30 September 2023

2.ஸ்ரீ செல்வப்பிள்ளை - மேல்கோட்டை







முந்தைய பதிவு .... 

1. ஸ்ரீ  திருநாராயணபுரம்


ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவவதார க்ரமம்-

நான்முகன் தனது மகனான ஸநத்குமாரனுக்குத் திரு நாரணனை எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்த பின்பு

திரு நாராயணனைப் பிரிந்ததால் மிகவும் அவசன்னன் ஆனான் –

அதைப் பார்த்து ஸ்ரீ மந் நாராயணன் தனது திரு மார்பில் இருந்து ஸ்ரீ பூ ஸமேதமான ஒரு திரு மூர்த்தியை ஆவிர்பாவம் செய்து கொடுத்தான் –

நான்முகன் அவனைத் தொழுது கொண்டு வாரா நிற்க ஒரு கால் சக்கரவர்த்தி திருமகன் லப்த்வா குலதனம் ராஜா -என்கிறபடியே

ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பெரிய பெருமாளை எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்த பின்பு

தன்னகத்தில் திருவாராதனத்துக்கு அர்ச்சாவதார இல்லாமையால் இழவு பட்டு இருக்கும் சமயம் இந்த மூர்த்தியை

நான்முகன் சக்கரவர்த்தி திருமகனுக்கு எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்தான் –

அது முதல் -ஹ்ருத உத்பவன் -என்ற திருநாமம் உடைய இவருக்கு -ராம பிரியன் -என்ற திருநாமம் ஆயிற்று –


செல்லப்பிள்ளை கண்ணன் திரு மாளிகைக்கு சேர்ந்த க்ரமம்

சக்கரவர்த்தி திரு மகன் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றபடியே

திரு அயோத்யையில் இருந்த சராசரங்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு தன்னுடைச் சோதிக்கு சேரும் பொழுது

இந்த ராம பிரியணை  திருவடி கையிலே கொடுத்தான் –

அவன் சக்கரவர்த்தி திருமகன் திருக்குமாரரான குசா மஹாராஜனுக்குக் கொடுத்தான் –

குசன் தனது பெண் குழந்தையான கனக மாலினிக்கு ஸ்த்ரீதனமாகக் கொடுத்தான் –

அந்த கனக மாலினி யது வம்சத்தில் யது சேகரன் என்கிற வரனைக் கைப்பிடித்ததால் -அந்த வம்சக் க்ரமத்தாலே

ஸ்ரீ ராமபிரியன் கண்ணனுடைய திரு மாளிகையிலும் சேவையைக் கைக் கொண்டு நின்றான்


வைரமுடி சரித்திரம்

ஒரு கால் விரோசனன் என்கிற அசுரன் -தனது தகப்பனாக ப்ரஹ்லாதன் விஷயத்தில் தேவதைகளுக்கு இருக்கும்

விஸ்வாசத்தைப் பற்றித் தானும் அவர்களோடே கூட பாற்கடலில் பள்ளி கொண்ட அநிருத்த பகவானை சேவித்துக் கொண்டு இருந்து –

பகவான் யோகத்துயில் கொண்டு இருக்கும் பொழுது யாரும் இல்லாத சமயத்தில்

பகவானுடைய கிரீடத்தைப் பறித்துக் கொண்டு பாதாள லோகம் சேர்ந்தான் –

பிறகு அந்தரங்க கைங்கர்ய பரர்கள் பகவானுடைய திருமுடியைக் காணாமல் -இது விரோசனன் செய்த தீம்பு என்று சங்கித்து

ஸ்ரீ கருடாழ்வானை அனுப்பினார்கள் –

வைநதேயன் பாதாள லோகம் சென்று விரோசனனை ஜெயித்து அநிருத்தனனுடைய கிரீடத்தை மீட்டுக் கொண்டு

மகா வேகத்துடன் வாரா நின்றான் –


வைரமுடியை கண்ணனுக்கு சமர்ப்பித்தது –

இப்படி பெரிய திருவடி ஆகாச மார்க்கத்தில் வரும் பொழுது தன்னுடைய கதி தடைப்பட்டதைப் பார்த்து விஸ்மதனாய்-

நான்கு பக்கமும் பார்த்தாலும் ஒன்றும் புலப்படாமல் கீழே பூமியைப் பார்த்தான் –

மயில் பீலிகளாலும் குஞ்சா மணிகளாலும் அலங்க்ருதனாய் வேணு கானம் பண்ணிக் கொண்டும் பிருந்தாவனத்தில்

ஆநிரைகளைக் காத்துக் கொண்டும் இருக்கிற கோபாலனைக் கண்டான் –

பரம ஆனந்த பூரிதனாய் -இவனால் தான் என்னுடைய கவனம் நழுவிற்று -என்று நிச்சயித்து –

பகவானுடைய கருத்தின் படியே அந்தக் கிரீடத்தை கண்ணனுடைய சிரஸ்ஸிலே சமர்ப்பித்தான்-

அநேக யோஜனை விஸ்தாரமான அந்த முடியானது பகவானுடைய சங்கல்பத்தாலே கண்ணனுடைய சிரஸ்ஸுக்குத் தகுதியாக மாறி விட்டது –

பிறகு கண்ணனை ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைப் பண்ணி வணங்கி கருடன் பாற் கடல் சேர்ந்தான் –

அங்கு எல்லாருக்கும் இந்த விஷயத்தைச் சொல்ல அவர்களும் ஆனந்தித்தார்கள் –


கண்ணன் செல்லப்பிள்ளைக்கு வைரமுடியை சமர்ப்பித்தது –

கண்ணன் தனது க்ருஹ அர்ச்சையான ராமப் பிரானுக்கு -அந்த முடியை சமர்ப்பித்தான் –

அது அவனுடைய சங்கல்பத்தாலே செல்வப்பிள்ளைக்குத் தகுதியாக போக்யமாய்த் தலைக்கட்டிற்று –

இவ்விதமாக வைரமுடியைச் சாற்றி ராமப் பிரியனை நித்ய ஆராதனம் செய்து கொண்டு இருந்தான் –

இப்படி இருக்கும் பொழுது ஒரு சமயம் நம்பி மூத்தபிரான் தீர்க்க யாத்திரைக்காக எழுந்து அருளினை காலத்தில்

இந்த நாராயணாத்ரிக்கு வந்து கல்யாணி தீர்த்தத்தில் அவகாஹித்து ஆனந்த மய திவ்ய விமான மத்யஸ்தரான

திரு நாராயணப் பெருமாளைச் சேவிக்க -தம்முடைய க்ருஹ அர்ச்சையான ராமப் பிரியனைப் போலவே இருக்கிறார் -என்று

அறிந்து ஸ்ரீ மத் துவாரகைக்கு எழுந்து அருளி

தென் திசையில் தென் பத்ரி -என்னும் நாராயணாத்ரியில் நம்முடைய ராமப் பிரியனைப் போலவே இருக்கும்

ஒரு பெருமாள் இருக்கிறார் -என்று சொன்னார் –

கண்ணன் இதை ஒப்புக் கொள்ளாமல் -நம்பி மூத்தபிரான் யாதவர்கள் எல்லாரையும் அழைத்து

தானே ஸ்ரீ ராமப் பிரியனையும் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு நாராயணாத்ரிக்கு வந்து திரு நாராயணன் முன்பே

எழுந்து அருளப் பண்ணி எல்லாரும் சேவித்து இருவரும் ஒரே ரூபத்தை உடையவர்கள் என்று சம்மதித்து ஆனந்தித்தார்கள் –


நாராயணாத்ரிக்கு யாதவாத்ரி என்ற பெயர் வந்தது –

இப்படி யாதவர்கள் எல்லாரும் ஸ்ரீ ராமப் பிரியனை அங்கேயே எழுந்து அருளப் பண்ணி அந்தந்த உத்சவ காலங்களில்

தாங்களும் அங்கேயே சென்று உத்ஸவாதிகளை நடத்தி வந்த படியால் இந்த மலைக்கு யாதவாத்ரி என்று அது முதல் திரு நாமம் ஆயிற்று –

இப்படி திரு நாராயணன் -செல்வப்பிள்ளை இருவரும் ஒரே இடத்தில் மூல பேரராயும் உத்சவ பேரராயும்

நம்முடைய பாக்ய அதிசயத்தாலே சேர்ந்தார்கள் –



-என் செல்வப்பிள்ளையே -சம்பத்குமாரா

சுவாமி ராமானுஜர் திரு நாரணனுக்கு  நித்ய ஆராதனம் செய்து கொண்டு இருந்தார் –


அப்பொழுது இவருக்குத் தகுதியாய் இருக்கிற உத்சவ மூர்த்தி எங்கே இருக்கிறார் -என்று சிந்திக்கும் சமயத்தில் –

டில்லீசன் இடத்தில் நம் உத்சவ மூர்த்தி இருக்கிறார் - அங்கே சென்று அழைத்து வாரும் -என்று திரு நாராயணன் நியமிக்க

உடையவர் டில்லிக்குப் போய் அரசன் இடம் தம் கருத்தைச் சொல்ல - அவன் சொல் படி தாமே போய் விக்கிரகங்களுக்கு

சமூகத்தில் தேடிய போதும் ராமப் பிரியன் என்கிற உத்சவ மூர்த்தி அகப்பட வில்லை –

மறுபடியும் யோசிக்கிற பொழுது அந்த ராமப் பிரியன் வந்து அரசனுடைய அந்தப்புரத்தில் அரசன் மகளுடன் போகத்தில் இருக்கிறேன் -என்னை அழைத்துக் கொள்ளும் என்று சொன்னார் –

அனந்தரம் உடையவர் அரசனிடம் போய் -

எமது பெருமான் உன் அந்தப்புரத்தில் இருப்பார் -என்று கூற –

அரசன் உடனே இவரை உள்ளே அழைத்துச் சென்று

உமது பெருமாள் இங்கே இருந்தால் கூப்பிட்டு அழைத்துக் கொள்ளும் என்றான் –

உடனே உடையவர் என் ராமப்பிரியனே வா என்று அழைக்க

 -ராமப்பிரியன் இரண்டு மூன்று வயது குழந்தை போலே

சர்வ ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய்

திருக்காலில் சதங்கை ஓசையுடன் வந்து -என் தந்தையே -என்று சொல்லி உடையவர் மடியிலே அமர்ந்தான்

அப்போது உடையவர் -என் செல்வப்பிள்ளையே -சம்பத்குமாரா -என்று அழைத்து ஆனந்தக்கடலில் மூழ்கினார் –

இதைப் பார்த்த அரசன் ஆச்சர்யத்துடன் சத்திரம் சாமரம் வஸ்திர ஆபரணங்கள் முதலான ஸமஸ்த உபசாரங்களை

செல்வப்பிள்ளைக்கு சமர்ப்பித்து உபசரித்து பல்லக்கில் எழுந்து அருள ப் பண்ணி உடையவரையும் மிகவும் மரியாதையுடன் ஆதரித்து

அவருடன் எல்லா விருதுகளையும் அனுப்பிக் கொடுத்தான் –

அந்த அரசனின் மகள் செல்வப்பிள்ளையை விட்டு இருக்க மாட்டாமல் தானும் புறப்பட்டாள் –












இப்படி உடையவர் யதிராஜ சம்பத்குமாரனை மிகவும் வைபவத்துடன் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்து

நித்ய உத்சவ -பஷ உத்சவ-மாச உத்சவ -சம்வத்சர உத்ஸவாதிகளையும் ப்ரஹ்ம உத்ஸவாதிகளையும் நடத்திக் கொண்டு வந்து

யதிராஜ மடம் என்கிற மடத்தை ஸ்தாபித்து ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை கால ஷேபம் சொல்லிக் கொண்டு

திரு நாராயணன் செல்வப்பிள்ளை இவர்களுக்கு சர்வவித கைங்கர்யங்களையும் சர்வ காலங்களிலும் நடத்திக் கொண்டு

தன்னுடைய அழகிய மணவாளனுடைய பிரிவையும் மறந்து பன்னிரண்டு சம்வத்சரம் இந்த யாதவகிரியில் எழுந்து அருளி இருந்தார்


அப்போது உடையவர் அந்த ஆனந்தமய திவ்ய விமானத்தைச் சுற்றி அழகான கோயில் கட்டி வைத்தார் –

அனந்தரம் குடை சாமரம் விசிறி வெற்றிலை பாக்கு பெட்டி காளாஞ்சி கண்ணாடி கரகம் முதலான சகலவித கைங்கர்யங்களுக்கும்

சோழியரை அழைப்பித்து ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து திரு நாராயணப் பெருமாள் அரையரை விண்ணப்பம் செய்வதற்காகவும்

பல்லாண்டு பாடுவதற்காகவும் அழைத்து கைங்கர்யங்களை நடப்பித்துக் கொண்டு போந்தார் –

அவர்களுக்கு ஐம்பத்து இருவர் என்ற பெயர் கொடுத்து அருளினார் –

அவர்களை சாம்யங்கள் என்று நான்காகப் பிரித்து கிரமமாக திருவனந்த புர தாசர் மேலாக தாசர் திருக்குறுங்குடி தாசர் யதிராஜ தாசர்

என்ற தாஸ்ய நாமங்களைக் கொடுத்து அவர்களுக்கு விருது முதலானவைகளைக் கொடுத்து ஞான உபதேசம் செய்து

செல்வப்பிள்ளையை நீங்கள் கிணற்றின் கரையில் இருக்கும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுவது போலே

பய பக்தியோடு ஜாக்ரதையாக பார்த்துக் கொண்டு எப்பொழுதும் மங்களா சாசனம் செய்து கொண்டு இருக்க வேணும் என்று எச்சரித்து

தன் வஸ்துவை பிறர் கையில் ஒப்புவித்து வைப்பது போலே இவர்கள் இடம் செல்வப்பிள்ளையைக் கொடுத்தார்

உடையவர் திரு நாராயணனுக்கும் செல்வப்பிள்ளைக்கும் யாதொரு குறைகளும் இல்லாத படி ஏற்பாடுகளைச் செய்தார் –


மேல்கோட்டை வைர முடி சேவை

பிரஹலாதனின் மகன் விரோதசனன் பாற் கடலுக்குச் சென்று வைரமுடியை கொண்டு வந்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்து விடுகிறான். கருடன் அதை மீட்டுக் கொண்டு வரும் போது கண்ணனின் வேய்ங்குழல் நாதம் கேட்டு அவனுக்கு அணிவித்து விடுகிறார்.

கிருஷ்ணன் அதைப் பிறகு இந்த உற்சவ மூர்த்திக்கு அணிவித்து விடுகிறான்.

கலியுகத்தில் அதை வருடத்தில் ஒருநாள் பங்குனி உத்திரத்தன்று அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.

கருடனுக்கு வைநதேயன் என்றொரு பெயர் உண்டு. இந்த முடி பெரிய திருவடியின் பெயரால் வைநமுடி என்று வழங்கப்பட்டுப்

பின்னாளில் வைரமுடி என்று மருவியதாகவும் ஐதீகம்.

அந்த கருடன் கொண்டு வந்த வைர முடியில் கருடனில் பெருமாள் பங்குனி மாதம் புஸ்ய நட்சத்திரத்தன்று சேவை சாதிப்பதே

மேல்கோட்டை வைர முடி சேவை என்று சிறப்பித்து கூறப்படுகின்றது.


அன்றைய நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு,

தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள செய்யப்படுகிறது.

வைர முடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின் கண் இவ் வைர முடி சேவை இப்போதும் இரவுப் பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது.

மேலும் வைரமுடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைரமுடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.

பங்குனி மாதம் புஷ்ய (பூச) விழா

இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.

வைர முடி சேவை பங்குனி மாதம் புஷ்ய (பூச) நக்ஷத்ரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது.








இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.


திருக்குலத்தார்

ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுசர் மீட்டுக் கொண்டு வரும் வழியில்

எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீ இராமானுசரையும் காத்தனர்.

இதற்கு நன்றி நவிலும் வண்ணம் இராமானுசரின் ஆணைக்கிணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் “திருக்குலத்தார் உற்சவம்” மிகப் பிரம்மாண்டமாய் கொண்டாடப்பட்டு வருகிறது.


க்ருஷ்ண ராஜமுடி சேவையில் 







செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்

மல்கும் கண் பனி நாடுவன், மாயமே!

அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி

நல்கி என்னை விடான் நம்பி நம்பியே   –1-10-8-



தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛



No comments:

Post a Comment