09 November 2024

ஸ்ரீ பொய்கையாழ்வார்

 நேற்று ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சித்திரம் -  ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.....










பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா ஓணத்தில்  செகது உதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம்  செழிக்க வந்தான் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே

வனச மலர்க் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவன்  திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன் முடியும்  திருமுகமும் பூதலத்தில் வாழியே .


பொய்கையாழ்வார்  

பிறந்த ஊர்         - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்       -  ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை             - செவ்வாய்

எழுதிய நூல்    -  முதல் திருவந்தாதி

பாடல்கள்        - 100

சிறப்பு              - திருமாலின் சங்கின் அம்சம்



ஆழ்வார்களில் சரோயோகி என அழைக்கப்படுகின்ற பொய்கையாழ்வார்  முதல் ஆழ்வாராக அழைக்கப்படுகின்றார். இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் எழுந்தருளியுள்ள யதோக்தகாரி சுவாமி புஷ்கரணியில் பூத்த தாமரை மலரில் அயோநிஜராய்,  ஐப்பசி திருவோணம் நட்சத்திரத்தில் தோன்றினார். தான் தரிசித்து மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய மங்கள ரூபத்தை கல்யாண குணத்தை பல்வேறு பாசுரங்களில் பதிவு செய்துள்ளார்.   இந்த பிரபந்தத்திற்கு முதல் திருவந்தாதி எனத் திருநாமம். 

முதலாழ்வார்கள் மூவரில்  பொய்கையாழ்வார், ஸ்ரீ மஹாவிஷ்ணு தரித்திருக்கின்ற பாஞ்சசன்யம் எனப்படும் சங்கின் அம்சமாவார். 










முதல் திருவந்தாதி 


          

  2135
        
அரவம், அடல் வேழம், ஆன், குருந்தம், புள் வாய்
குரவை, குடம், முலை, மல், குன்றம், கரவு இன்றி
விட்டு, இறுத்து, மேய்த்து, ஒசித்து, கீண்டு , கோத்து, ஆடி 
உண்டு, அட்டு, எடுத்த செங்கண் அவன்             (54)

   

2136
அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர்             (55)



2137
 
பேரே வரப் பிதற்றல் அல்லால், என் பெம்மானை
ஆரே அறிவார்? அது நிற்க நேரே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக் கமலம் தன்னை அயன்             (56)


2138
 
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன், அஞ்சி
உய, நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு, நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது             (57)


2139
 
தொழுது மலர் கொண்டு, தூபம் கை ஏந்தி
எழுதும், எழு, ஆழி, நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை, அடை             (58)


2140
 
அடைந்த அரு வினையோடு அல்லல், நோய், பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்,
தன் வில் அங்கை வைத்தான் சரண்             (59)
 


2141

சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு             (60)







உபதேசரத்தினமாலை


6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்


7
  
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து








பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா .....



அன்புடன்
அனுபிரேம் 💛💛💛


2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பொய்கையில் ஆழ்வார் பற்றிய குறிப்புக்கள் மூலம் அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். அவர் அருளிய பாசுரங்கள் அனைத்தும் அருமை. பக்திப் பகிர்வை விபரமாக அறிந்து கொள்ளும் வண்ணம் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    தங்களின் சென்ற பதிவுக்கு ஒரு கருத்துரை தந்திருந்தேன். அது சரியான முறையில் வரவில்லையோ? நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா அக்கா தங்களின் தொடர் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் ..

      பயணத்தில் இருந்ததால் தங்களின் கருத்தை பிரசுரிக்க தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும்

      Delete