28 July 2025

7. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

 4.ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்

5.ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

6. எட்டாம் நாள் இரவு  -- ஶ்ரீ ஆண்டாள் -  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு (போன வருட படங்கள்)


7. ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...




திரு ஆடிப்பூர நந்நாளும்,உற்சவத்தின் ஒன்பதாம் நாளுமான இன்று அதிகாலை 2 மணிக்கே ஆண்டாள், ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும்.

காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் கடக லக்கினத்தில் தேருக்கு எழுந்தருள்வார்கள்.

காலை 8.05 மணிக்கு ஆண்டாள் மனதுக்கினிய "கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா" முழக்கங்களுடன் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடிப்பார்கள்.

 வழியெங்கும் பக்தர்கள் வெள்ளம்....

கோவிந்த நாம வெள்ளம்....

சுமார் 3 மணி நேரத்தில் தேர் நிலையை அடையும். (ஒரு காலத்தில் 3 மாதம் ஆயிற்றாம்!)

மாலையில் தேரிலிருந்து, நந்தவனத்தில் உள்ள திருப்பூர மண்டபத்துக்கு எழுந்தருள்வார்கள்.

அங்கு அலங்காரங்கள் திருவாராதனைகளுடன் ஆடிப்பூர உற்சவ சாற்றுமறை நடைபெறும். நாளை(29/07) அதிகாலை தான் நிறைவு பெறும். 








ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் மகாத்மியம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் தமிழகத்தின் இரண்டாவது பெரியதேர்.

1825 ஆம் ஆண்டிலேயே தேராட்டம் நடந்ததாம்.

 இப்போதுள்ள தேர் 1974 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது.

அதற்கு முன்னால் 1952 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரிய தேர் மிக்க கலைநயம் மிக்க சிற்பங்களும், ஒன்பது மரச்சக்கரங்களும்,பட்டுப்பதாகைகளும், உச்சியில் 150 கிலோ எடையுள்ள கும்பக் கலசமும், ஒன்பது வடக்கயிறு களும் கொண்டு மிகஉயரமாக (160 அடி)பிரம்மாண்டமாக இருந்தது.

ஆயிரக்கணக்கானோர் தேர் இழுப்பார்கள்.தேர் நிலைக்கு வரப் பல நாட்கள் (சிலமாதங்கள்) ஆயின.

இரும்பு/இயந்திர உதவியின்றி தேர் ஓடியது....

 என்று தேர் நிலைக்கு வருகிறதோ அன்று தான் மங்கள ஆரத்தி எடுத்து,"இன்றோ திருஆடிப்பூரம்! எமக்காகவன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்" பாசுரம் சேவிப்பார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரமும், தேர்க்கொடியும் 10 கி.மீ. தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியுமாம்.

மரச்சக்கரங்கள் பழுதானதால் 18 ஆண்டுகள் இந்தத் தேர் ஓடவில்லை.

வேறு ஒரு சிறிய தேரைத் தான் ஓட விட்டார்கள்.பின் இரும்புச் சக்கரங்கள் செய்து 1974ல் பெரிய தேர் புதுப்பிக்கப்பட்டது.ஆனால் மீண்டும் சோதனை; தேரின் மேலடுக்குகள் சரிந்து விழுந்தன.

ஒரு முறை கலசமும் விழுந்து விட்டது.பின்னர் சில அடுக்குகளை எடுத்து,உயரம் குறைக்கப்பட்டது.எடைகுறைந்த மாற்றுக்கலசம் பொருத்தப் பட்டது. இதுவே இப்போதுள்ள தேர். 






நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

ஏழாம் பாசுரம் -- உன்னுடைய தர்மபத்தினிகளின் மேல் ஆணை, எங்கள் சிற்றில்களை அழிக்காதே என்கிறார்கள்.


520

பேதம் நன்கு அறிவார்களோடு இவை 

பேசினால் பெரிது இன் சுவை

யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை 

நீ நலிந்து என் பயன்?

ஓத மா கடல் வண்ணா! உன்

 மணவாட்டிமாரொடு சூழறும்

சேது பந்தம் திருத்தினாய்! எங்கள்

 சிற்றில் வந்து சிதையேலே  7


உன் பேச்சின் விதங்களை நன்றாக அறிய வல்லவர்களோடு இப்பேச்சுக்களை நீ பேசினால் உனக்கு மிகவும் இனிமையாக இருக்கும். ஒன்றும் அறியாத சிறு பெண்களான எங்களை நீ துன்புறுத்துவதால் என்ன பயன் உண்டு? அலைகள் பொருந்திய கடல்போன்ற திருநிறத்தை உடைய கண்ணனே! கடலில் அணை கட்டியவனே! உன்னுடைய தர்மபத்தினிகளின் மேல் ஆணை. எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment