02 June 2023

வைகாசி விசாகம் --- முருகப் பெருமான் தரிசனம் ...

 சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, 
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, 
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம்  வைகாசி விசாகம்.








சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும் முருகப் பெருமான் விசாகமாக (கீழ்க் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கிக் கூறுகிறது.


சிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும் விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம்.




"சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர்.


ச- லட்சுமி கடாட்சம்.
ர- சரஸ்வதி கடாட்சம்.
வ (ஹ)- போகம், மோட்சம்.
ண- சத்ரு ஜெயம்.
ப- மிருத்யு ஜெயம்.
வ- நோயற்ற வாழ்வு.

எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்து, சச்சிதானந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து மகிழ்வோம்....



 முருகன் தோன்றிய நாள் ---  வைகாசி விசாகம் .

* அறுவரும் ஒருவர் ஆன நாள்: கார்த்திகையில் கார்த்திகை .
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள்: தைப்பூசம் .
* அசுரரை மறக்கருணையால் ஆட்கொண்ட நாள்:  ஐப்பசியில் சஷ்டி .
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் : பங்குனி உத்திரம்.
அழகனாம் என்னவன் முருகன் திருக்கைவேல்  சிறப்பு. 

''வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட 
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி 
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் 
துளைத்த வேல் உண்டே துணை''

வேல் அறிவின் அடையாளம்.
 மயில் ஓங்காரத்தின் அடையாளம். 
துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.

''தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத் திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை'' – சைவ எல்லப்பநாவலர்

முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல்.

 தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

பாம்பன் சுவாமிகள் இதனை ‘படை அரசு’ என்று போற்றுவார். ‘படைநாயகம்’ என்றும் பெயருண்டு.

சூரபத்மனுடன் போரிடுவதற்கு போர்க் கோலம் பூண்டுவந்த முருகனிடம், சிவபெருமான் பதினோரு ஆயுதங்களுடன் மிகவும் மகிமை பொருந்திய வேலாயுதத்தையும் அளித்தார் என்கிறது கந்தபுராணம். 

அருணகிரிநாதரும் சிவபிரான் வேல் அளித்த செய்தியை திருப்புகழில் காட்டுகிறார்.

 எனினும், அம்பிகை பராசக்தி, முருகனுக்கு வேல் கொடுத்த செய்தியை மிகச் சிறப்பாக, '‘எம் புதல்வா வாழி வாழி எனும்படி வீறான வேல்தர என்றும் உளானே மநோகர…’' என்று பாடுகிறார் அருணகிரிநாதர். இச் செய்தியை கல்லாடம் நூலிலும் காண முடிகிறது.

வேல் தத்துவம் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள், பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். 

''வேலாயுதம்'' பஞ்சாட்சர மூலமந்திரம் ஆகும் என்றும் சிறப்பிப்பார்கள். 

சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியைச் சொல்ல வந்த அருணகிரியார், '‘சிவம் எனும் அஞ்செழுத்தை முந்த விடுவோனே'’ என்று குறிப்பிடுவார். எனவே, வேலாயுதத்துக்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கில்லை.

மொத்தத்தில்… பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.









அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த  கந்தர் அனுபூதி ... கற்றதன் பலன் கந்தன் கழலடிக்குத் தன்னை அர்ப்பணம் செய்வதே.

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி.


 " யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்

தாமே பெற, வேலவர் தந்ததனால்

பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர், நடவீர் இனியே " (17)


......... பதவுரை .........


யாம் ஓதிய கல்வியும் ... நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும்,

எம் அறிவும் ... நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும்,

தாமே பெற ... தாமே திரும்பப் பெற வேண்டி,

வேலவர் தந்ததினால் ... வேலாயுதக் கடவுள் நமக்குக்

கொடுத்ததினால்,

பூ மேல் ... இப் பூமியில்,

மயல் போய் ... நீங்கள் மயக்கங்களை விட்டு,

அற மெய்ப் புணர்வீர் ... தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து

வாழும் உத்தம சீலர்களே,

இனி நா மேல் நடவீர் நடவீர் ... நம்மை அவனுக்கு அர்ப்பணித்து

அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்.


......... பொழிப்புரை .........




நாம் கற்ற கல்வியும், நம்மிடம் இயல்பாகவே அமைந்த மெய்ஞானமும்

தாமே திரும்பப் பெற முருகப் பெருமான் கொடுத்து அருள் செய்ததால்

அதற்குக் கைமாறாக அவனுக்கு நமது புலமையை அர்ப்பணம்

செய்யவேண்டும்.









முருகா சரணம்...

கந்தா சரணம்.....

வடிவேலா சரணம்.....


அன்புடன்
அனுபிரேம்  💚💛💚.....

1 comment:

  1. வைகாசி விசாகம் தகவல்கள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் நல்லதே நடக்க எம்பெருமான் முருகன் அருள் புரியட்டும்.

    ReplyDelete