25 January 2024

தைப்பூசம் நன்னாள்....

 முருகா சரணம் ..... கந்தா சரணம் .....



இன்று தைப்பூசம் நன்னாள்....








முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம்,

 அறுவரும் ஒருவர் ஆன நாள்  கார்த்திகையில் கார்த்திகை,

அன்னையிடம் வேல் வாங்கிய நாள்  தைப்பூசம்,

அசுரரை அழித்தாட்கொண்ட நாள் ஐப்பசியில் சஷ்டி,

வள்ளியைத் திருமணம் புரிந்த நாள்  பங்குனி உத்திரம்...

 அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  

திருக்கையில் வேல் ஏந்திய நாளே  தைப்பூசம்!




 முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக கொண்டாடப் படுகின்றது.

தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.


சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.

அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.





அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.


ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.


 அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.




சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். இதை குறிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் தைமாதத்தில் தைப்பூசத்தன்று அதிகாலை ஜோதிதரிசனம் நடைபெறுகிறது.







அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த சக்தி மிகுந்த பதிகம் கந்தர் அனுபூதி ஆகும். 51 விருத்தப்பாக்களால் ஆனது. அதிலிருந்து ...



26. ஆதாரம் இலேன்
(திரு அருள் பெற)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.


27. மின்னே நிகர்
(வினையால் வருவது பிறவி)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே, மணியே, பொருளே, அருளே,
மன்னே, மயில் ஏறிய வானவனே.

28. ஆனா அமுதே
(நீயும் நானுமாய் இருந்த நிலை)

ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
ஞானாகரனே, நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.


29. இல்லே எனும்
(அறியாமையை பொறுத்தருள் முருகா)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.


30. செவ்வான்
(உணர்த்திய ஞானம் சொல்லொணானது)

செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.









ஓம் முருகா சரணம் 
ஓம் சண்முகா சரணம்
 ஓம் கந்தா கடம்பா 
கதிர் வேலா போற்றி 
ஓம் செந்தில் வேலா போற்றி 
ஓம் முத்துக்குமரா போற்றி....


அன்புடன்
அனுபிரேம் 💗💗💗💛





1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தைப்பூச நன்னாளைப்பற்றிய விபரமான தகவல்களுடன் நல்லதொரு. பதிவு. . அழகன் முருகனின் படங்கள் யாவும் அருமை. அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி பாடி முருகனை வணங்கிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete