10 August 2024

69. கடல் ஓசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே.

(69) கடல் ஓசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே.





ஆளவந்தார் சிஷ்யர்களில் ஒருவர் மாறனேரி நம்பி. இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்.

மாறனேரி நம்பியின் தொழில் உழுவது. ஒரு நாள் இவர் உழுதுகொண்டு இருக்கும் போது இவருக்குப் பசித்தது.

 கீழே இருந்த வயல் மண்ணை எடுத்து அதை நீரில் அலசி அலசி அம்மண்ணை உண்டார். அந்த வழியே வந்த ஆளவந்தார் இவருடைய இந்தச் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

தன் சிஷ்யர்களுடன் அவரிடம் சென்று “ஐயா நீங்கள் செய்யும் செயல் எங்களுக்குப் புரியவில்லையே! சேற்றில் நின்று கொண்டு சேற்றை உண்ணுகிறீர்களே!” என்றார். 

மாறனேரி நம்பி “சாமி ! மண்ணுக்கு மண்ணை இடுகிறேன்!” என்று பதில் கூறினார்.


இதைக் கேட்ட ஆளவந்தார் இவருடைய ஞானத்தை வியந்து “இவர் நம் மாறன் குருகூர் நம்பிக்கு ( சடகோபன் ) நிகரானவர்!” என்று இவருக்கு மாறனுக்கு நிகரான நம்பி ( மாறனேர் நம்பி ) என்று பெயர் சூட்டி “நீர் என்னுடன் வாரும்!” என்றார். 

மாறனேரி நம்பி “தான் தாழ்ந்த குலம், ஒரு சண்டாளன்!” என்றார். 

அதற்கு ஆளவந்தார் “பெருமாள் நினைப்பில் இருக்கும் உன்னைப் போல ஒருவனுக்கு குல பேதம் எதுவும் கிடையாது!” என்று அழைத்தார். உடனே மாறனேரி நம்பி தன் தொழிலையும், ஏர்க்கலப்பையும், மாடுகளையும், வீட்டையும், உற்றார் உறவினர்களையும் விட்டு விட்டுக் கிளம்பினார்.


ஆளவந்தார் அவருக்குச் சங்கு சக்கர இலச்சினைகளைத் தோளில் பொறித்துத் தாழ்ந்த குலத்தவரான அவரை ’தொண்டர்குலம்’ என்ற உயர்ந்த வைணவ குலத்தில் சேர்த்துக்கொண்டார். 

ஆளவந்தாருடன் அவர் திருவரங்கத்தில் கோயில் பிராகாரத்திலேயே வாசம் செய்யத் தொடங்கினார். ஆளவந்தார் படித்துறை பக்கம் ஒரு சின்ன குடில் அமைத்து இரவு அங்கே உறங்குவார். 

குடிலில் ஆளவந்தாரைப் போல மண்ணில் ஒரு விக்ரகம் செய்து அதைத் தினமும் பூஜித்து வந்தார். பகல் வேளையில் ஆளவந்தாரின் காலட்சேப நல் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டு வந்தார். 


மாறனேரி நம்பி வந்த பிறகு ஆளவந்தார் காலட்சேபம் சொல்லும் போது உரத்த குரலில் தொண்டை புண்படும்படி காலட்சேபம் செய்ய ஆரம்பித்தார். அருகில் இருந்த சிஷ்யர்கள் “நீங்கள் இப்படிச் சத்தமாகச் சொன்னால் உங்கள் தொண்டை புண்படுமே. மெதுவாகப் பேசினாலே எங்களுக்குக் கேட்டும். ஏன் கஷ்டப்படுகிறீர்கள் ?” என்றார்கள். அதற்கு ஆளவந்தார் “நம் மாறனேரி நம்பி வெளியே நின்று கொண்டு இருக்கிறானே!” என்றார்.


தான் ஒரு தாழ்ந்த குலம் என்பதால் மாறனேரி நம்பி மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கேட்க மாட்டார். வாசல் கதவுக்கு வெளியே நின்றுகொண்டு தான் கேட்பார்.


நாளடைவில் பலர் ஆளவந்தார் காலட்சேபங்களைக் கேட்ட தொடங்கினார்கள். காலட்சேபக் கூடம் நிரம்பி வழிந்தது. இடம் போதவில்லை.

 பக்கத்தில் இருந்த ஒரு மூதாட்டியின் வீட்டைச் சேர்த்தால் பெரிதாக இருக்கும் என்று எண்ணினார்கள். அவளிடம் அந்த வீட்டைக் கேட்டுப் பெற்றார்கள். ஆளவந்தாரின் காலட்சேபக் கூடம் விரிவு படுத்தப்பட்டது.

 ஆளவந்தார் ஒரு நல்ல நாள் பார்த்து புண்யாவசனம் செய்து புதுமனை புகுவிழா நடத்திட முடிவு செய்தார்கள். அவ்வேளையில் மாறனேரி நம்பி அங்கே இருந்த கட்டுமான பணியாளரிடம் “நாளை இங்கே புண்யாவாசனம். அந்தச் சடங்கிற்கு முன் இந்தக் கூடத்தை நான் பார்க்க விரும்புகிறேன்! புண்யாவாசனம் செய்த பிறகு என் தடங்களால் இந்த இடத்தை அசுத்தம் செய்ய விரும்பவில்லை” என்றார். 

அந்தப் பணியாளரும் மாறனேரி நம்பியைக் கூடத்துக்குள் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மாறனேரி நம்பியும் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.


மறுநாள் நடக்கவிருக்கும் புதுமனை புகுவிழாவிற்கு ஏற்பாடுகளைப் பார்க்க வந்தார் ஆளவந்தார். “பணிகள் எல்லாம் எப்படி நடைபெறுகிறது ?” என்று கேட்டார். அங்கே இருந்த பணியாளர் ”எல்லாம் நன்றாக நடக்கிறது. சற்றுமுன் கூட உங்கள் சீடர் மாறனேரி நம்பி கூடத்தைச் சுற்றிப்பார்த்தார்!” என்றார். 

ஆளவந்தார் “மாறனேரி நம்பி கூடத்தை முழுவதும் சுற்றிப்பார்த்தாரா ?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணியாளர் “ஆம்! ஒரு இடம் விடவில்லை எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து நீங்கள் அமரும் இடத்தைச் சேவித்துவிட்டுச் சென்றார்!” என்றார்.


ஆளவந்தார் “எப்படி என்றால் நாளை புண்யாவாசம் தேவை இல்லை! ஏற்பாடுகளை நிறுத்துவிடுங்கள்” என்றார். அருகில் இருந்தவர்கள் புரியாமல் விழித்தார்கள். ஆளவந்தார் “மாறனேரி நம்பி காலடிப் பட்ட இடத்துக்கு புண்யாவாசனம் எதற்கு ? மாறனேரி நம்பியே ஒரு புனிதன். நம்பி காலடி பட்ட இடம் புனிதம் அடைந்து பிறகு மீண்டும் ஏன் புண்யாவாசனம் செய்ய வேண்டும் ?” என்றார். 

புண்யாவாசனச் சடங்குகள் நிறுத்தப்பட்டு, இப்போதே காலட்சேபத்தை ஆரம்பிக்கலாம். எல்லோரும் கூடத்தில் சென்று அமருங்கள் என்றார் ஆளவந்தார்.


காலப்போக்கில் ஆளவந்தாருக்கு இராஜ பிளவை என்ற நோய் பிடித்தது. 

அந்த நோயால் அவர் மிகுந்த அவதிப்பட்டார். முன் பிறவிகளின் வினைகளால் அவருக்கு வந்திருக்கும் நோயால் அவர் வாடுவதை அறிந்த சீடர்கள் வேதனையுடன் கண்ணீர் வடித்தனர். 

அப்போது மாறனேரி நம்பி ஆளவந்தாரை வணங்கி ”நீங்கள் எனக்கு பிரசாதம் வழங்க வேண்டும் !” என்றார். 

ஆளவந்தார் “என்ன பிரசாதம் வேண்டும்?” என்று கேட்க அதற்கு மாறனேரி நம்பி “உங்களுடைய இராஜ பிளவை நோயை ஆசாரிய பிரசாதமாக வழங்க வேண்டும்!” என்றார். 

ஆளவந்தாரும் அருகில் இருந்த சீடர்களும் வெலவெலத்துப் போனார்கள்.


“இப்படியும் ஒரு சீடரா ?” என்று வியந்தார்கள்.


ஆளவந்தார் “மாறனேரி நம்பி இந்நோய் மிகக் கடுமையானது. கொடூரமானது. தாங்கிக்கொள்ள முடியாது!” என்றார். 

ஆனால் மாறனேரி நம்பி பிடிவாதமாக ”எனக்கு இதுவே மகா பிரசாதம் தாங்கிக்கொள்வேன்!” என்றார். ஆளவந்தாரும் “தந்தேன்!” என்று கூற மாறனேரி நம்பியை அந்த நோய் மெல்லப் பற்றிக்கொண்டது.


ஆளவந்தாரை விட்டு நோய் நீங்கினாலும், அவர் நாளடைவில் வயதின் காரணமாகத் தளர்ச்சி ஏற்பட்டு கடைசி நாளை நெருங்கும் சமயம் “மாறனேரி நம்பி என் அபினான சிஷ்யன். அவன் என் நோயால் அவதிப்படுகிறான். என்னை எப்படிக் கவனித்துக்கொள்வீர்களோ அது போல அவனைக் கவனித்து பணிவிடை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து பரமபதம் எய்தினார். (இந்தச் சமயத்தில் தான் இளையாழ்வார் என்ற ராமானுஜர் அங்கே வந்து ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ ஆசாரிய பீடத்தை அலங்கரித்தார்)


மாறனேரி நம்பி தனியாக நோயில் வாடினார். 

தம் இல்லத்தில் அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் உடலில் வலு இழந்து சமையல் செய்துகொண்டு இருந்த சமயம் ஒரு நாள் பெரிய நம்பிகள் அங்கே சென்றார்.

 இவர் படும் கஷ்டங்களைக் கண்டு மிகவும் மன வேதனை அடைந்தர். ”இதுவே குரு பக்தி! “ என்று ஸ்தாபித்து மாறனேரி நம்பியின் காலடியில் விழுந்தார்.


மாறனேரி நம்பி “நானோ தாழ்ந்த குலம்! ஆனால் நீங்களோ பிராமணக் குலம் இப்படிச் செய்யலாமா ? எனக்கு அபசாரம் வருமே!” என்றார். 

பெரிய நம்பி “அப்படியில்லை! உங்கள் குருபக்தி எனக்கும் வரவேண்டும்! என்று பிராத்திக்கிறேன்!” என்றார்.

அன்றுமுதல் மாறனேரி நம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பெரிய நம்பிகள் ஏற்றுக்கொண்டார். தினமும் அவர் தங்கியிருக்கும் குடிலுக்குச் சென்று மாறனேரி நம்பியைக் குளிக்கச் செய்து, ஆடைகள் உடுத்தி, பன்னிரு திருநாமங்கள் சாத்தி, இல்லத்திலிருந்து கொண்டு வந்த உணவை அவருக்கு அளித்து வந்தார். இதே போல இரவும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று உணவு உண்ட பின் மாறனேரி நம்பியைப் படுக்கையில் படுக்க வைப்பார்.


ஒரு நாள் ராமானுஜர் பெரிய நம்பி தினமும் உணவுடன் எங்கே போகிறார், இரவுப் பொழுதில் தன் ஆசாரியனுக்கு ஏதாவது தீங்கு நேரப் போகிறது என்ற பயத்தில் அவரை பின் தொடர்ந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை மெய்சிலிர்க்க வைத்தது. பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு எல்லா உபகாரங்களையும் செய்து, உணவு அளித்தார்.


ராமானுஜர் இந்தக் காட்சியைக் கண்டு கண்கலங்கினார். 

தம் குருவான பெரிய நம்பி அவருடைய குருவான ஆளவந்தாரின் திருவடிகளைத் தியானித்து திருவரங்கனை நோக்கி “மாறனேரி நம்பிக்கு இந்த நோயின் வலியைப் போக்க வேண்டும்!” என்று வேண்டிக்கொண்ட உடனே மாறனேரி நம்பியிடம் இருந்த நோய் மறைந்து விலகியது.


மாறனேரி நம்பி ஆச்சரியம் அடைந்து “பெரிய நம்பியே! மகா பிரசாதம் நீங்கிப் போய்விட்டது. நீங்கள் கைங்கரியம் செய்வதால் அந்தப் பிரசாதத்தை அனுபவிக்கும் பாக்கியத்தை இழந்தேன். தாழ்ந்த குலத்தில் பிறந்த நான் என்ன அபராதம் செய்தேன்!” என்று புலம்பியவாறு கண்ணீர் விட்டபடி, அருகில் இருக்கும் கல்லின் மீது தன் தலையை மோதப் போகும் போது, மறைந்து இருந்த ராமானுஜர் “இதற்குக் காரணம் நான் தான்!” என்று கூறி உள்ளே நுழைந்தார்.

 தான் ஆசாரியர்கள், பெரிய பெருமாளிடம் வேண்டிக்கொண்டதைக் கூறினார். மாறனேரி நம்பி வருத்தப்படுவதைக் கண்டு மீண்டும் ராமானுஜர் பெருமாளைப் பிராத்தனை செய்தவுடன் மாறனேரி நம்பிக்கு அந்நோய் மீண்டும் வந்தது. கண்ணிழந்தவன் கண் பெற்றது போல மாறனேரி நம்பி ஆனந்தப்பட்டார்.


ஒரு நாள் பெரிய நம்பிகள் “மாறனேரி நம்பியே! இன்றிலிருந்து மூன்றாம் நாள் நீர் ஆளவந்தாரின் திருவடியை அடைவீர்” என்றார். 

அப்போது மாறனேரி நம்பி ”இந்தத் தேகம் ஆளவந்தார் சங்கு சக்கரம் சாற்றிய தேகம். அவருடைய மகா பிரசாதத்தை ஏற்றுக்கொண்ட தேகம். அதனால் என்னுடைய இந்த உடலை வைணவர்கள் அல்லாத எனது உறவினர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள்” என்று பெரியநம்பிகளிடம் வேண்டிக்கொண்டார். 

பெரிய நம்பிகள் “கவலைப் படாதீர் நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார்.


மாறனேரி நம்பி தன் குடிலில் இருக்கும் மண்ணால் ஆன ஆளவந்தாரைத் தியானித்தபடியே ஆசாரியன் திருவடியை அடைந்தார்.


மாறனேரி நம்பிகள் இறுதி ஈமச் சடங்குகளைப் பெரிய நம்பிகள் மேற்கொண்டார். ஒரு தீண்டத்தகாதவனைத் தொட்டு பிராமணன் ஒருவன் இப்படிச் செய்யலாமா ? என்று திருவரங்கத்தில் பலர் முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். பெரிய நம்பியைத் திட்டினார்கள். 

ஊரிலிருந்து நீக்கி வைத்தார்கள். அவர் வீட்டு வாசலில் முள்ளைப் போட்டு அடைத்து அவரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க ஏற்பாடு செய்தார்கள்.


பெரிய நம்பிகளின் இந்தச் செய்கை ராமானுஜரின் காதுகளுக்கு எட்டியது. சிலர் ராமானுஜரிடம் “நீர் சாஸ்திரம், சம்பிரதாயம், ஆசாரம், அனுஷ்டானம் என்று வளர்த்துக்கொண்டு இருக்கிறீர். ஆனால் உங்கள் குரு பெரிய நம்பியோ இப்படிச் செய்துள்ளார். இது நியாயமா ? நீரே சென்று உம்ம ஆசாரியன் இடத்தில் கேளும்!” என்றார்கள் கோபமாக.


ராமானுஜருக்கு தன் குரு செய்தது சரி என்று தெரியும். 

ஆனாலும் இவர்களுக்குப் பெரிய நம்பிகளிடமிருந்து தகுந்த பதிலை வாங்கி கொடுக்க வேண்டும் என்று விரும்பி பெரிய நம்பிகள் இல்லத்துக்குச் சென்று ”எதற்காக இப்படிச் செய்தீர்?” என்று கேட்டார்.


அதற்குப் பெரிய நம்பிகள் புன்முறுவலோடு “வாரும் ராமானுஜரே! மற்றவர்கள் கேட்டிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் நீர் நரகம் போனாலும் பரவாயில்லை என்று கூறி எம்பெருமானார் என்ற பெயர் பெற்றவர். நீர் இந்தக் கேள்வி கேட்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” என்று பேசத் தொடங்கினார்.


”விதுரனுக்கு அந்திமச் சடங்கை யார் செய்தார் ? ” என்றார்.


“தருமபுத்திரன்” என்று பதில் உரைத்தார் ராமானுஜர்.


பெரிய நம்பிகள்”விதுரன் தர்மபுத்திரைகாட்டிலும் தாழ்ந்த குலம் ஆனால் தருமபுத்திரன் அந்திமச் சடங்கைச் செய்தான் அல்லவா ? ஜாயுவிற்கு யார் அந்திமச் சங்கு செய்தார் ?” என்றார்.


“ராமர்” என்றார் ராமானுஜர்


“ஒரு பறவையைக் காட்டிலும் ராமர் எவ்வளவு பெரியவன் அப்படி இருக்க ராமர் செய்துள்ளார்! நான் என்ன தர்மபுத்திரைகாட்டிலும் உயர்ந்தவனா ? அல்லது மாறனேரி நம்பி விதுரனைவிடத் தாழ்ந்தவனா ? நான் என்ன ராமனைவிட உயர்ந்தவனா ? அல்லது மாறனேரி நம்பி ஜடாயுவை விடத் தாழ்ந்தவனா ?” என்றார். 


ராமானுஜர் மௌனமாக இருக்கப் பெரிய நம்பிகள்


குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 

நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 

வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 

கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.


என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தைச் சொல்லி இதற்கு என்ன பொருள் என்று கேட்க ராமானுஜர் ”எத்தனை தாழ்ந்த சண்டாளர் சாதியாக இருந்தாலும், அவன் திருமாலின் அடியவர் என்றால் அவன் எனக்கு ஸ்வாமி! என்கிறார் நம்மாழ்வார்” என்றார்.


பெரிய நம்பிகள் “ஆழ்வார் பாடல்கள் எல்லாம் பொருள் நிறைந்தது என்று ஏற்றுக்கொண்டால் நான் செய்தது சரி. இல்லை என்றால் ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் கடல் ஓசை போல ’அர்த்தம் இல்லாதவை!” என்றார்.


ராமானுஜர் பெரியநம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

 திருக்கோளூர்ப் பெண்பிள்ளை, "பெரிய நம்பிகளை போல சிறந்த பாகவத சேவையைப் புரிந்து ஆழ்வாரின் வார்த்தைகள் வீண் ஓசை இல்லையென காட்டினேனா?இல்லையே , அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்கிறாள்.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே








திருவாய்மொழி -இரண்டாம் பத்து

2-3 ஊனில் வாழ்
அடியார் குழாத்தைக் கூடுவதற்கு விழைதல்


          

முன் நல் யாழ் பயில் நூல்*  நரம்பின் முதிர் சுவையே,* 
பல் நலார் பயிலும்*  பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே*  கார் முகிலே என் கண்ணா,* 
நின் அலால் இலேன்காண்*  என்னை நீ குறிக்கொள்ளே. 7

3037



குறிக்கொள் ஞானங்களால்*  எனை ஊழி செய் தவமும்,* 
கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய் பால்*  ஒளித்து உண்ணும் அம்மான் பின்,* 
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்*  பிறவித் துயர் கடிந்தே. 8

3038

          




70. திருக்கடித்தானம்

ஸ்ரீ கற்பகவல்லீ ஸமேத ஸ்ரீ அற்புதநாராயணாய நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

3 comments:

  1. திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் பற்றி திருக்கண்ணபுரத்தில் வேள்குடி கிருஷ்ணர் அவர்கள் பேசியதை கேட்டு இருக்கிறேன், முன்பு பதிவும் போட்டு இருக்கிறேன்.
    நீங்கள் மிக அருமையாக மாறனேரி நம்பி பற்றி சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. அற்புதமான விளக்கம். தொடரட்டும் பக்தி உலா.

    ReplyDelete