06 January 2024

21.ஏற்ற கலங்கள்

   21. ஏற்ற கலங்கள்...

நந்தகோபனின் மைந்தனே! ஸ்ரீகிருஷ்ணா! எழுந்திராய். உன் எதிரிகள் உனக்கு தோற்று உள் மாளிகை வாசலில் வந்து உன் திருவடியை  வணங்கி கிடப்பது போல, நாங்களும் உன்னை போற்றி வந்துள்ளோம். துயில் எழுந்து ஆட்கொள்வாய்.





இருபத்தொன்றாம் பாசுரம் - இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள்.



ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப

     மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

     ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

     மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்

ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே

     போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்


பாலைச் சேகரிக்க வைத்த பாத்திரங்களெல்லாம், எதிரே பொங்கி 

மேலே வழியும்படியாக இடைவிடாது பாலைப் பொழியும்படியான 

வள்ளல் தன்மையுடைய பெரிய பசுக்களை மிகுதியாக உடையவரான

 நந்தகோபரின் பிள்ளையே!  

திருப்பள்ளி உணர்ந்தருள வேண்டும்.


 உயர்ந்த ப்ரமாணமான வேதத்தில் சொல்லப்படும் திண்மையை உடையவனே!  பெருமையை உடையவனே! 

இவ்வுலகத்தில் எல்லோரும் பார்க்கும்படி நின்ற ஒளியுருவானவனே! துயில் எழு. 

உன் எதிரிகள் உன்னிடத்தில் தங்கள் பலத்தை இழந்து உன் திருமாளிகை வாசலில் வேறு புகலில்லாதவர்களாக வந்து உன் திருவடிகளை வணங்கிக் கிடப்பதுபோலே நாங்களும் உன்னைத் துதித்து, உனக்கு மங்களாசாஸனம் செய்துகொண்டு உன் வாசலை வந்தடைந்தோம்.







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்



அன்புடன்

அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment