29 January 2026

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️

மன்னார்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் ❤️

 

இராஜமன்னார்குடி  ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்  மஹா ஸம்ப்ரோக்ஷண நேற்று நடைப் பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இன்று ..












 மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலசுவாமி கோயில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய கிருஷ்ணர் கோயில்களில் ஒன்றாகும், இது தட்சிண துவாரகை என்று போற்றப்படுகிறது.  

 இப்பகுதி ஒரு காலத்தில் சம்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது, முனிவர்கள் கிருஷ்ண உபாசனை செய்த சம்பக மரங்கள் நிறைந்த காடு.  

 ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ செங்கமல தாயார் உடன் "அரசர்களின் அரசர்" ராஜகோபாலனாக இங்கு காட்சியளித்தார்.  

வைணவத்தின் 108 அபிமான க்ஷேத்திரங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  

ராஜ மன்னார்குடி 108 திவ்ய தேசங்கள் வரிசையில் சேர்க்கப்படவில்லை.

ஆழ்வார்கள் யாரும் இந்த ஸ்தலத்தை/பெருமாளைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாடவில்லை. ஆனால் ஸ்ரீமணவாள மாமுனிகள் இந்த ஸ்தலத்தை திவ்ய தேசமாகக் கொள்ளும் விதமாகவே  

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் 4ஆம் பத்தின், 6ஆம் திருமொழி --

 "தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர் !" என்று தொடங்கும் பதிகம் முழுவதையும் அர்ப்பணித்தார்.

இப்பதிகத்தின் 10 ஆம் பாசுரம்:

"உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;

நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!

மன்னப்படு மறைவாணனை, வண் துவராபதி 

மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே" 10


மன்னார்குடி தக்ஷிண துவாரகை என்றும், ஸ்ரீராஜமன்னார் ராஜகோபால ஸ்வாமி, தக்ஷிண துவாரகீசன்  என்றும் கொண்டாடப்படுகிறார்கள்.

ஆதலால் "வண் துவராபதி மன்னனை ஏத்துமின் !" என்பது, இந்த ராஜமன்னாரை ஏத்தும்படி  உள்ளது என்பது மாமுனிகளின் திருவுள்ளம்.

பொதுவாக,பல திவ்யதேசங்களிலும், ப்ரம்மோற்சவம்  பத்து நாட்கள் நடைபெறும். ஆனால் இங்கு 18 நாட்கள் ப்ரம்மோற்சவமும், பின்னர் 12 நாட்கள் விடையாற்றி உற்சவமும் நடை பெறுகிறது.

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி ப்ரம்மோற்சவத்தில் 32 விதமான சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார்.

மன்னார்குடியில் ராஜமன்னார், ராஜகோபாலன் திருக்கோயில் இருப்பது பெரும்பேறு.

இந்தக் கோயிலின் மதிலும் அழகானது. கோயில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இத் திருக்கோயில் முதலில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. பின்னர் ராஜ ராஜ சோழனும், அடுத்து ராஜேந்திர சோழனும்  மேலும் விரிவு படுத்தினார்கள். 

16 கோபுரங்களும், 7 பிரகாரங்களும், 24 சந்நிதிகளும், 7 மண்டபங்களும், 9 புனித திருக்குளங்களும் கொண்ட திருக்கோயில் !! 

இந்த ஊருக்கு 'ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரும் உண்டு..














ஹரித்ரா நதி மகத்துவம்:

கோவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிகப்பெரிய கோவில் தெப்பக்குளம் உள்ளது. 'ஹரித்ரா நதி' என்னும் இந்தத் தெப்பக்குளம் 23 ஏக்கர் பரப்பளவில்1158 அடி நீளம், 847 அடி அகலத்தில் உள்ளது.

இந்தக் குளத்தில் பகவான் கிருஷ்ணர் தாம் கோபியர்களுடன் ஜலக்கிரீடை செய்த  திவ்ய தரிசனத்தைக் கோபிலர், கோப்ரளயர் என்னும் முனிவர்களுக்குக் காட்டித் தந்ததாக புராணச் செய்தி.

கண்ணனும், கோபியர்களும் மஞ்சள் பூசிக் குளித்த மிச்ச மஞ்சளும், நறுமணப்பொருட்களும் குளத்துத் தீர்த்தத்தில் படிந்த படியால் 'ஹரித்ரா(மஞ்சள்) நதி 'என்று அறியப்படுகிறது. குளமே நதி அளவுக்குப் பெரிதாக இருப்பதால் நதி என்று போற்றப்படுகிறது.

ஆனி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஶ்ரீவித்யா ராஜகோபாலன்,உபய நாச்சிமார்கள் உடன்  எழுந்தருளி மிகப் பெரிய தெப்ப உற்சவம் கண்டருள்கிறார்.

ராஜகோபாலனுக்கு திருமஞ்சன தீர்த்தம், இந்தக் குளத்திலிருந்து தான் எடுத்துச் செல்கிறார்கள்.

ஹரித்ரா நதி 66 கோடி புண்ணிய நதிகள் ஒன்று சேர்ந்தது என்றும்,காவிரியின் மகள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

இந்தக் குளத்தின் நடுவில் ஶ்ரீ வேணுகோபாலன் சந்நிதியும், கரைகளில்,ஶ்ரீ ஶ்ரீனிவாசப் பெருமாள்,ஶ்ரீ ராம பிரான்,ஶ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன.இந்தக் குளத்தில் கண்ணன் ஜலக்கிரீடை செய்ததாலும்,வாய் கொப்பளித்ததாலும் இது,யமுனா நதியின் ஏற்றம் உடைத்தது.










திருவாய்மொழி -நான்காம் பத்து

4-6 தீர்ப்பாரை யாம் 

வெறி விலக்கு 


உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;

நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!

மன்னப்படு மறைவாணனை, வண் துவராபதி 

மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே 10


தாய்மார்களே! இவளைப் பற்றி நீங்கள் அறிய மாட்டீரோ?

துவாரகாபதியான அந்தக் கண்ணனைத் தவிர..

மற்றொரு தெய்வத்தை..

மனத்திலும் எண்ணி இவள் வணங்க மாட்டாள்..

இப்படி இவள் இருக்க..

உங்கள் விருப்பங்களை அவளிடம் சொல்லி..

உங்கள் தோள்களை வருத்திக் கொள்கி்ன்ற.. இந்த

சாமியாட்டம் உமக்கெதற்கு? என்றும் நிலைத்திருக்கும்..

மறைகளால் போற்றப்படும் அந்த மாலவனை..

எம்பெருமானை..

நீங்களும் துதி செய்யுங்கள்.. அதைப் பார்த்து.. அவளும்

உற்சாகமாய் தான் மாறி.. தொழுது ஆடிப் பாடுவாள்..



ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


அன்புடன்
அனுபிரேம் 💗💗


No comments:

Post a Comment