21 July 2025

1.சேது பந்தம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


முதல் திருநாள்

மூலவர் - சக்கரவர்த்தி திருமகன் ( சேது பந்தம்)

உற்சவர் - இளைய பெருமாள்










ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானை உபாயமாகக் கொண்டாள், அவனுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டே உபேயம் என்று அறிவித்தாள். இந்த நினைவு இருந்தால் எம்பெருமான் தானே பலனைக் கொடுப்பான்.

 ஆனால் ஆண்டாள் நாச்சியாருக்கோ, எம்பெருமான் வந்து அவளைக் கைக்கொண்டு அவள் ஆசையை நிறைவேற்றவில்லை. 

எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும் அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள். 

திருவயோத்தியில் இருந்த பிராட்டி உட்பட எல்லோரும் பெருமாளான ஸ்ரீராமனைத் தவிர வேறொரு தெய்வத்தை அறியாதவர்களாக இருந்தாலும், அந்தப் பெருமாளுக்கு நன்மையை வேண்டி எல்லா தேவதைகளையும் வணங்கினர். 

பெருமாளை வேறு எந்த உருவத்திலும் அனுபவிக்க மாட்டேன் என்று கூறிய திருவடியும் (ஹனூமான்) அந்தப் பெருமாளின் நன்மைக்காக வாசஸ்பதி என்கிற தேவதையை வணங்கினாரே. அப்படியே ஆண்டாள் நாச்சியாரும் காமதேவனைத் தன்னை எம்பெருமானுடன் சேர்த்து வைக்கும்படி வேண்டுகிறாள் இங்கே. 

பகவத் பக்தியால் வரும் அஜ்ஞானம் மிக உயர்ந்தது என்பதை நம் பூர்வாசார்யர்கள் காட்டியுள்ளனர். 

பெரியாழ்வார் எம்பெருமானுக்குப் புஷ்பங்களைக் கொண்டு மாலைகளைச் சமர்ப்பித்தாப்போலே, ஆண்டாள் நாச்சியாரும் தன்னை எம்பெருமானிடத்திலே சேர்த்து வைக்கும் மன்மதனுக்கு அவனுக்கு விருப்பமான காட்டுப்பூக்கள் முதலியவற்றைச் சமர்ப்பிக்கிறாள். 

ஆண்டாள் நாச்சியார் இப்படிச் செய்தாலும் அவளுடைய அளவிறந்த பிரிவாற்றாமைக்கு அது ஏற்கும், ஆனால் நாம் மற்ற தேவதைகளை வணங்குவது நம் ஸ்வரூபத்துக்குச் சேராது.


நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  


முதல் பாசுரம் - இதில் காமனையும் அவன் தம்பி சாமனையும் தான் வணங்கும் க்ரமத்தை விளக்குகிறாள்.

504

தை ஒரு திங்களும் தரை விளக்கித்

 தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்

ஐய நுண் மணல்  கொண்டு தெரு அணிந்து 

அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா!

உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி

 உன்னையும் உம்பியையும் தொழுதேன்

வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை 

வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே 1


தை மாதம் முழுவதும் அவன் வரக்கூடிய இடத்தை மெழுகி குளிர்ச்சியாய் மண்டல ரூபத்தில் இருக்கும் கோலத்தை இட்டு, மாசி மாதம் முதல் பக்ஷத்தில் (பதினைந்து நாட்கள்) அழகியதான, நுண்ணியதான மணலைக்கொண்டு அவன் வரக்கூடிய தெருவை அழகாகும்படி அலங்காரம் செய்து, அவனை நோக்கி “மன்மதனே! நீ என் ஆசையை நிறைவேற்றுவாயா?” என்று சொல்லி, உன்னையும் உன் தம்பியையும் தொழுதேன். க்ரூரமான தீப்பொறிகளைச் சிந்தக்கூடிய ஒப்பற்றதான திருவாழியைத் திருக்கையிலேயுடைய திருவேங்கடமுடையானுக்கு என்னை ஆட்படுத்தவேண்டும்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment