(75) யான் சிறியன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே.
திருமலை நம்பி திருப்பதியில் வசித்து வந்தார். இவருடைய தங்கை பூமி தேவி தான் சுவாமி ராமானுஜருடைய தாய்.
சுவாமி ராமானுஜருக்கு ‘இளையாழ்வார்’ என்று பெயர் சூட்டியவர் திருமலை நம்பி.
திருமலை நம்பி ஆளவந்தாரின் சிஷ்யர். திருமலையில் பெருமாளுக்குத் தீர்த்த கைங்கரியம் செய்து வந்தார்.
ஒரு முறை ஆளவந்தார் திருவரங்கத்தில் நம்மாழ்வார் பாசுரங்களை விவரித்துக்கொண்டு இருந்தார். அதில் திருவேங்கடம் பாசுரம் பற்றி வந்தபோது அவருக்குத் திருவேங்கட பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்ற ஆசை மனதில் உதித்தது.
அவருடைய சீடர் திருமலை நம்பி தன் ஆசாரியனின் மனதில் ஓடிய எண்ணத்தைப் புரிந்துகொண்டு எழுந்தார் “திருவாய்மொழி காலட்சேபத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். அடியேனுக்கு விடை கொடுக்க வேண்டும். திருமலைக்குப் புறப்படுகிறேன்” என்று உடனே திருவேங்கடவனுக்குத் தொண்டு செய்யத் திருமலைக்குப் புறப்பட்டார்.
திருமலையில் தினமும் விடியற்காலை எழுந்து, அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு சோலைகள் நிறைந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபவிநாசன குளத்தில் தீர்த்ததைத் திருமஞ்சனத்துக்கு எடுத்துச்செல்வார்.
ஒரு நாள் திருமலை நம்பி தீர்த்தம் எடுப்பதற்குத் தாமதம் ஆகிவிட்டது.
அந்தச் சமயம் வேடுவ சிறுவன் அவர் முன் வந்து நின்றான். “தாத தாத” (அப்பா என்று பொருள் ) தாகமாக இருக்கிறது கொஞ்சம் நீர் தா“ என்று கேட்டான். அதற்கு நம்பிகள் “பெருமாளின் திருமஞ்சனத்துக்கு வேண்டிய தீர்த்தம், எனக்கு ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது. பக்கத்தில் குளம் இருக்கிறது அங்கே சென்று குடித்துக்கொள்” என்று கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார்.
சிறுவன் விடவில்லை அவர் முன் மீண்டும் வந்து நீர் கேட்டான். நம்பி மீண்டும் மறுத்துவிட்டு வேகமாகக் கோயில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
சிறுவன் நம்பியைத் தொடர்ந்து தன் அம்பினாலே குடத்தைத் துளைத்து அதிலிருந்து வழிந்த தீர்த்ததை பின்னாலிருந்து பருகினான்.
தீர்த்தக்குடத்தின் சுமை குறைவதை உணர்ந்த திருமலை நம்பி திரும்பிப் பார்க்க அவருக்கு என்ன நடந்தது என்று புரிந்தது.
பெருமாளுக்குப் பெரிய அபசாரம் நிகழ்ந்துவிட்டதே என்று வருந்தினார்.
அந்த வேடுவ சிறுவன் “தாத கவலை வேண்டாம் இங்கே இன்னொரு இடத்தில் தீர்த்தம் இருக்கிறது காண்பிக்கிறேன்” என்று நம்பியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
ஓர் இடத்தில் அம்பை மேலே விட அம்பு பட்ட இடத்திலிருந்து தீர்த்தம் வரத் தொடங்கியது.
சிறுவன் “தினமும் எனக்கு இந்தத் தீர்த்தத்தையே சமர்ப்பிப்பீர். இதுவே நமக்கு இஷ்டமான தீர்த்தம் ” என்றான். நம்பி புரியாமல் சிறுவனைப் பார்த்தபோது சிறுவன் சங்கு சக்கரத்துடன் காட்சி அளித்தான். நம்பிக்குச் சிறுவனே வேங்கடவன் என்று தெரிந்தது. (சிறுவன் அம்பு விட்ட இடம் தான் ’ஆகாச கங்கை’ என்று இன்றும் இருக்கிறது)
சுவாமி ராமானுஜர் திருவரங்கத்தில் வைணவ பீடத்தை அலங்கரித்த பிறகு திருமலைக்குச் செல்ல விரும்பினார். சீடர்களுடன் ராமானுஜர் திருமலைக்குப் புறப்பட்டார். திருமலையின் அடிவாரத்துக்கு வந்து அடைந்தார்.
ராமானுஜர் வந்து சேர்ந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட அனந்தாழ்வான் கீழே ஓடோடி வந்தார். ராமானுஜரைச் சேவித்தார். மலைக்கு மேலே கோயிலுக்கு வர வேண்டும் என்று வேண்டினார்.
ராமானுஜர் யோசித்தார் “ஆதிசேஷனே மலையாகத் திருமலையில் மலையப்பனைத் தாங்கி நிற்கிறார். அவர்மீது எப்படிக் காலை வைத்து மலைமீது ஏற முடியும்?” அது மட்டும் இல்லை, நம்மாழ்வார் திருவேங்கட மலையே என் உடல்! என்று கூறியிருக்கிறார் நான் எப்படி அதன் மீது காலடி வைப்பேன்? அது தகுமோ ?” என்றார்.
அனந்தாழ்வான் ராமானுஜரை வணங்கி “நீங்கள் ஏறாவிட்டால் இனி யாரும் ஏறமாட்டார்கள். மலையப்பனை யாரும் தரிசிக்க வரமாட்டார்கள். பக்தர்களைக் காணாமல் பெருமாள் ஏங்கிவிடுவார். பெருமாள் சந்தோஷம் தானே நமக்கு முக்கியம் ?” என்றார்.
ராமானுஜர் யோசித்துவிட்டு ஏறத்தொடங்கினார்.
இருந்தாலும் காலை மலை மீது வைக்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.
கால் வைத்து ஏறாமல் முழங்காலால் ஏறினார். முட்டியிலிருந்து ரத்தம் வரத் தொடங்கியது. அனந்தாழ்வானும் மற்றவர்களும் “நீங்கள் இப்படி ஏறினால் மற்றவர்களும் உங்களையே பின்பற்றி இதுபோல ஏறுவார்கள். அதனால் பக்தர்களுக்குக் கஷ்டம் ஏற்படும். நாளடைவில் இந்தக் கஷ்டங்களால் அதிகப் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். யாரும் வரமாட்டார்கள்” என்றார்.
ராமானுஜர் அனந்தாழ்வான் சொல்லுவதைக் கேட்டு மலை மீது ஏறினார்.
ராமானுஜர் வருகிறார் என்று தகவல் கேட்டுத் திருமலை நம்பி மிகுந்த சந்தோஷம் அடைந்தார். பெருமாளுடைய பிரசாதங்கள் மாலைகளை எடுத்துக்கொண்டு ராமானுஜரை வரவேற்றார்.
திருமலை நம்பிகளே எதிர்கொண்டு வரவேற்றதைக் கண்ட ராமானுஜர் மகிழ்ச்சியுடன் அதிர்ச்சியும் அடைந்தார். நம்பியைப் பார்த்து ”இந்தச் சிறியவனை எதிர்கொண்டு அழைக்க மிகப் பெரியவரான தாங்கள் நேரில் வர வேண்டுமோ ? வேறு யாரையாவது அனுப்பியிருக்கலாமே ?” என்றார்.
திருமலை நம்பி “உடையவரே ! இங்கே எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன். என்னைவிடச் சிறியவர் வேறு யாரும் திருமலையில் கிடைக்கவில்லை. அதனால் உம்மை அழைக்க நானே நேரில் வந்தேன்” என்றார் பணிவுடன்.
இது "பரஸ்பர நிச்ச பாவை" என அறியப்படும் - ஒவ்வொரு வைஷ்ணவனும் மற்றொரு வைஷ்ணவனை சந்திக்கையில் தன்னை சிறியன் என்றே கொள்வான். ஆழ்வாரும் கூட தன்னைத் தானே, "சீலமில்லா சிறியன்" என்பார்.
“சாமி! பெருமாளே திருமலை நம்பியுடன் பேசினார். ராமானுஜருக்கு ராமாயணம் முழுவதும் கற்றுக் கொடுத்த குரு. ஆனால் நம்பியிடம் உள்ள பணிவு தன்னடக்கம் என்னிடம் இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!”என்கிறாள் திருக்கோளூர் மங்கை.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
தகவல்கள் அனைத்தும் நன்று. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete