திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் -
திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இங்கு புண்டரீகாக்ஷன் என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு அருகில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாக பேருந்தில் செல்லலாம்.
திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. வெண்மையானா பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.
சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம். திருமகள் க்ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை.
மூலவர்: புண்டரீகாக்ஷன் – செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
தாயார்: செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.
தீர்த்தம்: திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.
தல விருட்சம்: வில்வம்
விமானம்: விமலாக்ருதி விமானம்
தல வரலாறு -
ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், ”லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்” என்கிறார்.
அதற்கு லட்சுமி, ”தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு” என்கிறாள்.
இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள்.
அதற்கு பெருமாள், "உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்” என்கிறார்.
ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது.
அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான்.
அதற்கு முனிவர்,”நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்” என்கிறார்.
அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார்.
இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,” நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்கிறார் பெருமாள்.
இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான்.
ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,”உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக” என்கிறார்.
அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
ஸ்தல பெருமை
108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார்.
இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும்.
இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது.
அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது.
பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி “தட்சிணாயணம்’ ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்.
இரண்டாவது வழி “உத்தராயணம்’ தை முதல் ஆனி வரை திறந்திருக்கும்.
இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.
பெருமாளுக்கு அருகே சூரிய, சந்திரா் சாமரம் வீச, கருடனும் ஆதிசேஷனும் நின்ற திருக்கோலத்தில் பெருமாளை வணங்கிக் கொண்டிருக்கின்றனா். பெருமாளின் திருவடியில் மாா்க்கண்டேயா் தவம் செய்யும் கோலத்தில் அமா்ந்துள்ளாா்.
|
இணையத்திலிருந்து |
திருமகள் தங்கி இருந்த பூங்கிணறு, திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம், மணிகா்ணிகா என 8 தீர்த்தங்கள் இங்கு உள்ளன.
சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் பெயர் வந்தது.
சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன.
ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேசன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை.
இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’. தாயாருக்கு சிறப்பம்சம் உள்ள இவ்விடத்தில் அவரை வணங்கிய பின்னே இறைவன் சந்நதிக்கு செல்ல இயலும்.
பல்லக்கு புறப்பாடு ஆகும் பொழுதும் தாயார் பல்லக்கு முன்செல்ல, மூலவர் பல்லக்கு அதை தொடர்ந்து செல்லும். மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின்தொடர்வார்.
திருமகள் தவமிருந்து பெருமாளை அடைந்த தலமும் இது. திருவெள்ளறை தலத் தீர்த்தமான பூங்கிணற்றில் திருமகள் பங்கஜவல்லி (பங்கயச்செல்வி) தவமிருந்த வேளையில் திருமால் ஆலிலை துயின்ற ஆதிபிரான் கோலத்தில் காட்சி அளித்து திருமகளுக்கு அருள் செய்தார். எனவே ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கிருஷ்ணனின் அம்சமானவர் என்றும் கூறப்படுகிறது. பங்கயச் செல்வி, பரிமளதேவி, செண்பகவல்லி என்றெல்லாம் போற்றப்படும் தாயாருக்கே இங்கு எல்லா முதல் மரியாதையும்.
பிரம்மாண்டமான மதில்கள் கொண்ட கோவில் , மதில்களை சுற்றியும் அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டு மிக சிறப்பாக பராமரிப்புகளுடன் திகழ்கிறது.
கீழே புஷ்கரிணிக்கு இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக உள்ளது.
தாயார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் தனிக்கோவில் நாச்சியார் - அழகாக சேவை சாதிக்கிறார்.
இங்கு உள்ள சிறிய திருவடி ஆஞ்சநேயர் மிகவும் விசேஷம். மூலவரின் திருக்கண்கள் நம்மை நேரே நோக்குவது போல உள்ளன.
வெளிப்பிரகாரத்தில் ஆசார்யர் மணவாள மாமுனிகள் சன்னதி புதுப்பொலிவுடன் திகழ்கிறது. கோவிலுக்கு வெளியில் மொட்டை கோபுரத்துக்கு எதிரில் எம்பெருமானார் சன்னதி உள்ளது.
இங்குள்ள புகழ்பெற்ற 'ஸ்வஸ்திக் குளம்’ என்ற சக்கரக்குளத்தின் சிறப்பு, ஒரு துறையில் குளிப்பவா்களை எதிர் துறையில் குளிப்பவா்கள் பார்க்க முடியாது என்பதே. ஸ்வஸ்திக் வடிவ நான்கு புறத்திலும் 52 படிகள்உள்ளன. இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி, மாற்பிடுகு பெருங் கிணறு' என்றும் அழைப்பர்.
வென்றி மா மழு ஏந்தி, முன், மண்மிசை
மன்னரை* மூவெழுகால்
கொன்ற தேவ* நின் குரை கழல் தொழுவது ஓர்
வகை* எனக்கு அருள்புரியே*
மன்றில் மாம் பொழில் நுழைதந்து* மல்லிகை
மௌவலின் போது அலர்த்தி*
தென்றல் மா மணம் கமழ்தர வரு* திரு
வெள்ளறை நின்றானே.
1369
வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு
அருளி* முன்,பரிமுகமாய்*
இசை கொள் வேதநூல் என்று இவை
பயந்தவனே!* எனக்கு அருள்புரியே*
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*
மாருதம் வீதியின்வாய் *
திசை எலாம் கமழும் பொழில் சூழ்* திரு
வெள்ளறை நின்றானே.
1370
வெய்யன் ஆய் உலகு ஏழுடன் நலிந்தவன்*
உடலகம் இரு பிளவா*
கையில் நீள் உகிர்ப் படை அது
வாய்த்தவனே!* எனக்கு அருள்புரியே,
மையின் ஆர் தரு வரால் இனம் பாய* வண்
தடத்திடைக் கமலங்கள்*
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்* திரு
வெள்ளறை நின்றானே.
தாயார் திருவடிகளே சரணம்...
அன்புடன்,
அனுபிரேம்
பதிவு சிறப்பு. கோயில் உலாவின்போது இக்கோயிலுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளேன். இப்பகுதியில் பார்க்கப்படவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஅனு நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் அட்டகாசமாக இருக்கிறது. அந்த மண்டபம் படங்கள் செம
ReplyDeleteகோயில் பசுஞ்சோலையாக இருக்கிறதே..
பெரிய கோயில் போலும்...
சிறப்பாக இருக்கிறது அனு படங்களும் பதிவும்
கீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteபுரட்டாசி முதல் சனிக்கிழமைக்கு அழகான பெருமாள் கோவில் பதிவு. அருமையான அவருடைய தரிசனங்கள். படங்கள் கண்களுக்கும், மனதிற்கும் நிறைவை தருகின்றன. கோவிலைப்பற்றிய செய்திகள், கதைகள் அனைத்தும் சுவையாக சிறப்பாக இருக்கின்றன. நாராயணன் அனைவரையும் நலமுடன் காத்து நல்லருள் தர நானும் அவர் திருவடிப்பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.