(64) அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
ஆளவந்தார் வீரநாராயணபுரத்தில் பிறந்தார்.
இவருடைய தாத்தா நாதமுனிகள் இவருக்கு யமுனைத் துறைவன் என்று பெயர் சூட்டினார்.
சிறுவயது முதலே கூர்மையான அறிவு படைத்தவராக இருந்தார். ஒரு முறை படித்தாலே அவருக்கு எல்லாம் மனப்பாடமாகிவிடும்.
மாஹாபாஷ்யபட்டர் என்பவரிடம் இவர் சாஸ்திரம் பாடம் கற்றுக்கொண்டு இருந்தார். அந்தச் சமயம் ஆக்கியாழ்வான் என்ற பண்டிதர் இவருடைய ஊருக்கு வந்தார்.
ஆக்கியாழ்வான் ஊரில் உள்ள வித்துவான்களிடம் வாதத்தில் வென்று அவர்களிடமிருந்து கப்பம் வசூலித்துச் செல்வார். பல வித்துவான்கள் இவருடன் எதற்கு வாதம் என்று அவருடைய காலில் விழுந்து கப்பம் செலுத்திவிடுவார்கள்.
ஒரு நாள் ஆக்கியாழ்வான் மாஹாபாஷ்யபட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்பினார். பட்டர் திகைத்து நின்றார். அந்தச் சமயத்தில் பாடம் கேட்டுக்கொண்டிருந்த யமுனைத்துறைவர் அந்த ஓலையைக் கிழித்து எறிந்தார்.
ஆக்கியாழ்வான் சோழ அரசவையின் ஆஸ்தான வித்துவான்.
ஓலை கிழிக்கப்பட்ட விஷயம் அறிந்து அரசன் “ஓலை கிழித்தவர் அரண்மனைக்கு வர வேண்டும்!’ என்று ஓலை அனுப்பினான். அந்த ஓலையையும் யமுனைத்துறைவர் கிழித்து அரசனுக்குத் திருப்பியனுப்பினார்.
அரசன் துணுக்குற்று திகைப்புடன் இவர் சாமான்யரல்லர் என்று ஒரு பல்லக்கை ஏற்பாடு செய்து மரியாதைகளுடன் அரசவைக்குப் பண்டிதர்களுடன் வாதத்துக்கு அழைத்தான்.
யமுனைத்துறைவர் அரசவைக்கு வந்தார். அங்கே ஆக்கியாழ்வானும் அவருக்குக் கீழ் பல பண்டிதர்களும் இருந்தார்கள்.
ஆக்கியாழ்வான் பல்லக்கிலிருந்து இறங்கிய சிறுவனைப் பார்த்து “இந்தச் சிறுபிள்ளையா ஓலையைக் கிழித்தது ? இவனுடனா நான் வாதம் செய்ய வேண்டும் ?” என்றார்
அரசன் “சிறுபிள்ளை என்றாலும் ஓலையைக் கிழித்திருக்கிறார். வாதம் செய்து தான் பாருங்களேன்” என்றார்
“சாஸ்திரம் கற்கப் பல ஆண்டுகள் ஆகும். இவனோ சிறு பிள்ளை சாதாரண விஷயங்களிலேயே இவன் தோற்றுவிடுவான்” என்று ஆக்கியாழ்வான் யமுனைத்துறைவரைப் பார்த்து “சிறுவனே நீ எதைச் சொன்னாலும் நான் அதை இல்லை என்று மறுத்துப் பேசுவேன்!” என்று கர்வத்துடன் சொல்லிவிட்டு “நீ தோற்றால் உன்னிடமிருந்து எதுவும் வேண்டாம். என் கையால் உன் தலையில் ஒரு அடி கொடுப்பேன் அதை வாங்கிக்கொண்டு போய்விடு!” என்றார் ஏளனமாக.
இவர்களைக் கவனித்த அரசனும் அரசியும் தங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக்கொண்டார்கள்.
மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார் என்றும், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்குத் தந்துவிடுவதாகச் சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படித் தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்குப் பணிப்பெண்ணாவேன்” என்றாள்.
போட்டி ஆரம்பித்தது, யமுனைத்துறைவர் ”இந்த வாக்கியங்களை மறுத்துப் பேசுங்கள்!” என்று கடகடவென்று மூன்று வாக்கியங்களைக் கூறினார்
உன் தாய் மலடியல்ல
மன்னன் ஒரு சக்கரவர்த்தி
அரசி கற்புக்கரசி
இந்த வாக்கியங்களைக் கேட்ட ஆக்கியாழ்வான் திகைத்தார். இவற்றை எப்படி மறுத்துப் பேச முடியும் ? மௌனமாகத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
“நீர் சொன்ன மூன்று வாக்கியங்களையும் யாராலும் மறுத்துப் பேச முடியாது. உம்மால் மறுத்துப் பேச முடியுமா?” என்று ஆக்கியாழ்வான் கேட்க, யமுனைத்துறைவர் ”ஏன் முடியாது?” என்றார்
ஆக்கியாழ்வான் “என் தாய் என்னை ஈன்றவள் அவளை எப்படி நான் மலடி என்று கூற முடியும் ?” என்று கேட்க அதற்கு யமுனைத்துறைவர் ”ஒரு மரமே உள்ள இடத்தைத் தோப்பு என்று சொல்லமாட்டோம். ஒற்றை மரம் தோப்பு ஆகாது இல்லையா ? நீர் உங்கள் தாய்க்கு ஒரு மரம்போல ஒரே ஒரு பிள்ளை. ஆகையால் ஒரு பிள்ளை பெற்ற தாயும் மலடியே! என்றார்
ஆக்கியாழ்வான் “நம் மன்னன் சக்கரவர்த்தி இல்லை” என்று எப்படி சொல்லுவாய் ?” என்றார்.
சக்கரவர்த்தி என்றால் பூமியை ஆள்பவர் என்று பொருள். ஒரு சிறிதளவு சோழ தேசத்தை ஆளும் மன்னனை எப்படி பூமியை ஆளும் சக்கரவர்த்தி என்று கூறலாம் ?” என்றார்
ஆக்கியாழ்வான் ’அரசி கற்புக்கரசி இல்லை” என்று சொன்னால் உனக்குத் தண்டனை கிடைக்கும். ஜாக்கிரதை!” என்றார்.
அதற்கு யமுனைத்துறைவர் “பெண் தன் கணவனைத் திருமணம் செய்யும் முன் சாஸ்திரப்படி தேவர்களுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அதனால் அதையும் மறுக்க முடியும் அல்லவா ?” என்றார்
ஆக்கியாழ்வான் யமுனைத்துறைவர் முன் வந்து அடி வாங்கிக்கொள்ளத் குனிந்து தலையைக் காண்பித்தார்.
யமுனைத்துறைவர் ”நீங்கள் வயதில் என்னைவிட மிக மூத்தவர் உங்களை என்னால் அடிக்க முடியாது!” என்றார்.
யமுனைத்துறைவர் பதிலைக் கேட்ட அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான்.
ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்துச் சிறுவனை அணைத்து மடியில் வைத்துக்கொண்டார். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற பெயர் உண்டாயிற்று.
ஆளவந்தார் தனக்குத் தரப்பட்ட ராஜ்ஜியத்தை அரசாட்சி செய்து வந்தார்.
ஒரு நாள் மணக்கால் நம்பி (நாதமுனிகள் வழி சிஷ்யர்) ஆளவந்தாரைக் காண வந்தார். அவரால் அரண்மனைக் காவலைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களிடம் ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தைத் தெரிந்துகொண்டார்.
அவர்களுடன் நட்பாகி தினமும் தூதுவளைக் கீரையைக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.
பல மாதங்கள் தொடர்ந்து கீரையைக் கொடுத்தார். பிறகு நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை நிறுத்துவிட்டார்.
ஆளவந்தார் தினமும் சாப்பிடும் கீரை இல்லாததை கண்டு “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாகக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ”அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்” என்று ஆளவந்தார் கட்டளையிட்டார்.
மறுநாள் கீரையுடன் வந்த நம்பியைச் சமையற்காரர் ஆளவந்தாரிடம் அழைத்துக்கொண்டு சென்றார்.
ஆளவந்தார் நம்பியைப் பார்த்து ”என்னிடம் ஏதோ எதிர்பார்த்து தான் நீங்கள் இவ்வளவு காலமாகக் கீரையை கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் ?” என்று கேட்டார்.
நம்பி ”எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆனால் உங்களுக்கு ஒன்று தர வேண்டும்!” என்று கூறினார்.
ஆளவந்தார் “என்ன தரப் போகிறீர் ?” என்றார்.
“உங்கள் பாட்டனார் நாதமுனிகளின் நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உங்களிடம் அளிப்பதற்கே இங்கே வந்தேன்” என்றார்.
”எனக்கு ஒரு நாடு இருக்கிறது, பெரிய அரண்மனை இருக்கிறது. செல்வம் இருக்கிறது. நீங்கள் கொடுக்கப் போகும் நிதி எனக்கு வேண்டாம். அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
அதற்கு ”அது முறையாகாது என் கடைசிக் காலத்துக்குள் உங்கள் பாட்டனாரின் நிதியை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றார்
ஆளவந்தார் “எங்கே என் பாட்டனின் நிதி ?” என்று கேட்க நம்பிகள் ”என்பின் வாருங்கள்” என்று திருவரங்கம் அழைத்துச் சென்றார்.
திருவரங்க கோயிலுள் அழைத்துச் சென்றார்.
அங்கே பெரிய பெருமாளைக் காண்பித்து திருப்பாணாழ்வார் பாசுரத்தைப் பாடி பெரிய பெருமாளைக் காண்பித்து “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் நிதி இதுவே” என்றார்.
”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்ட பெரியபெருமாள் ஆளவந்தாரைப் பார்த்தார். அதன் பிறகு ஆளவந்தார் நாடு, அரண்மனை, செல்வம் என்று எல்லாவற்றையும் துறந்து, துறவு மேற்கொண்டு திருவரங்கத்திலேயே இருந்தார்.
ஒரு நாள் திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆரம்பித்தது. பகல் பத்து, இராப்பத்து என்று இருபது நாள் உற்சவம். கடைசி நாள் உற்சவத்தில் அரையர் சேவை நடந்துகொண்டு இருந்தது. நம்மாழ்வார் பாசுரத்துக்குத் திருவரங்கப் பெருமாள் அரையர் அபிநயத்துடன் பாசுரங்களைப் பாடிக்கொண்டு இருந்தார்.
கோஷ்டியுடன் ஆளவந்தார் அனுபவித்துக்கொண்டு இருந்தார். நம்மாழ்வாரே அரையர் ரூபத்தில் பாடுவது போல அவருக்குத் தோன்றியது.
அரையர்,
கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர்!-நாம் உமக்கு அறியச் சொன்னோம்.
3909
என்று பாடினார்.
என்னைச் சேர்ந்தவர்களே! இப்போதே எழுந்திருங்கள் உடனே திருவனந்தபுரம் நடந்து சென்று அவன் பாதத்தை வணங்கலாம். பாவங்களைக் களையலாம் என்று நம்மாழ்வார் எல்லோரையும் அழைக்கும் இந்தப் பாசுரத்தைக் கேட்டு அனுபவித்தார்.
அன்று அரையருக்கு என்ன தோன்றியதோ இந்தப் பாசுரத்தை மீண்டும் ஒரு முறை ஆளவந்தாரைப் பார்த்துக்கொண்டே.
அபிநயம் செய்தார்.
இரண்டாம் முறை 'நடமினோ, நமர்கள் உள்ளீர்! நடமினோ, நமர்கள் உள்ளீர்! நடமினோ, நமர்கள் உள்ளீர்!’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கிளம்புங்கள், கிளம்புங்கள் சீக்கிரம் கிளம்புங்கள் என்பது போலக் கையை அசைத்து அபிநயம் செய்தார்.
நம்மாழ்வார் அரையர் ரூபத்தில் தம்மைத் தான் கூப்பிடுகிறார் என்று நினைத்த ஆளவந்தார் உடனே எழுந்தார், திரிதண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார், மடத்துக்குக் கூடச் செல்லாமல், அவர் சிஷ்யரைக் கூப்பிட்டு மடத்திலிருந்து ”தினமும் பூஜை செய்யும் பெருமாளை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று உடனே புறப்பட்டார் அனந்தபுரத்துக்கு.
பக்கத்தில் இருந்த தன் சிஷ்யர் தெய்வவாரியாண்டானிடம் “நான் திரும்பி வரும் வரையில் மடத்தைப் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று வேகமாக அனந்தபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“சாமி ! நான் நம்மாழ்வார் பாடலைக் கேட்டு ஆளவந்தார் போல உடனே திருவனந்தபுரம் செல்லவில்லையே! அதனால் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
65. திருநாவாய்
ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாராயணாய நமஹ
ரகசியம் தொடரும்...
கருத்தில் தேவும் பாசுரத்தில், மாயப்பிரானை அன்றி என வரணும். ஆரே என்றுதான் எழுதுவார்கள். யாரே என்றல்ல.
ReplyDeleteநன்றி சார் ..
Deleteநான் சேவிக்கும் ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடு பிரபந்தத்தில் யாரே என்று தான் உள்ளது. தமிழ் வேதம் தளத்திலும் அவ்வாறே.
இப்பொழுது தங்களின் கருத்துரை பார்த்து புத்தூர் ஐயங்கார் சாமி பதிப்பை பார்க்கும் பொழுது ஆரே என்று உள்ளது.
நன்றி சார் மாற்றி விட்டேன்
எழுதியது தவறோன்னு நினைத்தேன். நீங்க பதிவுகளில் பிரபந்த பாசுரங்களை விடாம எழுதறீங்க. தவறு வந்துடக்கூடாதுன்னு நினைத்தேன். நிறைய பாடபேதங்கள் வேறு இருக்கிறது.
Delete