24 March 2024

68.கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே !

 (68) கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப் போலே !




பிரகலாதனுடைய மகன் விரோசனன். விரோசனனின் மகன் தான் பலி சக்கரவர்த்தி. மகாபலி என்று கூறுவோம். பிரகலாதனின் பேரப் பிள்ளை. இவனும் அசுரன். இவன் தேவர்களை அடக்க எண்ணி தன் குல குருவான சுக்கிராசாரியார் உதவியுடன் பல யாகங்கள் செய்தான். பலன் பெற்றான். அந்தப் பலனால் இந்திரனை விரட்டி அடித்தான். ‘பு, புவ சுவ’ என்ற மூன்று லோகங்களையும் கைப்பற்றினான்.


இந்திரன் மகாபலியுடன் சண்டை போட முடியாமல் திருமாலிடம் வந்து “நீங்கள் தான் காக்க வேண்டும் !” என்று காலில் விழுந்தான்.

 திருமாலும் “சரி உன்னைக் காக்கிறேன்” என்று வாமன அவதாரம் எடுத்தார்.


அதிதிக்கும் காசியபருக்கும் பன்னிரண்டாவது மகனாகக் குள்ளமான வடிவத்தோடு வாமனனாகப் பிறந்தார். நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் பிரகலாதனுக்கு “இனி உன் குலத்தில் யாரையும் கொல்ல மாட்டேன்” என்று வாக்கு கொடுத்திருந்தார். அதனால் மகாபலியைக் கொல்ல மனம் வரவில்லை. பிரம்மச்சாரியாக வேடம் தரித்து மகாபலி யாகம் செய்துகொண்டு இருக்கும் இடத்துக்குச் சென்றார்.


யாகம் செய்துகொண்டு இருந்த மகாபலியிடம் சென்று “சக்கரவர்த்தியே ! எனக்குத் தானம் வேண்டும்!” என்று தன் பிஞ்சு வாயால் மழலை மாறாத மொழியில் பிராமணனுக்கே உள்ள வினையத்துடன் கேட்டான். 

இப்படியொரு அழகான குழந்தை தன்னிடம் தானம் கேட்கிறது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் மகாபலி அந்தக் குழந்தையை வரவேற்று “உன்னைப் போல ஒரு அழகான பிரம்மச்சாரி குழந்தையை நான் கண்டதில்லை” இந்தக் குழந்தை என்ன பெரிதாகத் தானம் கேட்கப் போகிறது என்று எண்ணிய மகாபலி “என்ன வேண்டுமோ கேள்!” என்றான். 

“இந்தக் காலால் எனக்கு மூவடி மண் வேண்டும்!” என்று கேட்டது அந்தக் குழந்தை. உடனே மகாபலி “தந்தேன்!” என்றான்.

மகாபலியின் அருகில் குலகுருவான சுக்கிராசாரியார் “அரசே கொடுக்காதீர்கள்! !” என்று தடுத்தார். 

மகாபலி “ஏன் என்னைத் தடுக்கிறீர்கள்?” என்று வினவ. 

சுக்கிராசாரியார் “வந்திருப்பது திருமால், இவன் கபட நாடகம் நடத்தி உன்னை வஞ்சித்து உன் சொத்தை அபகரிக்க வந்துள்ள கள்வன்!” என்று எச்சரித்தார்.

 அதற்கு மகாபலி “கொடுத்தேன்! என்ற வாக்கை என்னால் மீற முடியாது” என்று உரைத்துத் தானம் கொடுக்கக் கையில் கெண்டியை எடுத்தான்.

 உடனே சுக்கிராசாரியார் வண்டு ரூபம் எடுத்துக் கெண்டியின் மூக்கில் அடைத்துக்கொண்டு நீர் வரவிடாமல் தடுத்தார். 

இதை அறிந்துகொண்ட வாமனன் கையில் இருந்த தர்பப் புல்லால் கெண்டியின் துவாரத்தைச் சோதிக்க சுக்கிராசாரியாருக்கு ஒரு கண் போனது.

வள்ளலான மகாபலி நீர் வார்த்தபோது அது வாமனன் கையில் படுவதற்கு முன் வாமனன் கிடுகிடு என்று திரிவிக்கிரமனாய் ஆகாயத்தைத் தாண்டி வளர்ந்தார்.

ஓர் அடியால் கீழ் லோகத்தையும், மற்றொரு திருவடியால் மேல் லோகத்தையும் அளந்து முடித்தார்.

 “மூன்றாவது அடியை எங்கே வைக்க ?” என்று கேட்டார்.

 பலி சக்ரவர்த்தி தடுமாற “என் தலையில் அந்த அடியை வையுங்கள்!” என்று கூற வாமனன் அவனைக் கீழ் லோகத்தில் அடைத்து இந்திரனின் அரசை மீட்டுக் கொடுத்தான்.

 ’கள்வன் இவன் என்றேனோ லோக குருவைப்போலே’ என்று வருகிறது. இதில் லோக குரு சுக்கிராசாரியாரா ?” 

“அறிவால் சிறந்த ஒருவரை தான் லோக குரு என்று கூற வேண்டும். இவர் திருமால் என்று தெரிந்தும், வண்டு ரூபத்தில் தடுக்க எண்ணினார். இவரை லோக குரு என்று கூட முடியாது!”.



நம்மாழ்வார் பெருமாளின் அருளை நேராகப் பெற்றவர் அதனால் இவர் அறிவில் சிறந்தவர். இவரே ’பிரபன்ன ஜன கூடஸ்தர்'. நமக்கு எல்லாம் அவரே தலைவர். அதனால் அவரே லோக குரு!” என்றார்.


மேலும்  நம்மாழ்வார் இந்த கதையும் சொல்லியிருக்கிறார்....

‘கொள்வன் நான், மாவலி, மூ அடி தா’ என்ற கள்வனே!’ என்று பாடி  இருக்கிறார்.

 ”மகாபலியிடம் சென்று, சின்னக் காலைக் காட்டி ‘மூன்று அடி நிலம் தா’ என்று கேட்டுவிட்டு உடனே பெரிய காலால் ஓங்கி உலகம் அளந்த கள்வனே!’ என்கிறார் நம்மாழ்வார். அதனால் ! கள்வன் என்று சொன்ன லோக குரு நம்மாழ்வார் தான் !”.


மற்றும்  ”நம்மாழ்வார் மட்டும் இல்லை ! திருமங்கை ஆழ்வாரும் கள்வன் என்று கூறியிருக்கிறார்!” .

” ‘நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய்... காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா’ என்று பெருமாள் தன் அடியார்களுக்குத் தன்னை மறைத்து மறைத்துப் போக்கு காண்பிக்கிறார் அதனால் திருமங்கை ஆழ்வார் அவரைக் கள்வன் என்கிறார்” 

 நம்மாழ்வாரை லோக குரு என்று சொன்னீர்கள். திருமங்கை ஆழ்வாரையும்  லோக குரு என்று சொல்ல முடியுமா ?”

 திருமங்கை ஆழ்வார் ’‘வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே!’ என்கிறார்.

 திருமங்கை ஆழ்வார் கண்ணமங்கை ’பெரும்புறக் கடல் பெருமாளை’ நோக்கி ’என் பாடல்கள் உனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். புரியவில்லை என்றால் என்னிடம் வந்து பாடம் படி’ என்று பெருமாளையே பாடம் படிக்கக் கூப்பிடுகிறார். பகவானுக்கே பாடம் கற்றுக்கொடுக்கும் ஒருவர் லோக குருவாகத் தானே இருக்க முடியும் ?” 


"லோககுருக்களென போற்றவல்ல ஞானமுள்ளவர்களைப் போல பெருமாளை "கள்வன்" என்றழைத்தேனா? இவ்வூரில் இருக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்றாள் திருக்கோளூர்ப் பெண்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே







திருவாய்மொழி -இரண்டாம் பத்து

2-3 ஊனில் வாழ்
அடியார் குழாத்தைக் கூடுவதற்கு விழைதல்


          
இனி யார் ஞானங்களால்*  எடுக்கல் எழாத எந்தாய்,* 
கனிவார் வீட்டு இன்பமே*  என் கடல் படா அமுதே,*
தனியேன் வாழ் முதலே*  பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,* 
நுனி ஆர் கோட்டில் வைத்தாய்*  உன பாதம் சேர்ந்தேனே. 5

3035
          


சேர்ந்தார் தீவினைகட்கு*  அரு நஞ்சை திண் மதியை,* 
தீர்ந்தார் தம் மனத்துப்*  பிரியாது அவர் உயிரைச்,*
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை*  அரக்கியை மூக்கு- 
ஈர்ந்தாயை,*  அடியேன் அடைந்தேன்*  முதல் முன்னமே. 6

3036


          




69. திருவல்லவாழ்

ஸ்ரீ திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

1 comment:

  1. வாமன அவதாரம் - சிறப்பான பதிவு.

    ReplyDelete