23 September 2023

ஸ்ரீ திருநாராயணபுரம்

ஸ்ரீ  திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டை ....

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா வட்டத்தில் மேலுகோட் (மேல்கோட்டை) காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். 

பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலைக் கிராமம். இந்த இடம் திருநாராயணபுரம், யாதவகிரி அல்லது யதுகிரி என்றும் அழைக்கப்படுகிறது. 

மேல்கோட்டையில், ஶ்ரீ செல்வநாராயணர் கோயில் மலையடிவாரத்திலும், ஶ்ரீ யோகநரசிம்மர் கோயில் மலை உச்சியிலும்   அமைந்துள்ளது.











திருநாராயணபுரத்தின் சிறப்புகள்

புராணங்களில் மேல் கோட்டை – 

1. பத்மகூடா, 2. புஷ்கரா, 

3. புத்மசேகரா ,4.அனந்தமாயா ,

 5. யாதவகிரி, 6. நாராயணாத்ரி, 

7. வேதாத்ரி ,8. வித்யா (ஞான) மண்டல், 

9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.


பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன....


1. தெற்கு திசை ஸ்ரீரங்கம்-(தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.

2. கிழக்கு திசை – காஞ்சீபுரம், ஸ்ரீ வரதராஜன்.

3. வடதிசை- திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.

4. மேற்கு திசை- மேல் கோட்டை- திருநாராயணபுரம்.


தலம்-நான்கு யுக ப்ரஸித்தி

மிக  சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களும் ப்ரஸித்தி பெற்றது.

க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராணாத்ரி என்றும்,

த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும்

த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது.

இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது.


தலம்–மண்டபம்

மேலும் ஸ்ரீரங்கத்தை போக மண்டபமென்றும்,

திருமலையை புஷ்ப மண்டபமென்றும்

பெருமாள் கோயிலை தியாக மண்டபமென்றும்

திருநாராயணபுரத்தை – ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர்.


தலம்–அழகு

மேலும் “நடை அழகு” ஸ்ரீரங்கம் எம்பெருமானுக்கு ப்ரஸித்தம்.

திருவேங்கடமுடையான் அமுது செய்யும் ப்ரஸாதங்களில் “வடை” ப்ரஸித்தம்.

பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு ஸமர்ப்பிக்கப்படும் ” குடை” மிகப் பெரியது.

திருநாராயணனுக்கே “முடி” (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது.


தலங்களில்_அழகு….

அரங்கனுக்கு_நடையழகு….-ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரின் நடையழகு சேவை.

வரதனுக்கு_குடையழகு .... காஞ்சி வரதராஜப் பெருமாளின் திருக்குடை…–கொடை அழகு என்றுமாம் –பேர் அருளாளன் அன்றோ –

அழகருக்கு_படையழகு….-கள்ளழகருடன் மதுரைக்கு வரும் படை….

மன்னாருக்கு_தொடையழகு… ஸ்ரீவில்லிப்புத்தூர் ரங்கமன்னாருக்கு ஆண்டாள் சூடிக்கொடுக்கும் மாலை….(தொடை_மாலை)

அமுதனுக்கு_கிடையழகு–குடந்தை ஆராவமுதன் பள்ளிகொண்ட(கிடை)திருக்கோலம்..

நாரணர்க்கு_முடியழகு.. திருநாராயணபுரத்து செல்லப்பிள்ளையின் வைரமுடி சேவை…

திருமலையான்_வடிவழகு… திருப்பதி வேங்கடவனின் தோற்றம் அதியற்புத அழகு–வடை அழகு என்பர்

சாரதிக்கு_உடையழகு…. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் ரதசாரதி உடையலங்காரம் அழகு…



செலுவ நாராயணா  சுவாமி திருக்கோவில் 







பன்னிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் ஸ்ரீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் செய்து “திருநாராயணபுரம்” என அழைக்கும்படி அருளினார்.


ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும், குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது. 

அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள்  உள்ளார்.


 மூலவர் -  திருநாராயணன், -சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம்,

உத்ஸவர் -  ஸம்பத்குமாரர்,

இதர பெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

தாயார்– யதுகிரி நாச்சியார்,  பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

தீர்த்தம்– கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

விமானம் – ஆனந்தமய விமானம்


கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் சுவாமி  ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான்.

இதனால் கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி இராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு வந்தார்.

அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான்.

அவனது மகளுக்கு சித்தபிரம்மை பிடித்திருந்தது. 

அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, சுவாமி ராமானுஜர் உதவியால் அது நீங்கியது.

இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான்.

ராமானுஜர் அவனுக்கு விஷ்ணு வர்தனன் என்ற பெயரைச் சூட்டினார்.

இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோவிலைக் கட்டியவன் இவனே.







திருநாராயணப்  பெருமாள் 


மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது.

அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, 

அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

ராமானுஜர் திருநாராயண புரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்து விட்டு திருமண் அணிந்துக் கொண்டு,கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எரும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். அங்கு பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதித்தார்.


தை புனர்வசு அன்று தான் மேல்கோட்டை திருநாராயண பெருமாள்  எறும்புப் புற்றிலிருந்து  சுவாமி ராமானுஜருக்கு திவ்ய  சேவை தந்த தினம்.


பின் திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார்.சுவாமி  ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது.




கர்ப்பகிருஹத்தில் மேற்கு முகமாக மூலவர் திருநாராயணர் சங்க, சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலத்தில்  கண்ணை விழித்து கருணை பொங்க நம்மைப் பார்க்கிறார். இக்கோயில் தட்சிண பத்ரி என்று அழைக்கப்படுகிறது.




ஸ்ரீ திருநாராயண பெருமாள்.

திருநாராயணபுரத்தில் தனிச்சந்நிதி கொண்டிருக்கும் தாயாரின் திருநாமம் யதுகிரி நாச்சியார் கருவறையில், மூலவர் பாதத்தின் கீழ் பூமிதேவி, வரநந்தினி நாச்சியார் சிலா திருமேனிகள் அலங்கரிக்கின்றன.



மேல்கோட்டை யதுகிரி தாயார் மூலவர்



ஒரு நாயகமாய் ஓட, உலகு உடன் ஆண்டவர்

கரு நாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்

பெரு நாடு காண, இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ. 4-1-1-

3231











தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛


1 comment:

  1. பதிவு நல்லா எழுதியிருக்கீங்க. ஸ்ரீ என்று எழுதும்போதே 'திரு' வந்துவிட்டதல்லவா? அதனால் வெறும் திருநாராயணபுரம் என்பதே போதும்.

    ReplyDelete