூர் அன்னை அபிராமியின் அருள் அனைவருக்கும் கிடைத்திட அன்னையை மனமாற பிரார்த்தித்துக் கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அன்னை அபிராமியின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும். அழகான படங்கள்.

    ReplyDelete