19 January 2026

திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026

 திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026 (132ஆம் ஆண்டு)

தை அமாவாசை (18/01/2026) தொடங்கி 3 நாட்கள் திருநாங்கூரில் (சீர்காழிக்கு அருகில்-12 கி.மீ) 11 எம்பெருமான் களின் கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.

திருமங்கை ஆழ்வாரே இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம். இந்த உற்சவத்தைப் பற்றிய விவரங்களை இந்தத் தொடரில் அனுபவிப்போம்.



திருநாங்கூர் வரலாறு

காவிரி ஆற்றின் கடைப் பகுதியில் அமைந்துள்ள திருநாங்கூர் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட,11 வைணவ திவ்யதேசங்களையும், பாடல் பெற்ற 11 சிவ ஸ்தலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சிறப்பு பெற்ற அழகிய கிராமம் ஆகும்.

பாத்மபுராணத்தில் அகஸ்திய முனிவர் உபரிசரவசு மன்னனுக்கு பாரததேசத்தின் ஷேத்ர, தீர்த்த மகிமைகளைக் கூறி வரும்போது, 17 அத்யாயங்கள் கொண்ட பலாசவன மகாத்மியத்தைக் கூறினார். 

அந்தப் பலாசவனமே தற்போதைய திருநாங்கூர்ப் பிரதேசமாகும்.

 காவிரியின் வட பாகத்திலும், மண்ணியாற்றின் தென்பகுதியிலும், சுவேதாரண்யம் என்னும் திருவெண்காட்டுக்கு மேற்கிலும், காழிச்சீராம விண்ணகரம்-சீர்காழிக்குக் கிழக்கிலும் உள்ளது. பலாசவனப்பிரதேசம், பலா,வாழை,மா முதலான பழமரங்களாலும், அசோகு முதலான நிழல் தரும் மரங்களாலும்,செண்பகம் முதலான மரம்,செடி,கொடிகளாலும் நிறைந்தது.

இதிகாச புராணங்களில் போற்றப்படும் மதங்கர், தொம்யர் வியாக்ரபாதர், உதங்கர் போன்றவர்களின் ஆஸ்ரமங்கள் அமைந்ததும், மகாபாரதத்தில் பரிஷித் மகாராஜாவுக்கு காலனாகும், வீரியம் பெற்ற நாகராஜன் தக்ஷகன் ஆட்சி செய்த 'நாகபுரி' இன்று 'திருநாங்கூர்' என்ற பெயருடன் திகழ்கிறது. கரிகால் சோழன் பெண் எடுத்த பெருமையும் பெற்ற ஊர்.

இங்குள்ள ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்கள், திருமங்கைஆழ்வார் பாடியபடி, முறைப்படி ஹோமம் செய்கிற மூன்று அக்னிகளை உடையவராய்,

நான்கு வேதங்களையும், ஐந்து யாகங்களையும், ஆறு வேதாங்கங்களையும், ஏழு ஸ்வரங்களையும் நன்கு கற்ற விற்பன்னர்கள். 


சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று 

திசை நான்கும் நான்கும் இரிய செருவில்

கறையார் நெடு வேல் அரக்கர் மடியக்

 கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்

முறையால் வளர்க்கின்ற முத்தீயர், நால் வேதர், 

ஐவேள்வி, ஆறு அங்கர், ஏழின் இசையோர்,

மறையோர் வணங்கப் புகழ் எய்தும்  நாங்கூர்

 மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே"

(பெரிய திருமொழி 3-8-4)

"நாங்கை நாலாயிரவர்" என்று போற்றும் படி ஒரு காலத்தில் இவர்கள் 4000 பேர் இருந்தார்களாம். அதைக் குறிக்கும் வண்ணம், இப்போதும், 'நாலாயிரத் தொருவர்' என்னும் தும்பிக்கை ஆழ்வார் கோயில் இங்குள்ளது.

பல்லவர்களின் கோயில் நகரமாகக் 'காஞ்சிபுரம்' விளங்குவது போல, சோழர்களின் கோயில் நகரம்' திருநாங்கூர்'.

11 வைணவ திவ்யதேசங்களையும், 11 சிவ ஸ்தலங்களையும் கொண்ட பெருமை இவ்வூருக்கு/பகுதிக்கு உண்டு.

ஒரு சமயம் தட்சன்(தாட்சாயிணி-பார்வதியின் தந்தை) ஒரு பெரிய யாகம் செய்தான்.

அதற்கு சிவனை அழைக்கவில்லை. தாட்சாயிணி தம் தந்தையிடம் சென்று,தம் கணவர் சிவனை யாகத்துக்கு அழைக்குமாறு வேண்டினார். ஆனால் அகங்காரம் கொண்ட தட்சன், சிவனையும், பார்வதியையும், இகழ்ந்து பேசினான். கோபம் கொண்ட பார்வதி யாகசாலையை அழித்து விட்டு,சிவனிடம் வந்து முறையிட்டார். தான் போக வேண்டாம் என்று தடுத்தும் போய், அவமானப்பட்ட பார்வதியை சிவன் ஏற்க, மறுத்து,மிகுந்த கோபம் கொண்டு காவிரிக்கரையில்,ருத்ர தாண்டவம் ஆடினார். 

ஒவ்வொரு முறை, சிவனின் ஜடாமுடி பூமியில் படும்போதும் அஙகு ஒரு சிவன் தோன்றி ஆட, இப்படியே 11 சிவபிரான்கள் தோன்றி அனைவரும் ருத்ர தாண்டவம் ஆடினார்கள்.

இந்த ருத்ர தாண்டவத்தை பூமி தாங்காததால், பிரம்மாதி தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

திருமால் ஸ்ரீதேவி,பூதேவி சமேதரராக எழுந்தருளி, ருத்ரனைக் கடாட்சித்தார்.ருத்ரன் சாந்தமடைந்து திருமாலை வணங்கி, அவரும் 11 எம்பெருமான்களாக எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

திருநாங்கூர் திவ்ய தேசங்கள்:

திருமாலும் அவ்வாறே 'பரமபத ஸ்ரீவைகுந்த நாதரா'கவும், பூலோகத்தில் எழுந்தருளியிருக்கும் முக்கியமான அர்ச்சாவதார மூர்த்திகளாகவும்,

11 பெருமாளாகத் தோன்றினார்.

1. திருமணிமாடக் கோயில்-

நாராயணப்பெருமாள்- பத்ரிகாச்ரமம்.

2. திருஅரிமேய விண்ணகரம்- குடமாடு கூத்தர்- கோவர்த்தன கிரி-வியாதிகளை நீக்கும்/நீண்ட ஆயுள் தரும் பெருமாள்.

3.திருசெம்பொன் செய்கோயில்-

அழகியமணவாளன்-உறையூர்.

4. திருத்தெற்றியம்பலம்-ரங்கநாதர்-

ஸ்ரீரங்கம்- அரசாளும் வல்லமை/அரசு பதவிகளை அருள்பவர்.

5.திருவெள்ளக்குளம்-அண்ணன் பெருமாள்

- திருமலை- ஆயுள்விருத்தி அருள்பவர். சதாபிஷேகம்,சஷ்டியப்த பூர்த்தி ஆகியவற்றை இந்தப் பெருமாள் கோவிலில் செய்து கொள்கிறார்கள்.

6.திருவண்புருடோத்தமம்-வண்புருக்ஷோத்தமப் பெருமாள்-அயோத்தி ராமர்- பெண்களுக்குத் திருமண/சந்தான பாக்யம் அருளும் பெருமாள்;தீராத வழக்குகளும் தீர்த்து வைக்கும் பெருமாள்.

7.திருமணிக்கூடம்- வரதராஜர்-காஞ்சிபுரம்.-தீராதவியாதி தீர்க்கும் நிவாரணர் .சந்திர தோஷம் தீர்ப்பவர்.

8. திருவைகுந்த விண்ணகரம்-

வைகுந்தநாதர்-பரமபதம்-பெண்களுக்கு விவாகப் பிராப்தி அளிப்பவர். வைகுந்தப் பிராப்தி அருளும் பெருமாள்.

9.திருத்தேவனார்தொகை-தெய்வநாயகன்-திருவிடந்தை-விவாகப்பிராப்தி நல்கும் பெருமாள்.

10.திருப்பார்த்தன்பள்ளி-பார்த்தசாரதி- குருஷேத்ரம்.

11.திருக்காவளாம்பாடி-கண்ணன்-துவாரகை-விவாகப்பிராப்தி/சந்தானப்பிராப்தி/நோய்நிவாரணம் அருளும் பெருமாள்.

(பலன்கள் ஸ்தலபுராணத்தில் கூறப்பட்டுள்ள பொதுவான நம்பிக்கைகள் படி)

திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர், 

அவர் நித்யமும் ஆயிரம் பேருக்குத் ததீயாராதனை செய்த மங்கைமடம்,

கல்யாண ரங்கநாதப்பெருமாளிடம் வேடுபறி செய்து, 

வாள்வலியால் மந்திரம் கொண்ட திருமணங்கொல்லை-திருநகரி,

 ஞானசம்பந்தரை வாதத்தால் வென்று வேல் கொண்ட காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) முதலான திருத்தலங்களும் இந்தத் திருநாங்கூரைச் சுற்றி உள்ளன.

ஞாயிறு மிக அதிகாலை  1 மணிக்கு திருநகரியிலிருந்து, திருமங்கைஆழ்வார் புறப்பட்டு திருக்குறையலூர், திருமங்கைமடம் சென்று வயல்வெளிகள் வழியாக திருக்காவளம்பாடி, திருமணிக்கூடம், பார்த்தன்பள்ளி, பெருமாள்களை மங்களாசாசனம் செய்து, 

மணிகர்னிகா நதிக்கரையில் "மஞ்சக்குளியல்" திருமஞ்சனம் கண்டருளி இரவு திருநாங்கூர் சென்றடைவார். 

 கருடசேவை வைபவங்கள்  அடுத்த பதிவுகளில் தொடரும் .....

(--முகநூலில் பதிவிட்ட  பார்த்தசாரதி ராமாநுஜதாசன் சுவாமிகளுக்கு நன்றி--)











முந்தைய பதிவுகள் 





பெரிய திருமொழி - மூன்றாம் பத்து

எட்டாம் திருமொழி – 

3-8 சலம் கொண்ட இரணியனது

திருநாங்கூர் வைகுண்ட விண்ணகரம்  



 1228 

 சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு *

தடங் கடலைக் கடைந்து அமுதம்கொண்டு உகந்தகாளை *

நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான் *

நாள்தோறும் மகிழ்ந்து, இனிது மருவி, உறை கோயில் **

சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை, ஒண் செருந்தி *

செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே *

வலம் கொண்டு கயல் ஓடி விளையாடு நாங்கூர் *

வைகுந்தவிண்ணகரம் வணங்கு, மட நெஞ்சே! 1


1229 

திண்ணியது ஓர் அரி உருவாய்த் திசை அனைத்தும்நடுங்கத் *

தேவரொடு தானவர்கள் திசைப்ப * இரணியனை

நண்ணி, அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் *

நாள்தோறும் மகிழ்ந்து, இனிது மருவி, உறை கோயில் **

எண்ணில் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும் *

ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் *

மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *

வைகுந்தவிண்ணகரம் வணங்கு, மட நெஞ்சே! 2


திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக!!

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺


No comments:

Post a Comment