27 September 2023

29. காசி பயணத்தின் நிறைவு பகுதி ---- ஆனந்த பவன் .

 வாழ்க வளமுடன்  
முந்தைய பதிவுகள் ...


 1. வாரணாசி ......28. அலோபி தேவி கோவில், பிரயாக்ராஜ்


அலோபி தேவி கோவில் சென்று  தரிசனம் செய்த பின் அடுத்து நாங்கள் சென்றது ஆனந்த பவனத்திற்கு....


ஆனந்த பவன்


ஆனந்த பவன் அல்லது சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள நேரு குடும்பத்தின் பூர்வீக இல்லமாகும். ஆனந்த பவனில் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பயன்படுத்திய அறைகள் மற்றும் அவர்களின் பொருட்கள்  கண்ணாடி பேழைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

அறையினுள் அவர்கள் பயன்படுத்திய படுக்கை மற்றும் மேஜைகள் உள்ளன. நேருஜி  பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் தன் கைப்பட எழுதிய சில கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு இந்திரா காந்தி 1917 இல் பிறந்தார், இந்திய விடுதலை போராட்டத்திற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனந்த பவனுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் பவன் 1930 இல் மோதிலால் நேருவால் இந்திய தேசிய காங்கிரசுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

ஆனந்த பவனை இந்திரா காந்தி 1970-ல் நாட்டிற்கு அர்பணித்தார்.

 பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்காக இது அருங்காட்சியகமாக அரசால் பராமரிக்கப்படுகிறது. தற்போது ஆனந்த பவன் அல்லது சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாகும்.காந்திஜி  வந்தால், இங்கு தங்க பிரத்யேகமாக ஒரு அறை உண்டு.

 முக்கியமான காங்கிரஸ் கட்சி கூட்டங்கள் நடந்திருக்கின்றன, சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் இங்கு  வந்துள்ளனர். 1970ல், இந்திரா காந்தி, இவ்வீட்டை அரசுக்குக் கொடுதுவிட்டதால், சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்லும் இடமாகி விட்டது. 

இங்கு  ஒரு மணி நேரம் இருந்து அனைத்தையும் ரசித்து பார்த்தோம்.

பின்  மீண்டும் மதிய உணவிற்கு மடத்திற்கு  வந்து விட்டோம்.அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.

 எங்களுக்கு அடுத்த நாள் காலை தான் லக்னோவிற்கு ட்ரெயின். அதனால் மாலை   கிரகணம் முடிந்ததும்,  அருகில் இருந்த சின்ன கிருஷ்ணர்  கோவிலுக்கு  சென்றோம் .

அங்கு  மிக அருமையான சேவை ...அங்கு  சேவர்த்திகள் அழகாக  பாசுர சேவை செய்தார்கள். 

சுவாமி ராமானுஜர் பற்றியும் சில பாடல்கள் வந்தன...பாடியவர்கள் அனைவரும் சிறு பாலகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருப்பவர்கள் சுவாமி ராமானுஜரை பற்றி பாடும்  பொழுது அவரின் ஊரிலிருந்து வருகிறோம் என்பதே மிக நிறைவாக  இருந்தது. ஆனால்  அவர்களின்  அளவிற்கு பக்தி செய்கிறோமா என்றால் இல்லை என்றே எண்ணம் வருகிறது. 

அங்கிருந்த வயதில் மூத்த குருஜியிடம்  நாங்கள் ஸ்ரீரெங்கத்திலிருந்து வருகிறோம் என கூறி, அவரிடம்   நாங்களும் ஆசிர்வாதம்  வாங்கி வந்தோம் . மிக  நிறைவாக  பெரியவரின் ஆசிர்வாதத்துடன் எங்களின்  பயணம் நிறைவு அடைந்தது. 


அடுத்த நாள்  காலை அலகாபாத்தில் இருந்து லக்னோ வரை ட்ரெயினில் வந்து அங்கிருந்து விமானம் வழியாக சென்னை வந்தடைந்தோம்.


ஐந்து  நாள் பயணம் தான்  ஆனால்  நிறைய அனுபவங்களையும், பரவசங்களையும் , மகிழ்ச்சியையும்  தந்த பயணம். தொடர்ந்து பதிவுகள் தருவதில் சிறிது தாமதம்  ஆனாலும்  தொடர்ந்து  வாசித்த  அனைவருக்கும் நன்றிகள் பல .


முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் : 11


கலையார் கலிக்கா ழியர்மன்னன்

நலமார் தருஞா னசம்பந்தன்

அலையார் புனல்சூ ழுமையாற்றைச்

சொலுமா லைவல்லார் துயர்வீடே.

 

கலைவல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப்பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன் அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼


No comments:

Post a Comment