இன்று ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)
ஆழ்வார் வாழி திருநாமம்!
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும் தம் அப்பன் வாழியே
செல்வ நம்பிதனைப் போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே
பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்
தந்தை : முகுந்தர்
தாய் : பதுமவல்லி
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்
நட்சத்திரம் : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)
கிழமை : திங்கள்
எழுதிய நூல் : பெரியாழ்வார் திருமொழி
பாடிய பாடல் : 473
சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்
பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் முதல் ஆயிரத்தில் முதன்மையாக வைக்கப்பட்டுள்ளன.
இதில் பெரியாழ்வார் திருமொழியில் ஆழ்வார் யசோதை பாவனையில் ஸ்ரீ கண்ணபிரானின் குழந்தைப் பருவ வைபவங்களைப் பாடிய பாசுரங்கள் தனித்துவமாக விளங்குகின்றன.
இவை தமிழ் இலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தவை.
தமிழ் இலக்கியத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன.
அவற்றுக்கு எல்லாம் ஆதி பிள்ளைத்தமிழ் காவியமாகவும், சிகரம் வைத்தாற் போலப் பிரகாசிப்பதும் பெரியாழ்வார் பாடிய கண்ணன் பிள்ளைத்தமிழ் ஆகும்.
பெரியாழ்வார் திருமொழி
முதற் பத்து
ஏழாம் திருமொழி - தொடர் சங்கிலிகை
தளர்நடைப் பருவம்
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ (1)
86
செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும்
சிறுபிறை முளைப் போல
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே
நளிர் வெண்பல் முளை இலக
அக்குவடம் உடுத்து ஆமைத் தாலி
பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
தளர்நடை நடவானோ (2)
87
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னற் துலங்கும் அரசிலையும்
பீதகச் சிற்றாடையொடும்
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
கழுத்தினிற் காறையொடும்
தன்னிற் பொலிந்த இருடிகேசன்
தளர்நடை நடவானோ (3)
88
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாய் அமுதம்
தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
தளர்நடை நடவானோ (4)
89
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
பலதேவன் என்னும்
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்
தளர்நடை நடவானோ (5)
90
குதிரை வாகனத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் |
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்
உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு, அங்கு அங்கு எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின் மேல்
பின்னையும் பெய்து பெய்து
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை
தளர்நடை நடவானோ (6)
91
படர் பங்கைய மலர் வாய் நெகிழப்
பனி படு சிறுதுளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
இற்று இற்று வீழ நின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
உடை மணி கணகணென
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி
தளர்நடை நடவானோ (7)
92
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
அருவிகள் பகர்ந்தனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ
அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா
மணிக் குழவி உருவின்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
தளர்நடை நடவானோ (8)
93
வெண் புழுதிமேல் பெய்து கொண்டு அளைந்தது ஓர்
வேழத்தின் கருங்கன்று போல்
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன்
சிறு புகர்பட வியர்த்து
ஒண் போது அலர் கமலச் சிறுக்கால் உறைத்து
ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே
தளர்நடை நடவானோ (9)
94
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்
செங்கண்மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி
திகழ்ந்து எங்கும் புடைபெயர
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்
பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்
தளர்நடை நடவானோ (10)
95
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
அஞ்சன வண்ணன் தன்னைத்
தாயர் மகிழ ஒன்னார் தளரத்
தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே (11)
96
கருட வாகனத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் |
அன்ன வாகனத்தில் ஸ்ரீ பெரியாழ்வார் |
ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை
இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்
16
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்
20
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
அனுபிரேம்
பதிவும் படங்களும் நன்று. தொடரட்டும் பக்தி உலா.
ReplyDelete