11 September 2021

கவியின் நினைவுகள்

  வாழ்க நலம்...

இன்றைக்கு  மகாகவி பாரதியாரின் நினைவு நாள்...

ஆகவே கவியின் நினைவுகள் சில..
மகாகவி பாரதியாருடைய இளைய மகள் சகுந்தலா. 

இவரை மகாகவி பாப்பா என்றுதான் அழைப்பார். 

பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி "என் தந்தை" எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் ....

  "1940-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அவர் இறந்த நாள் 'பாரதி தின'மாகக் கொண்டாடப்பட்டதை இரண்டாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள நான் ரேடியோ மூலமாகக் கேட்டேன். அவரது கவிதைத் திறமையை, அவர்தம் உயரிய தேசபக்தியை ஜனங்கள் அறிந்து பக்தி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்தம் கவிதையின் மூலமாகத் தம் கருத்துகளை வெளியிட முடியாமல் கட்டுண்டு கிடந்ததை நினைத்து மனம் நொந்து மறுகியதை யாரறிவார்?" என்ற செய்தியோடு தனது நூலைத் தொடங்குகிறார் சகுந்தலா.

 "அவர் ஒரு க்ஷத்திரியனைப் போன்று வீர மரணத்தை விரும்பினார்! போர்முனையிலே முன்னணியில் நிற்பேன், துண்டிக்கப்பட்டு விழுந்த என் சிரசைப் பல்லக்கில் வைத்துக் கொணர்வார்கள்! செல்லம்மா! அப்போது ஜனங்கள் உனக்குச் சேனைத் தலைவனுடைய மனைவிக்குரிய மரியாதை செய்வார்கள் என்பார்.

 'நரைகூடிக் கிழப் பருவமெய்தி, 

கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும், 

பல வேடிக்கை மனிதரைப் போல, 

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்று பராசக்தியிடம் ஒவ்வொரு நாளும் ஸ்நானம் செய்யும் போது கோபத்துடன் கேட்பது போலப் பாடுவார். 


சிறு குழந்தையான என் மனத்தில் அவரது வார்த்தைகள் பசுமரத்தாணி போல பதிந்தன.

 "எனக்குப் பொழுது போவதற்காக எண்ணற்ற கதைகள் சொல்லுவார். தமிழ்க்கதைகள் முடிந்துவிடும். பஞ்ச தந்திரம் மற்றும் சம்ஸ்கிருதக் கதைகள், 'லாபோந்தேன்' எழுதிய ஃபிரெஞ்சுக் கதைகள், அவைகளும் முடிந்து விடும். புதிய புதிய கதைகள், அப்போதைக்கப்போது கற்பனை செய்து கூடச் சொல்வார். நட்சத்திரக் கதைகள், கடலலைக் கதைகள் எனப்பலப்பல." 

"சாதாரணமாக, குழந்தைகளுக்குத் தாய் தந்தையரிடம் மிக்க அன்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் அவரிடம் கொண்டிருந்த அன்பு, மதிப்பு, பக்தி எல்லையற்றவை.

 'அண்ணன் ஒருவனை அன்றியே, 

புவியத்தனைக்கும் தலையாயினோம், 

என்னும் எண்ணம் மனதிடைக் கொண்டவன்' என்று பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனனை அவர் வர்ணிப்பதைப் போல, எனக்கு அவர் எது கூறினாலும் என்ன சொன்னாலும் வேதவாக்கு என்ற நம்பிக்கை." 

"எனக்குத் தந்தையிடம் மிக்க சலுகை உண்டு. அதனால், ஒரு நாள், என் தாயார் சொல்லியதைக் கேளாமல் மறுத்துரைத்தேன். அவர் உடனே 'தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா' என்று பாடினார். நான் செய்ய வேண்டியதற் கெல்லாம் ஒரு பாட்டு இப்பொழுது எழுதிக் கொடு என்று கேட்டேன். உடனே 'பாப்பா பாட்டு' எழுதிக் கொடுத்தார்." 

"எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கும். எங்கள் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடுவது வழக்கம். முதன் முதலாக, அப்பா எனக்குப் பிரசங்கம் செய்யக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு ஸ்வாமி விவேகானந்தருக்கு வணக்கமும், விவேகானந்தர் சரித்திரத்தின் சுருக்கமும் எழுதிக் கொடுத்துப் படிக்கும்படி செய்தார். ராமகிருஷ்ணரின் சரித்திரம், தேவி நிவேதிதாவின் சரிதை இவற்றைச் சிறிய கதைகள் போல எனக்குச் சொல்வார்." மகாகவியின் இறுதி நாட்கள் -

 "என் தந்தையார், தமக்கு உகந்த தொழிலான பத்திரிகைக்கு வியாசம் எழுதுவதிலும், பாட்டுகள் புனைவதிலும், நண்பர்களுடன் சல்லாபம், கடற்கரைக் கூட்டங்கள், நிபுணர்களுடன் சங்கீத ஆராய்ச்சி முதலியவற்றாலும் சிறிது மனச்சாந்தி பெற்றவராகக் கூடியவரை உற்சாகத்துடன் இருந்து வந்தார். ஆனால் யானையினால் தள்ளப்பட்டு நோயில் வீழ்ந்த பின், அவரது உடல்நிலை அத்தனை திருப்திகரமானதாக இல்லை. மிகுந்த பலஹீனமாகவே காணப்பட்டார். ஸ்ரீ வ.வெ.சு.ஐயர் 'தேசபக்தன்' பத்திரிகையை அப்பொழுது நடத்தி வந்தார். அவரும் அடிக்கடி என் தந்தையாரைச் சந்தித்துப் பேசுவார். 

சில சமயங்களில், காலை வேளையில் தெருக்கள் தோறும் பஜனை செய்துகொண்டும் போவோம்.

 என் தந்தை ஒரு அடி பாடுவார். நாங்கள் அதைத் திரும்பப் பாடுவோம். ஸ்ரீ ஐயருக்குப் பாடத் தெரியாது. எனினும் ஆவல் மிகுதியால் கூடியமட்டில் எல்லோருடனும் சேர்ந்து பாட முயல்வார். திருவல்லிக்கேணியில் சில பெரிய தெருக்கள் வழியாகச் சென்று பார்த்தஸாரதி கோயில் வாசலில் வந்து பஜனை முடிவடையும்.

 "இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருந்தபோது என் தந்தையார், திடீரென வயிற்றுக் கடுப்பு நோயால் பீடிக்கப்பட்டார். ஏற்கனவே, மிகுந்த பலஹீனமடைந்த உடலானபடியால் வியாதியின் கடுமையைத் தாங்கமுடியவில்லை. உற்ற நண்பர்கள் சிலர் எப்பொழுதும் வந்து கூட இருந்து உதவினார்கள். ஸ்ரீ வ.வெ.சு.ஐயரைத் 'தேசபக்தன்' ஆசிரியர் என்ற ஹோதாவில் அவரது பத்திரிகையில் வெளியான கட்டுரை ராஜத் துவேஷம் உள்ளது என்ற குற்றத்திற்காகக் கைது செய்தார்கள்.

 ஸ்ரீ ஐயர், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகுமுன், வாரண்டுச் சேவகர்கள், போலீஸ் உத்தியோகஸ்தர்கள், மற்றும் சில நண்பர்கள் யாவரும் பின் தொடர நோயுற்றுப் படுத்த படுக்கையாக இருந்த என் தந்தையாரிடம் கடைசி முறையாக விடை பெற்றுச் சென்றார்.

 "கடைசிவரை, தாம் பிழைத்தெழுந்து விடுவோம் என்றுதான் என் தந்தை எண்ணியிருந்தார். சாகாதிருக்கும் வழியைப் பற்றிச் சதா காலமும் பிரசங்கம் புரிந்தவருக்குச் சாக மனம் வருமா? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம், பதினொன்றாம் தேதி - சாயங்காலம், விளக்கேற்றும் நேரம், 'இன்றிரவு, தப்பினால்தான் பிழைப்பார்' - அதாவது, இனிமேல் நம்பிக்கையில்லை - என்று வைத்தியர் சொல்லிவிட்டார்.

 எது நேருமோ வெனக் கிலி பிடித்த மனத்துடன், என் தந்தை படுத்திருக்கும் அறை வாயிலில் உட்கார்ந்திருந்தேன். சில நாட்களாகவே என் தந்தையார் மருந்து சாப்பிட மறுத்து விட்டார். மிகுந்த சிரமத்துடன் கட்டாயப் படுத்தித்தான் மருந்து கொடுக்க வேண்டி வந்தது. 

அன்று, "அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால், ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்" என்று என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். 

மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்தென்று நினைத்து, பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த 'பார்லி' தண்ணீரை அவரிடம் கொடுத்தேன். 

மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனத்தில் என்ன தோன்றியதோ? என் கையிலுள்ள கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார். 

"பாப்பா! நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா! கஞ்சி!" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார். 

எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கிவிட்டேன் போலும்!". 

("பாரதி - என் தந்தை" என்ற நூலில் இருந்து  திருமதி சகுந்தலா பாரதி. )

இவைகள் நடந்து நூறு வருடங்கள் கடந்து விட்டது  ஆனாலும்  இப்பொழுது நடந்தது போல மனது கனக்கிறதே ...

வாழ்க கவியின் புகழ்..

2 comments:

 1. நல்ல தகவல்கள் அனு! அவரது மகள் வழியாக அறிவது கூடுதல் சிறப்பு. மகாகவி வாழ்க!

  உங்கள் குரலில் காக்கைச் சிறகினிலே நல்லாருக்கு அனு. உங்கள் குரல் வெகு இனிமை!

  பாட்டு கற்றுக் கொண்டிருக்கிறீர்களா? தெரியும் என்றால் பாடியும் பதியலாம் அத்தனை இனிய குரல். உங்கள் குரல் உங்களை ஒரு சிறுமியாகத்தான் காட்டுகிறது. இதை உங்களிடம் பேசும் போதே சொல்லியிருக்கிறேன் இல்லையா?!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி கீதா அக்கா ...

   பாட்டு எல்லாம் கேட்க மட்டுமே தெரியும் அக்கா,பாடவெல்லாம் தெரியாது ..

   Delete