03 February 2026

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநக்ஷத்திரம் - தையில் மகம்

 இன்று  திருமழிசை ஆழ்வார்   அவதார திருநட்சத்திரம் -  தையில் மகம் ...

ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் அவதார நட்சத்திரம்.  திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை; ஜெகந்நாதப் பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) ,பார்கவ மகரிஷிக்கும்,கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.





திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே 

அழகாருந் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே

இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே

எழில் சந்த விருத்தம் நூற்றி இருபது ஈந்தான் வாழியே

முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே

முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே

நன்புவியில் நாலாயிரத்து எழுநூறு  நூற்றான் வாழியே

நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே









திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின் ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்

 திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) , பார்கவ மகரிஷிக்கும், கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.

திருமழிசை ஆழ்வாரின் திருவரசு (பரமபதம் அடைந்த பின் சரமதிருமேனி பள்ளிப்படுத்திய இடம்), திருக்குடந்தையில் ஆதி வராஹப் பெருமாள் கோவிலுக்கு அருகில், சாத்தார வீதியில் உள்ளது.

4700 ஆண்டுகள், இப்பூவுலகில் வாசம் செய்த ஆழ்வார் ஒரு சித்தர். 

தம் யோக சக்தியால் பல நூறு, ஆண்டுகளுக்கு ஒரு முறை மூச்சு விடும் அரியசக்தியைப் பெற்றிருந்தார். அடிக்கடி தவயோகத்தில் அமர்ந்து விடுவாராம். அப்படி ஒரு முறை யோகநிலையில் அமர்ந்திருந்த போது, அந்த இடத்தில் இருந்தவர்கள், அவர் உயிர் பிரிந்து விட்டது என்று கருதி, அந்த இடத்திலேயே, அதே யோகநிலையில், அவரைத் திருப்பள்ளிப் படுத்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.

யோக சக்தியுள்ள ஆழ்வார் பூமிக்கடியில் இன்னும் ஜீவித்துள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆழ்வார் கூற்றுப்படி அவர், பெருமாள் கல்கி அவதாரம் எடுத்தபின், அந்த அவதாரத்தில் அவரைச் சேவித்துப் பாசுரம் பாடிவிட்டுத்தான் பரமபதம் அடைவாராம்! எனவே அவர் இன்னும் ஜீவித்திருப்பதால் அந்த இடம் திருமழிசை ஆழ்வார் சந்நிதி என்றே அழைக்கப்படுகிறது.


காஞ்சிக்கு அருகில் உள்ள திருமழிசையில் அவதரித்து, காஞ்சி வரதரிடம் ஆழ்ந்த பக்தி செலுத்தி,பல நூறு ஆண்டுகள் கைங்கர்யம் செய்தார் திருமழிசை ஆழ்வார். 

அவர் கும்பகோணத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று கேட்ட, வரதர் தம் பக்தரான ஆழ்வாரைக் கடாசிக்க உடனே கும்பகோணத்துக்கு ஓடியே வந்து விட்டாராம். வேகமாக  வந்ததால், கருடனையும் ஏவவில்லை; பெருந்தேவித் தாயாரையும் அழைத்து வரவில்லை.

கும்பகோணம் திருமழிசை ஆழ்வார் சந்நிதியில் "பக்திசார வரதர்" கோயில் உள்ளது.

தம் அத்யந்த பக்தர் பெயரை ஏற்று,"பக்தி சார வரதர்" என்னும் திருநாமத்துடன காஞ்சி வரதர்  சேவை சாதிக்கிறார்.





திருச்சந்த விருத்தம் 

தத்துவ நிலை, பரந்தாமனே  எனல் 


752

பூ நிலாய ஐந்துமாய்*  புனற்கண் நின்ற நான்குமாய்,* 
தீ நிலாய மூன்றுமாய்*  சிறந்த கால் இரண்டுமாய்,* 
மீ நிலாயது ஒன்றும் ஆகி*  வேறுவேறு தன்மையாய்,* 
நீ நிலாய வண்ணம் நின்னை*  யார் நினைக்க வல்லரே?* (2)  1


எம்பெருமானே!  பூமியில் நிறைந்திருக்கின்ற
சுவை.. ஒளி.. ஊறு.. ஓசை..மணம்..
இந்த ஐந்து குணங்களும் நீயே..

நீரிலே நிறைந்திருக்கின்ற சுவை.. ஒளி.. ஊறு.. ஓசை..
இந்த நான்கு குணங்களும் நீயே..

நெருப்பிலே நிறைந்திருக்கின்ற ஓசை..  ஊறு.. ஒளி..
இந்த மூன்று குணங்களும் நீயே!..

பலம் பொருந்திய காற்றில் ஓசையும்.. ஊறுமாய்..
நிறைந்திருப்பவனும் நீயே..

ஆகாயத்திலோ ஓசையாய் கலந்திருப்பவனும் நீயே.. 

இப்படிப் பஞ்சபூதங்களிலும்..

வேறுவேறு குணங்களோடு..

எங்கும் எதிலும்
நீ நிறைந்திருக்கிறாய்..
இருந்தும் உன்னை யாரால்
இங்கே அறிதல் முடியும்?


753

ஆறும் ஆறும் ஆறுமாய்*  ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,* 
ஏறுசீர் இரண்டும் மூன்றும்*  ஏழும் ஆறும் எட்டுமாய்,*
வேறு வேறு ஞானம்ஆகி*  மெய்யினோடு பொய்யுமாய்*, 
ஊறொடு ஓசையாய ஐந்தும்*  ஆய ஆய மாயனே!   2



ஆறும்ஆறும்.. வேத சாஸ்திர புராணங்களை..

தான் ஓதுதல்.. தான் கேட்டல்..தான் யாகம் செய்தல்..
மற்றவரை யாகம் செய்விக்க வைத்தல்..

தான் தானம் கொடுத்தல்..
தான் தானம் வாங்குதல்..

இந்த ஆறினையும் செய்பவனும் அவனே..
செய்விப்பவனும் அவனே.. ஆறுமாய்..
இந்த உலகம் இயங்குவதற்கு
ஆறு ருதுக்களாய்..
ஆறு பருவங்களாய்..

சித்திரை - வைகாசி வஸந்தருது.. இளவேனில்..
ஆனி - ஆடி  க்ரீஷ்மருது.. முதுவேனில்..
ஆவணி - புரட்டாசி வர்ஷருது.. மாரிக்காலம்..
ஐப்பசி - கார்த்திகை சரத்ருது.. கூதிர்காலம்..
மார்கழி - தை ஹேமந்தருது.. முன்பனிக்காலம்..
மாசி - பங்குனி சிசிரருது.. பின்பனிக்காலம்..

இந்த ஆறு பருவங்களாய் இருப்பவனும் அவனே..

ஓர் ஐந்தும்..

ஆக்னேயம்.. அக்னிஹோமீயம்.. உபாம்ஸுயாஜம்.. ஐந்திரம்..
ஐந்த்ராக்னம்.. இந்த

ஐந்து வகை யாகங்களால் ஆராதிக்கத் தகுந்தவன் அவனே..
ஐந்தும்..

தேவ வேள்வி.. பித்ருவேள்வி.. பூதவேள்வி.. மனிதவேள்வி..
பிரம்மவேள்வி.. இந்த 
ஐந்து வகை வேள்விகளால்
வழிபடக் கூடியவனும் அவனே..

பிராண.. அபான.. வியாந..உதான.. சமாந.. இந்த
ஐந்து வகை ஆகுதிகளாய்
இருப்பவனும் அவனே..

ஐந்துமாய்.. 
காருகபத்யம்.. ஆகவனீயம்.. தக்ஷிணாக்கினி..
சப்யம்.. ஆவசத்யம்.. இந்த
ஐந்து பஞ்சாக்னிகளை.. தன்
தேகமாக உடையவன் அவனே..

ஏறுசீர் இரண்டு..

மிகுந்த அதிசயத்தை உடைய ஞானம்.. விரக்தி.. இவை
இரண்டினையும்
அளிக்கக் கூடியவன் அவனே..

மூன்றும்..
அவற்றுக்குச் சாதனமான பரபக்தி.. பரஞானம்.. பரமபக்தி..
இந்த மூன்றையும் தருபவனும் அவனே..

ஏழும்ஆறும்..
விவேகம்.. விமோகம்.. பயிற்சி.. செயல்.. சௌக்கியம்..
அநவசாதம்.. அநுத்தர்ஷம் இந்த ஏழு குணங்களுக்கும்
அதிகாரியானவன் அவனே..

ஞானம்.. சக்தி.. ஆற்றல்.. செல்வம்.. தேஜஸ்.. வீரியம்..
இந்த ஆறு சம்பத்துகளுக்கும் எஜமானன் அவனே

எட்டுமாய..
புண்ணியவான்.. வயோதிகம் நெருங்காதவன்..
தீர்க்காயுள் கொண்டவன்.. விவேகம் உடையவன்..
அதிகப் பசியற்றவன்.. அதிக தாகமற்றவன்..
பக்தனாய் இருக்க தகுதியான நற்செய்கைகளை உடையவன்..

விரயப்படுத்தாத இலட்சியம் உடையவன்.. இந்த
எட்டு கல்யாண குணங்களாய்
இருப்பவனும் அவனே..

வெவ்வேறு ஞான மார்க்கங்களைத்
தோற்றுவித்தவன்..

உண்மையாய் இருப்போர்க்கு மெய்யனாய் இருப்பவன்..
அல்லாதவர்களுக்கு அவன் பொய்யன்..

சுவை.. ஒளி.. ஊறு.. ஓசை.. நாற்றம்.. இந்த ஐந்துமாக

யாதவ குலத்தில் வளர்ந்த மாயனே..
உன்னைப் பூரணமாய் வர்ணிக்க இங்கே
எவரால் முடியும்?







உபதேசரத்தினமாலை

தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி
பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் (12)









ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்💙💙


No comments:

Post a Comment