28 January 2024

திருமழிசையாழ்வார் திருநக்ஷத்திரம்

 இன்று திருமழிசையாழ்வார் திருநக்ஷத்திரம்  தை - மகம்






திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடன் அந்தாதி தொண்ணூற்று ஆறு உரைத்தான் வாழியே 

அழகாருந் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே

இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே

எழில் சந்த விருத்தம் நூற்றி இருபது ஈந்தான் வாழியே

முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே

முழுப்பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே

நன்புவியில் நாலாயிரத்து எழுநூறு  நூற்றான் வாழியே

நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே


திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின் ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்


 திருமாலின் சுடராழியின் (சக்கரம்) அம்சமான, இவர் திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருத்தலத்தில் (பூவிருந்தவல்லிக்கு அருகில்) , பார்கவ மகரிஷிக்கும், கனகாங்கிக்கும் திருக்குமாரராகத் தோன்றினார்.

திருமழிசை ஆழ்வாரின் திருவரசு (பரமபதம் அடைந்த பின் சரமதிருமேனி பள்ளிப்படுத்திய இடம்), திருக்குடந்தையில் ஆதி வராஹப் பெருமாள் கோவிலுக்கு அருகில், சாத்தார வீதியில் உள்ளது.

4700 ஆண்டுகள், இப்பூவுலகில் வாசம் செய்த ஆழ்வார் ஒரு சித்தர். 

தம் யோக சக்தியால் பல நூறு, ஆண்டுகளுக்கு ஒரு முறை மூச்சு விடும் அரியசக்தியைப் பெற்றிருந்தார். அடிக்கடி தவயோகத்தில் அமர்ந்து விடுவாராம். அப்படி ஒரு முறை யோகநிலையில் அமர்ந்திருந்த போது, அந்த இடத்தில் இருந்தவர்கள், அவர் உயிர் பிரிந்து விட்டது என்று கருதி, அந்த இடத்திலேயே, அதே யோகநிலையில், அவரைத் திருப்பள்ளிப் படுத்தி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.

யோக சக்தியுள்ள ஆழ்வார் பூமிக்கடியில் இன்னும் ஜீவித்துள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆழ்வார் கூற்றுப்படி அவர், பெருமாள் கல்கி அவதாரம் எடுத்தபின், அந்த அவதாரத்தில் அவரைச் சேவித்துப் பாசுரம் பாடிவிட்டுத்தான் பரமபதம் அடைவாராம்! எனவே அவர் இன்னும் ஜீவித்திருப்பதால் அந்த இடம் திருமழிசை ஆழ்வார் சந்நிதி என்றே அழைக்கப்படுகிறது.


காஞ்சிக்கு அருகில் உள்ள திருமழிசையில் அவதரித்து,
 காஞ்சி வரதரிடம் ஆழ்ந்த பக்தி செலுத்தி,
பல நூறு ஆண்டுகள் கைங்கர்யம் செய்தார் திருமழிசை ஆழ்வார். 

அவர் கும்பகோணத்தில் ஜீவசமாதி அடைந்தார் என்று கேட்ட, வரதர் தம் பக்தரான ஆழ்வாரைக் கடாசிக்க உடனே கும்பகோணத்துக்கு ஓடியே வந்து விட்டாராம்.

வேகமாக  வந்ததால், கருடனையும் ஏவவில்லை; பெருந்தேவித் தாயாரையும் அழைத்து வரவில்லை.
கும்பகோணம் திருமழிசை ஆழ்வார் சந்நிதியில் "பக்திசார வரதர்" கோயில் உள்ளது.தம் அத்யந்த பக்தர் பெயரை ஏற்று,"பக்தி சார வரதர்" என்னும் திருநாமத்துடன காஞ்சி வரதர்  சேவை சாதிக்கிறார்.



சுதர்சன சக்கரத்தின் அம்சமாக வந்தவர் 

தை மகத்தில் பிண்டாரூபமாய் அவதரித்தவர்

பார்கவ முனி - கனகாங்கியின் செல்லக் குமாரர் 

ஜகந்நாதனின் கருணைக் குழந்தை இவர் 

திருவாளனின் தத்துப் பிள்ளையானவர் 


கணிகண்ணனின் சதாசார்யர் 

பேயாழ்வாரின் சத்சிஷ்யர் 

திருவல்லிக்கேணியில் யோகத்திலிருந்த யோகியவர் 

சிவபெருமானால் பக்திசாரரான பக்தர் 

கிழவிக்கும் யௌவனம் தந்தவர் 


பெருமாளை சொன்ன வண்ணம் செய்வித்தவர் 

பிராமணர்களுக்கு வேதத்தை புரியவைத்தவர் 

இதயத்தில் திருப்பாற்கடலை காட்டியவர் 

குடந்தையுள் கிடந்தவனை எழவைத்தவர் 

திருச்சந்தவிருத்தம் தந்தவர் 

நான்முகன் திருவந்தாதி பாடினவர் 

திருக்குடந்தையில் பரமபதித்தவர் .




    
திருச்சந்த விருத்தம் 


  41
 ஆயன்ஆகி ஆயர்மங்கை*  வேய தோள் விரும்பினாய்,* 
ஆய! நின்னை யாவர்வல்லர்*  அம்பரத்தொடு இம்பராய்,*
மாய! மாய மாயை கொல்*  அது அன்றி நீ வகுத்தலும்,* 
மாய மாயம் ஆக்கினாய்*  உன் மாயம்முற்றும் மாயமே. 

792


          
   42
வேறு இசைந்த செக்கர் மேனி*  நீறு அணிந்த புன்சடை,* 
கீறு திங்கள் வைத்தவன்*  கை வைத்தவன் கபால் மிசை,*
ஊறு செங் குருதியால்*  நிறைத்த காரணந்தனை* 
ஏறு சென்று அடர்த்த ஈச!*  பேசு, கூசம்இன்றியே.

793

          

   43
வெஞ்சினத்த வேழ வெண்*  மருப்பு ஒசித்து உருத்தமா,* 
கஞ்சனைக் கடிந்து*  மண் அளந்து கொண்ட காலனே,*
வஞ்சனத்து வந்த பேய்ச்சி*  ஆவி பாலுள் வாங்கினாய்,* 
அஞ்சனத்த வண்ணன் ஆய*  ஆதிதேவன் அல்லையே? 

794


          
   44

பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை,*  பாசியின் பசும் புறம்,* 
போலும் நீர்மை பொற்புஉடைத்தடத்து*  வண்டு விண்டு உலாம்,*
நீல நீர்மை என்று இவை*  நிறைந்த காலம் நான்குமாய்,* 
மாலின் நீர்மை வையகம்*  மறைத்தது என்ன நீர்மையே?

795


          
   45

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல்*  மண்ணுளே மயங்கி நின்று,* 
எண்ணும் எண் அகப்படாய் கொல்*  என்ன மாயை, நின் தமர்*
கண்ணுளாய் கொல் சேயை கொல்*  அனந்தன் மேல் கிடந்த எம்- 
புண்ணியா,*  புனந்துழாய்*  அலங்கல் அம் புனிதனே!

796



          

   46

தோடு பெற்ற தண் துழாய்*  அலங்கல் ஆடு சென்னியாய்,* 
கோடு பற்றி ஆழி ஏந்தி*  அஞ்சிறைப்புள் ஊர்தியால்,* 
நாடு பெற்ற நன்மை நண்ணம்*  இல்லையேனும் நாயினேன்,* 
வீடு பெற்று, இறப்பொடும்*  பிறப்பு அறுக்குமா சொலே.

797

          
   47
காரொடு ஒத்த மேனி நங்கள்*  கண்ண! விண்ணின் நாதனே,* 
நீர் இடத்து, அராவணைக்*  கிடத்தி என்பர் அன்றியும்*
ஓர் இடத்தை அல்லை, எல்லை*  இல்லை என்பர் ஆதலால்,* 
சேர்வு இடத்தை நாயினேன்*  தெரிந்து, இறைஞ்சுமா சொலே.

798
          
 


  48

குன்றில் நின்று, வான் இருந்து*  நீள் கடல்  கிடந்து,*  மண்- 
ஒன்று சென்று, அது ஒன்றை உண்டு*  அது ஒன்று இடந்து பன்றியாய்,*
நன்று சென்ற நாளவற்றுள்*  நல் உயிர் படைத்து, அவர்க்கு,* 
அன்று தேவு அமைத்து, அளித்த*  ஆதிதேவன் அல்லையே?

799

          
   49

கொண்டை கொண்ட கோதைமீது*  தேன் உலாவு கூனி கூன்,* 
உண்டை கொண்டு அரங்க ஓட்டி*  உள்மகிழ்ந்த நாதன் ஊர்,*
நண்டை உண்டு, நாரை பேர*  வாளை பாய, நீலமே,* 
அண்டை கொண்டு கெண்டை மேயும்*  அந்தண் நீர் அரங்கமே. 

800  
  

உபதேசரத்தினமாலை


தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன் - துய்யமதி

பெற்ற மழிசை பிரான் பிறந்த நாளென்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள் (12)






ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்💛💛

1 comment:

  1. திருமழிசை ஆழ்வார் குறித்த தகவல்கள் நன்று.

    ReplyDelete