25 July 2025

3. ஶ்ரீவில்லிபுத்தூர் - ஐந்து கருட சேவை

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

ஸ்ரீவில்லிபுத்தூர் கருட சேவையின் தனிச்சிறப்பு:

இங்கு 5 கருடசேவை,

ஆழ்வார் திருநகரியில் 9 கருடசேவை, திருநாங்கூரில் 11 கருட சேவை மற்றும் பல திவ்ய தேசங்களிலும் கருட சேவை வருடம் முழுதும் நடைபெற்றுக் கொண்டிரு க்கும் போது, ஸ்ரீவில்லி புத்தூருக்கு என்ன பெருமை? இங்கு கருடனே முன்நின்று கருடசேவை நடத்துகிறார். பெரியாழ்வார் கருடனின் அம்சம். கருடன் வேத சொரூபன். பெரியாழ்வாரும் அனைத்து வேதங்களையும் அறிந்து, வேத சாரங்களைச் சொல்லி பரத்வம் நிர்ணயித்தவர் ஆயிற்றே!


எப்படி கருடன்" தாஸ; ஸஹா;வாஹன" என்று பல கைங்கர்யங்களைச் செய்கிறாரோ,பெரியாழ்வாரும் பூமாலை/பாமாலை(தாஸ), பரத்துவ நிர்ணயம்(ஸஹா), கைங்கர்யங்களைச் செய்தார்.

வாகன கைங்கர்யத்தை முன் நின்று செய்கிறார்.

மேலும் பெரியாழ்வாரும் கருடனும்(ஆழ்வார் கருடனின் அம்சமாதலால்) பெருமாள்/ ரங்கமன்னாரின் மாமானாராகவும்,

பூமிப்பிராட்டி ஆண்டாளின் தகப்பனார் ஆகவும் இருந்து இந்த கருட சேவையை நடத்துகிறார்கள்.











ஐந்து கருட சேவை :

ஐந்தாம் நாள்(நேற்று) இரவு 11 மணி அளவில்,பெரியாழ்வார் ,ஆண்டாள் சந்நதியிலிருந்து,ஹம்ச வாகனத்தில்,பொங்கும் பரிவுடன்,

அஞ்சலி ஹஸ்தத்துடன், முதலில் வருவார்.

அவரைத் தொடர்ந்து,

ரங்கமன்னார்,ஆண்டாள் கிளி மாலை/தங்க காசு மாலைகள் அணிந்து,கம்பீரமாக.அழகிய மணவாளன் அலங்காரத்தில்  தங்கக் கருட வாகனத்தில்.

ரங்கமன்னாரை அடுத்து,

அவரை அடைந்த மிடுக்குடன்,மந்தகாசப் புன்னகையுடன்,ஆண்டாள் நாச்சியார் ஹம்ச வாகனத்தில்.

தொடர்ந்து, ஆண்டாளின் சூடிக்களைந்த மாலையை கேட்டு வாங்கிச் சூடிக் களித்த, வட பத்ர சாயி பெருமாள்(ஶ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள்) கருட வாகனத்தில்.

அடுத்து,செண்பகத் தோப்பு காட்டழகர்,ரோஜா சிவப்பு கருட வாகனத்தில்.

அடுத்து திருவண்ணாமலை

(ஶ்ரீவி.யிலிருந்து 3 கி.மீ)ஶ்ரீனிவாசப் பெருமாள் பச்சை வண்ண கருட வாகனத்தில்.

இறுதியாக திருத்தங்கால் அப்பன்(சிவகாசி எல்லையில்)-நின்ற நாராயணப் பெருமாள்,பெரிய தங்கக் கருட வாகனத்தில், அற்புத அலங்காரத்தில்,பெரிய தங்கக் காசு மாலைகள், நிறைய மலர் மாலைகளுடன்.


மற்ற பெருமாள்கள்,

ஒருவர் பின் ஒருவராக வருவார்கள்.

ஆனால் இந்தப் பெருமாள் மட்டும்,சற்று தூரம் விட்டு வருகிறார்.இவருக்குத் தனியாக பெரிய நாதஸ்வர/தவில் குழுவினர்)

மாட/ரத வீதிகளில் வரும் கருடசேவை வீதிவலம்,காலை 3 /4 மணிக்குத் தான் விழாப் பந்தலை அடையும்.










ஐந்தாம் திருநாள் இரவு புறப்பாடு- 

பெரியாழ்வார் - சிறிய அன்னவாகனத்தில் 

ஶ்ரீ ஆண்டாள் - பெரிய அன்னவாகனத்தில் 

ஶ்ரீ ரங்கமன்னார் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ பெரிய பெருமாள் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ சுந்தரராஜப் பெருமாள் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ ஶ்ரீநிவாஸப் பெருமாள் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ திருத்தங்கால் அப்பன் - கருட வாகனத்தில்.


பெரியாழ்வார் தனியாக வந்து, இடதுபுறம் நிற்க, ஐந்து பெருமாள்களும், ஆண்டாளும் ஒரே வரிசையில் தத்தம் வாகனங்களில் சேவை சாதிப்பார்கள்.

பெரியாழ்வார் ஒவ்வொரு பெருமாளையும்,

பிரதட்சினமாக வந்து, மங்களாசாசனம் செய்வார்.

பெரியாழ்வாருக்கு பெருமாள் மாலை, பிரசாதங்கள் அருளப்படும்.

மங்களாசாசனம் முடிந்த பின்,

பெருமாள் அவரவர் திவ்யதேசத்துக்குப் புறப்படுவர். 

திருத்தங்கால் அப்பன் பெருமாளுக்கு, ஆண்டாளின் சிறப்பு மரியாதையாக,வஸ்த்ரம்,மாலைகள் சமர்ப்பிக்கப்படும். 

இன்று அதிகாலை (25/07) காலை 5 மணி அளவில் ஆண்டாளும்,

ரங்க மன்னாரும் சந்நிதிக்குள் எழுந்தருள 5ஆம் நாள் உற்சவம், 6ஆம் நாள் காலையில் நிறைவடையும். 

கருட சேவை வழி நெடுகிலும், பல ஊர்களில் இருந்து வரும் பாகவதகோஷ்டியினர், பஜனை,கோலாட்டம்,கும்மி, நடனம் ஆகியவற்றில் ஆழ்ந்து திளைப்பார்கள்.

கிராமங்களில் இருந்து வருவோர் ஆண்டாள்,ரங்கமன்னாரைப் பற்றி அவர்களே சொந்தமாகப் பாட்டுக் கட்டி கிராமிய இசையுடன் பாடுவதும்/ஆடுவதும் மிக அருமையாக இருக்கும்.

எல்லா வயதினரும்--குழந்தைகள் முதல் மிக  வயதான ர்கள் வரை இந்த ஆட்ட பாட்டங்களில் ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபடுவர்.

நடுநிசியிலும் பக்தர்கள் ஆங்காங்கே  எம்பெருமான்களுக்கு  தேங்காய்,

பழங்கள்,உலர் பழங்களைச் சமர்ப்பிப்பார்கள்.







நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

மூன்றாம் பாசுரம்--- சிற்றில் சிதைப்பதையும் கடைக்கண்களால் எங்களை நலிவதையும் நிறுத்தவேண்டும் என்கிறார்கள்.


516

குண்டு நீர் உறை கோளரீ! மத 

யானை கோள் விடுத்தாய் உன்னைக்

கண்டு மால் உறுவோங்களைக் கடைக்

 கண்களாலிட்டு வாதியேல்

வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் 

கைகளால் சிரமப் பட்டோம்

தெண் திரைக் கடல் பள்ளியாய்! எங்கள் 

சிற்றில்  வந்து சிதையேலே 3


ஆழமான ப்ரளய நீர்க் கடலிலே சயனித்திருக்கும் பலம் மிகுந்த சிங்கத்தைப் போன்றவனே! மதம்கொண்ட கஜேந்த்ராழ்வானுக்கு வந்த துன்பத்தைப் போக்கியவனே! உன்னைக் கண்டு ஆசைப்படும் எங்களை உன்னுடைய கடைக்கண்களால் பார்த்துத் துன்புறுத்தாதே.

 நாங்கள் வண்டலில் உள்ள சிறிய மணலைத் தெளித்து வளையல்களணிந்த கைகளால் கஷ்டப்பட்டு இந்த சிற்றில்களைக் கட்டியுள்ளோம். தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலைப் படுக்கையாகக் கொண்டவனே! எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


1 comment:

  1. ஆண்டாள் கோயில் ஐந்து கருட சேவை பாக்கியம்
    மிக நன்று

    ReplyDelete