21 January 2026

திருநாங்கூர் பதினொரு கருட சேவை - வைபவ புராணம்.

 வாழ்க வளமுடன் 


 

 திருநாங்கூர் பதினொரு கருட சேவை - வைபவ புராணம்

    திருநாங்கூர் கருட சேவை திருமங்கை ஆழ்வார் காலத்திலோ, அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் பின்னால் கூட நடைபெறவில்லை.(ஆனால் ஆழ்வார் திவ்யதேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்வதும்,மஞ்சக்குளி திருமஞ்சனமும் நடந்தது).

1894 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக கருடசேவை நடந்தது.

சித்திரகூடம் விஞ்சமூர் ஸ்ரீ. உ.வே. ஸ்ரீநிவாஸாசார்யார் ஸ்வாமி (இன்ஸ்பெக்டர் சாமி ஐய்யங்கார்), பள்ளிக் கல்வி ஆய்வாளராக, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றிருந்தபோது, நம்மாழ்வார் கண்டருளும் நவதிருப்பதி கருடசேவை உற்சவத்தைச் சேவித்து, இதேபோல் திருமங்கை ஆழ்வாருக்கும் திருநாங்கூர் 11 திருப்பதி கருடசேவை உற்சவம் கண்டருளப் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆழ்வார் அநுக்ரஹத்தால் அவரது முயற்சி கைகூடி,1894 ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து விமரிசையாக நடைபெற்று வருகிறது.






கடந்த சில ஆண்டுகளாக, "திருநகரி ஸ்ரீஎம்பார் வரதாச்சாரி ஸ்வாமி", அவர்கள் முயற்சியால், கருடசேவை கமிட்டி அமைக்கப்பட்டு, புரவலர்கள் பலர் சேர்ந்து சீரும், சிறப்புமாக நடத்தி வருகிறார்கள்.

திருமணிமாடக் கோயில் முன்னுள்ள மைதானத்தில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு 11 திவ்ய தேசப் பெருமாள்களும் எழுந்தருள்வார்கள்.

ஆழ்வார் மங்களாசாசனம்:

19/01/2026 அதிகாலை 5 மணிக்கு திருமங்கை ஆழ்வார் திருமணி மாடக்கோயில் ஸ்ரீநாராயணப் பெருமாள் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.

காலை 12 மணியிலிருந்து மற்ற திவ்ய தேசப் பெருமாள்கள் இங்கு வர ஆரம்பிப்பார்கள்.

முதலில் ஆழ்வாரின் வடிவழகைக் கொண்டாடிய மணவாள மாமுனிகள் (வண்புருக்ஷோத்தமன் சந்நிதியில் எழுந்தருளியுள்ளவர்) பந்தலுக்கு வந்து சேர்வார்.

அதற்குப்பின் ஒவ்வொரு பெருமாளாக (மதியம் 2.30 மணிவரை) பல்லக்கில் எழுந்தருளி வந்து பந்தலில் வரிசையாக எழுந்தருள்வார்கள்.

வரிசையில் இடப்புறம் மாமுனிகள் அஞ்சலி ஹஸ்தத்தில்

வலப்புறம் முதலில் நாராயணப்பெருமாள்.

அனைத்து எம்பெருமான்களும் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளியிருப்பது  வெகுசிறப்பு. 

ஒவ்வொரு பெருமாளுக்கும் மலர் அலங்காரம் வண்ண மயமாக இருக்கும்.

பெரும்பாலும் 7 முதல் 12 மாலைகள்.

ஸ்ரீவண்புருக்ஷோத்தமருக்கு 14 மாலைகள்.

பக்தர்கள் பெருங்கூட்டமாக வந்து,எம்பெருமான்களைச் சேவித்துப் பரவசப்படுவார்கள்.

3 மணியளவில் ஸ்ரீ குமுதவல்லி சமேத பரகாலன் பந்தலில் எழுந்தருள்வார்.

முதலில் நாராயணப்பெருமாள் நேராகச் சென்று பந்தலின் கிழக்குப்பக்கத்தில் சந்நிதியை நோக்கி நிற்பார். ஆழ்வார் திருச்சிவிகையில் கோவில் முன்வாசலில் பெருமாளை நோக்கி, கூப்பிய கரங்களுடன்.

பெருமாள், மாலை,பரிவட்டம்,சந்தனம்,சடாரி ஆகியவற்றை ஆழ்வாருக்கு அனுப்புவார்.பெருமாளுக்குச் செய்த மங்கள ஹாரத்தி அப்படியே ஆழ்வாருக்கும் செய்யப்படும்.

அவ்வமயம் அத்யாபகர்கள்,ஆழ்வார் இந்தப் பெருமாள் மீது பாடிய பதிகத்தின் முதல் பாசுரத்தை, அற்புதமாகச் சேவிப்பார்கள். 

பின்னர் ஆழ்வார் பெருமாளை நோக்கிச் சென்று அவரைப் பிரதட்சிணமாக வலம் வருவார்.

அதன்பின் பெருமாள் கோவிலுக்குள் சென்று விடுவார்.

இப்போது அடுத்த திவ்யதேசப் பெருமாள் அவ்விடத்தில் வந்து நிற்பார்.

ஆழ்வார் மீண்டும் கோவில் முகப்புக்கு வர,ஆழ்வாருக்கான பெருமாள் மரியாதைகள்,சடாரி,இந்தப் பெருமாள் மீது ஆழ்வார் பாடிய பதிகத்தின் முதல் பாசுரம் சேவித்தல், மங்கள ஆரத்தி, ஆழ்வார் பிரதட்சிண வலம்,பெருமாள் கோவிலுக்குள் எழுந்தருள்தல் (எல்லாப் பெருமாளும், நாராயணப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள மண்டபத்திலேயே எழுந்தருள்வார்கள்), ஆகியவை எல்லாம் முதலில் செய்தது போலவே. 

இவ்வாறே மற்ற 9 திவ்ய தேச எம்பிரான்களுக்கும்,திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
















ஆழ்வாருக்கு, மாமுனிகள்   மங்களாசாசனம்!

பெருமாள் மங்களாசாசனம் முடிந்தவுடன், ஆழ்வார் பெருமாள் இருந்த இடத்தில் வந்து நிற்பார்.

ஆழ்வார் இருந்த இடத்தில் மணவாள மாமுனிகள் எழுந்தருள்வார்.

அத்யாபகர்கள் ஆழ்வாரைப் போற்றி மாமுனிகள் பாடிய உபதேசரத்தின மாலைப் பாசுரங்களையும்,


"பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ

ஏது பெருமை   இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்

வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த

கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்"


மாமுனிகளின் ஆழ்வார் வடிவழகுப் பாசுரங்களையும் மிக உருக்கமாகப் பாடுவார்கள்.


ஸ்ரீ மணவாள  மாமுனிகள் அருளிய 
திருமங்கையாழ்வார் வடிவழகு சூர்ணிகை

"அணைத்த வேலும், தொழுத கையும், 

அழுந்திய திருநாமமும், ஓம் என்றவாயும், 

உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,

பரந்த விழியும், பதிந்த நெற்றியும்,

நெறித்த புருவமும், சுருண்ட குழலும், 

வடிந்த காதும், அசைந்த காதுகாப்பும்,

தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,

அகன்ற மார்பும், திரண்டதோளும்,

நெளித்த முதுகும், குவிந்த இடையும், 

அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், 

தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும்,

தளிருமிளிருமாய் நிற்கிற நிலையம்,

சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும்,

தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கணைக்காலும்,

குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும் 

வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி (என்று) 

வாழ்வித்தருளிய நீலக்கலிகன்றி மருவலர்தம் 

உடல்துணிய வாள்வீசும் பரகாலன் 

மன்கைமன்னனான வடிவே!


உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல் 

உருகலைத்த மனமொழித்து இவ்வுலகளந்த நம்பிமேல் 

குறைவைத்து மடலெ டுத்த குறையலாளி திருமணங் 

கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான் 

மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன்முனே 

மடியொடுக்கி மனமடக்கி வாய்புதைத்து, ஒன்றலார் 

கரைகுளித்த வேலணைந்து நின்றவிந்தநிலைமை, என் 

கண்ணைவிட்டகன்றிடாது கலியனாணை ஆணையே. 


காதும்சொரிமுத்தும் கையும் கதிர்வேலும் 

தாதுபுனைதாளிணையும் தனிச்சிலம்பும் 

நீதிபுனைதென்னாலி நாடன்திருவழகைப்போல 

என்னாணை ஒப்பாரில்லையே.


வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை 

மாலுரைக்கத்தாழ்ந்த வலச்செவியும் 

தாளிணைத் தந்தையும், தார்க்கலியன் நன்முகமும், 

கண்டு களிக்குமென்கண்.


இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை  

இதுவோ எழிலாலி என்னுமூர் 

இதுவோ தாள்வெட்டும் கலியன்வெருட்டி நெடுமாலை 

எட்டெழுத்தும் பறித்தவிடம்.



 

மாமுனிகளுக்கு ஆழ்வார் மரியாதை, திருவடி சாதிக்கப் படும், தீப ஆரத்தி,மாமுனிகள் ஆழ்வாரைப் பிரதட்சிணம் செய்வார்.

பின்னர் இருவரும் கோவிலுக்குள் செல்வார்கள்.

மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கும் மங்களாசாசன வைபவம் 7  மணியளவில் நிறைவுறும் !

சிந்தனைக்கினியான் மரியாதை:

திருமங்கை ஆழ்வார் எப்போது புறப்பாடு கண்டருளினாலும், அவருடைய திருவாராதனைப் பெருமாளான 'சிந்தனைக்கினியானும்' அதே பல்லக்கில்/சிவிகையில் உடன் எழுந்தருள்வார். ஆனால் இன்று மற்ற திவ்ய தேச எம்பெருமான்களைப் பிரதட்சிணம் செய்வதால், அவர் எழுந்தருளினால் தாமே, தம்மைப் பிரதட்சிணம் செய்வதாகும் என்பதால் அவர் எழுந்தருள்வதில்லை.

ஆழ்வார் தம் ஸ்தானத்துக்குச் சென்றதும் அங்கே ஏற்கனவே எழுந்தருளியிருக்கும் சிந்தனைக்கினியான் தாம் சூடிக் களைந்த மாலை, வஸ்த்ரம் ஆழ்வாருக்கு அணிவித்து அழகு செய்வார்.

திருமாமணிக் கோயில் பெரிய மண்டபத்தில், ஒவ்வொரு பெருமாளும்,ஆழ்வாரும், தனித்தனியாக, குறுமண்டபங்களில் எழுந்தருளியிருப்பார்கள்.

ஆழ்வாருக்குத்  திருமஞ்சனம் நடைபெறும்.

கருட சேவை

  பின்னர் அலங்காரம் ஆகி அந்தந்தப் பெருமாளுக்குரிய கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

ஆழ்வாரும்,குமுதவல்லி நாச்சியாரும் ஹம்ச வாகனத்தில்.(வாகனங்கள் ஏற்கனவே அந்தந்தக் குறு மண்டபங்களுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன).

 மாமுனிகள் அவருடைய ஆஸ்தான சேஷவாகனத்தில்.

கோவிலுக்குள் இருந்து, முதலில்  பந்தலுக்கு வந்து பந்தலின் கிழக்கில் முகப்புக்கு எதிரில் சற்று இடது புறமாக நிற்பார்.

தொடர்ந்து ஆழ்வார், முகவாயிலுக்கு நேர் எதிரில் மாமுனிகளுக்குப் பக்கத்தில், ஹம்சவாகனத்தில்.

ஆழ்வாரைத் தொடர்ந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி சந்நிதித் தெருவில், வரிசையாகச் வந்து நிற்பார்கள்.

ஒவ்வொரு பெருமாளும் வெளியே வந்து கோவில் வாயிலில் நிற்பார். அவருக்கு கும்பதீபாராதனை ஆகி, அதே கும்பதீபம் ஆழ்வாருக்கும், மாமுனிகளுக்கும் காட்டப்படும்.

11 ஆவது பெருமாள் (காவளம்பாடி ராஜகோபாலன்- ) வந்தவுடன் மாமுனிகள் விரைவாகச் சென்று,சந்நிதித் தெருவில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்களைத் தாண்டிச் சென்று முதல்வராக, எம்பிரான்களை நோக்கிய திசையில் கூப்பிய கரங்களுடன் நிற்பார். ஆழ்வாரும் விரைந்து சென்றுவரிசையில், முதல் பெருமாளுக்கு முன்பாக, மாமுனிகளை நோக்கி நிற்பார்.

இப்போது கருடசேவை மெதுவாக ஆரம்பித்து ஊரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவர்.

















பெரும்பாலான வீடுகளில் ஆழ்வாருக்கும், பெருமாளுக்கும் மாலைகள்,வஸ்த்ரம்,பழங்கள் சமர்ப்பிப்பர். அத்யாபகர்கள்,ஆழ்வார் திருநாங்கூர் திவ்ய தேசங்களைப் பாடிய, பெரிய திருமொழி பாசுரங்களைச் சேவித்துக் கொண்டு வந்து, மாமுனிகளும் ஆழ்வாரும், பந்தலுக்கு எழுந்தருளியதும்,முடிப்பார்கள். 

வீதிப்புறப்பாடு முடிந்து இன்று அதிகாலை  பந்தலுக்குத் திரும்பினர். அனைவரும் கும்ப/மங்கள ஆரத்தி கண்டு அவரவர் குறுமண்டபங்களுக்கு எழுந்தருள்வார்கள்.

அங்கு உபயதாரர்கள் மரியாதை ஆகி, பெருமாள் அலங்காரம் கலைந்து,மெல்லிய பட்டுப் போர்வை சாற்றி, அவரவர் ஆஸ்தானத்துக்கு(திவ்ய தேசகோவில்களுக்குப்) புறப்படுவார்கள்.

ஆழ்வார் இன்று மீண்டும் திருமஞ்சனம் கண்டருள்வார்.







 பின்னர் திருப்பாவை சாற்றுமறை முடிந்து திருநகரிக்குப் புறப்படுவார்.செல்லும் வழியில், திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள், திருத்தேவனார்தொகை-மாதவப்பெருமாள், திருவாலி லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் ஆகியோரை அவர்களது திவ்யதேசங்களில்  மங்களாசாசனம் செய்துவிட்டு, இரவு 10 மணியளவில்,தம் ஆஸ்தானமான திருநகரி கல்யாண ரங்கநாதப் பெருமாள் கோவிலைச் சென்றடைவார்.

(--முகநூலில் பதிவிட்ட  பார்த்தசாரதி ராமாநுஜதாசன் சுவாமிகளுக்கு நன்றி--)

 திருநாங்கூர் பதினொரு கருட சேவை  பற்றிய காணொளி.




முந்தைய பதிவுகள் 

1.திருநாங்கூர் பதினொரு கருட சேவை - 2026

2. திருமங்கையாழ்வார் மஞ்சக்குளி திருமஞ்சனம்






பெரிய திருமொழி - மூன்றாம் பத்து

எட்டாம் திருமொழி – 

3-8 சலம் கொண்ட இரணியனது

திருநாங்கூர் வைகுண்ட விண்ணகரம்  

1232 

மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா * இலங்கை

வேந்தன் முடி ஒருபதும், தோள் இருபதும் போய் உதிர *

தன் நிகர் இல் சிலை வளைத்து, அன்று இலங்கை பொடிசெய்த *

தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி, உறை கோயில் **

செந்நெலொடு செங்கமலம், சேல், கயல்கள், வாளை *

செங்கழுநீரொடு மிடைந்து, கழனி திகழ்ந்து எங்கும் *

மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *

வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே ! 5



1233 

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் * பெரிய

பேயினது உருவு கொடு மாள, உயிர் உண்டு *

திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் *

தேவன் அவன்மகிழ்ந்து இனிது மருவி, உறை கோயில் **

உண்மை மிகு மறையொடு நல் கலைகள், நிறை பொறைகள் *

உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா * பெரிய

வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *

வைகுந்தவிண்ணகரம் வணங்கு, மட நெஞ்சே! 6



திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺


No comments:

Post a Comment