(77) நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே.
காசி மாநகரில் சிங்கன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த வைணவன். தினமும் எல்லா நீர் நிலைகளுக்கும் சென்று தாமரை மலர்களைப் பறித்து அவற்றைப் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பான். பல நீர் நிலைகளில் நீந்துவதால் நீச்சலில் நல்ல தேர்ச்சி பெற்றான். ஒரு நாள் அகலமான ஆழமான கங்கையில் நீந்திப் பார்த்தான். இக்கரைக்கும் அக்கரைக்கும் பல முறை நீந்தினான். தன் வல்லமையை நினைத்துப் பெருமை கொண்டான்.
ராமாயணத்தில் குகன் கங்கையின் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீந்தியே செல்வான். கங்கை ஆற்றின் அடிமண்ணை கையில் எடுக்கும் வல்லமை பெற்றவன். குகன் செய்த வீரதீர விளையாட்டுக்களைத் தானும் செய்கிறேன் என்ற அகங்காரம் வரத் தொடங்கியது.
தினமும் தென்கரைக்கும் வடகரைக்கும் எந்த இடையூரும் இல்லாமல் நீந்தினான். பல முறை நீந்தினான்.
பலர் இவன் சாகச செயலைப் பார்த்து வியந்தார்கள். நாளுக்கு நாள் இவனுடைய செருக்கு அதிகமானது.
ஒரு நாள் வழக்கம்போல் கங்கையின் குறுக்கே நீந்தித் தாமரை மலர்களைப் பறித்தான். பலர் அவன் நீந்துவதை வேடிக்கை பார்க்க அவன் செருக்குடன் எல்லோரையும் பார்த்துக்கொண்டு நீந்தித் திரும்பும்பொழுது திடீரென்று கங்கையில் வெள்ளம் அதிகமாகி அவனை அடித்துக்கொண்டு சென்று ஒரு சுழலில் சிக்கவைத்தது.
காசி சிங்கன் திக்குமுக்கு தெரியாமல் திகைத்தான். தத்தளித்தான். எவ்வளவு முயன்றும் சுழலிலிருந்து தப்பித்து வெளியே வர முடியவில்லை. களைப்புற்றான்.
தான் அகங்கரப்பட்டது பெரிய தவறு என்று புரிந்தது. தான் ஒரு சாமானியன் என்று உணர்ந்துகொண்டான்.
அப்போது அவனுக்குக் கஜேந்திரன் என்ற யானைக்குப் பெருமாள் அருள் புரிந்த கதை நினைவுக்கு வந்தது. உடனே சிங்கன் “ஆதிமூலமே! அன்று பேராபத்தில் ஒரு யானை உயிர் போகும் நிலையில் உன்னை நினைத்து அழைக்க உடனே ஓடோடி வந்து அதைக் காத்தாய். என்னையும் அதே போலக் காக்க வேண்டும்! நீயே சரண்!” என்று சரணாகதி செய்தான்.
பெருமாள் அவன் சரணாகதியை ஏற்றுக்கொண்டார்.
அப்போது பெரும் காற்று வீசிற்று.
அதன் விளைவாக ஒரு பெரிய அலை ஏற்பட்டு அவனை நீர்ச்சுழியிலிருந்து வெளியே இழுத்து கரைக்குத் தள்ளியது. கரையில் வந்து விழுந்த காசிசிங்கனின் கையில் தாமரை மலர் இருந்தது.
சிங்கன் தன்னை ஆபத்திலிருந்து மீட்டப் பெருமானை நினைத்து மனம் உருகினான். தாமரை மலரை எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தான்.
”சாமி! நான் காசி சிங்கனைப் போலத் திட நம்பிக்கையுடன் பெருமாளை நினைத்தேனா ? சுழற்சியில் மாட்டிக்கொண்டு அலை அடித்த போதும் நான் நீரோருகம் கொடுத்தேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்கிறாள் திருக்கோளூர் மங்கை.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி இரண்டாம் பத்து
2 - 5 அந்தாமம்
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க, மகிழ்தல்
என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்,
மின்னும் சுடர் மலைக்குக் கண், பாதம், கை, கமலம்,
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள,
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே. 5.3
3055
எப் பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்,
அப் பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம்; கை கமலம்,
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்,
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே. 5.4
3056
78. திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லீ ஸமேத ஸ்ரீ வைஷ்ணவநம்பி ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
No comments:
Post a Comment