03 January 2026

திருப்பாவை 20

இருபதாம் பாசுரம் - இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.






திருப்பாவை 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

      கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு

      வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பு அன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

      நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

      இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இடர்வரும் முன்னமே எழுந்தருளி அவர்களுடைய நடுக்கத்தைப் போக்கவல்ல பலத்தையுடைய கண்ணன் எம்பெருமானே! துயில் எழு. 

அடியார்களை ரக்ஷிப்பதில் நேர்மை உள்ளவனே! 

ரக்ஷிப்பதற்குத் தேவையான பலம் உள்ளவனே!

 எதிரிகளுக்குத் துன்பத்தைக் கொடுக்கக்கூடிய பரிசுத்தியை உடையவனே! துயில் எழு. 

பொற்கலசம் போன்ற ம்ருதுவான திருமுலைத்தடங்களையும் சிவந்த வாயையும் மெல்லிய இடையையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! பெரிய பிராட்டியைப் போன்றவளே! துயில் எழு. 

நோன்புக்குத் தேவையான திருவாலவட்டத்தையும் கண்ணாடியையும் எங்களுக்குக் கொடுத்து உனக்கு நாதனான கண்ணனையும் கொடுத்து இப்போதே, நீயே அவனுடன் எங்களை நீராட்ட வேண்டும்.





மார்கழி மாதம் இருபதாம் நாள் பரமபத நாதர் சந்நிதியில்

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , 

உற்சவர் - நப்பினை திருக்கல்யாணம், கண்ணன் ஏழு ரிஷபங்களை அடக்கி நப்பினையை மணத்தல் 









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺

No comments:

Post a Comment