05 October 2024

ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்

 ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்

சிதம்பரத்தில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் சேத்தியாத்தோப்பில் இருந்து சுமார் 17 km தொலைவிலும் இக்கோவில்  உள்ளது .

108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது என்று கல்வெட்டு உள்ளதாக கூறுவர். இது திவ்ய தேசமல்ல ஆனால் அதனினும் பெருமை வாய்ந்தது. சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. கல் வெட்டுகளில் இவ்வூர் "வீர நாராயண புரம்" என குறிப்பிடப் பட்டுள்ளது.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.







மூலவர்: ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில்

தாயார்: ஸ்ரீ மரகதவல்லி தாயார் தனி சன்னதியில்

உற்சவர்: ஸ்ரீ ராஜகோபாலன்,ஸ்ரீ  சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.

உற்சவ தாயார்; ஸ்ரீ செங்கமலவல்லி தாயார்

தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி

தலவிருட்சம் : நந்தியாவட்டை

பிரார்த்தனை பெருமாள்: ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ செண்பக மன்னனார்

தல விருச்சம் : அடுக்கு நந்தியாவட்டை

தல தீர்த்தம் : தேவ புஷ்கர்ணி

நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம். மற்றும் நாத முனிகள் மற்றும் ஆளவந்தார்  அவதார தலம் .








மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. 

மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.

பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். தவிர அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி உண்டு.



.







தல வரலாறு -

ஜிரும்பன ராஜா மகரிஷியின் பிரார்த்தனையினால், மகாலட்சுமி தேவியே அவரது குழந்தையாக இங்கு பிறந்தார். அவள்  இளம்பெண்ணாக வளர்ந்தவுடன், அவளின் திருமணத்திற்காக  ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் நாராயண பகவான் தனது கருட வாகனத்தில் ஒரு மன்னன் (மன்னன்) வேடத்தில் இங்கு வந்தார். 

சுயம்வரத்தில் மஹாலக்ஸ்மி தேவியை வென்ற பெருமான், தன்னைத் தாக்கிய மற்ற மன்னர்களை  தோற்கடித்தார். ஸ்ரீமன் நாராயணன் இங்கே வீரம் (வீரம்) காட்டியதால், அவர் வீர நாராயண பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.  

காஞ்சிபுரத்தில் பிரம்மா ஏற்பாடு செய்த அஸ்வமேத யாகத்தில் வேத மந்திரத்தை உச்சரிக்கும் போது மாதங்க ரிஷி தவறு செய்தார் என்று மற்றொரு கதை கூறுகிறது. பிரம்மாவின் சாபத்திலிருந்து தன்னை விடுவிக்க , அவர் ஸ்ரீ முஷ்ணத்திற்கு வந்தார், அங்கு இறைவன் அவர் முன் தோன்றி, ஸ்ரீ முஷ்ணத்தின் தென்கிழக்கில் உள்ள மன்யு க்ஷேத்திரத்திற்குத்  செல்லுமாறு கூறவே, இங்கு  வேத புஷ்கரணிக்கு அருகில் தவம் மேற்கொண்டார்.

பல வருடங்கள் இங்கு தவம் செய்த பிறகு, நாராயண பகவான் தனது சதுர்புஜ வடிவில் ரிஷியின் முன் தோன்றி அவருக்கு தரிசனம் அளித்து, ரிஷியின் விருப்பப்படி இங்கு தங்க ஒப்புக்கொண்டார்.

மதங்க மாமுனிவருக்குப் பெருமாள் சேவை சாதித்து அருளிய இடமாதலால் மதங்காஸ்ரமம் என்னும் பெயர் பெற்ற திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.




வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த தலம் இது. "லக்ஷ்மி நாத சமாரம்பாம்" என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்.



ஸ்ரீமத்  நாதமுனிகள்  

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களில், முதல் மூவர் விண்ணுலகத்தவர்.

நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று பெயர் பெற்றவர்.






இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது.


பிறந்த காலம்      - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு - சோபக்ருத ஆண்டு
மாதம் - ஆனி
திருநட்சத்திரம் - அனுசம்
திதி - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம் - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம் - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.

இவரது இயற்பெயர் திருவரங்க நாதன். ஆனால் இவர் சிறந்த யோகியாக இருந்ததால் இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர்.

அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.


காட்டுமன்னார்குடியில்   ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன.

எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை.

அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்க வந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள்.

அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க, அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும், அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர்.


அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை.

நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன.

அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள்.

அப்படி ஓதும் போது யோகதசையில் நம்மாழ்வார் நாதமுனிகளின் முன்பு தோன்றி தன்னுடைய திருவாய்மொழி மட்டும் இல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் தந்தருளினார்.

அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தினார் நாதமுனிகள். 
.
பாடல்களை ஓதினால் அவ்வளவு எளிதாக மனதில் நிற்காது. அதே பாடல்களை இசையுடன் பாடினால் மிகவும் எளிதாக மனதில் நிற்கும்.

நாதமுனிகள் தனது மருமகன்களான கீழையகத்தாழ்வார் மற்றும் மேலையகத்தாழ்வார் (ஆரையர்கள் இந்த இருவரின் வழித்தோன்றல்கள்) ஆகியோருடன் சேர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசை (ராகம் மற்றும் தாளம்) மற்றும் நடன வடிவத்தை அளித்து உலகம் அனுபவிக்கும் மற்றும் அனுபவிக்கும் வடிவத்தில் வழங்கினார்.

ஸ்ரீரங்கம் சென்று திருவாய் மொழி பாசுரங்களின் “அரையர் சேவை”யை தனது இரு மருமகன்களுடன் செய்து, திருமங்கை ஆழ்வார் காலத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அத்யயன உற்சவத்தைத் தொடங்கினார்.


ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் .

அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு.

தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.

உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.









ஆளவந்தார்

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.  

ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். 

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்து அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர்.  நாதமுனிகளின் பேரன்.


நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.  

 பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். 

இவர் மஹாபாஷ்யபட்டரிடம் தொடக்க கல்வியைப் பயின்றார்.

அந்த சமயத்தில், ராஜ புரோஹிதரான ஆக்கியாழ்வான், அவனுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்து, அவன் தலைமை புரோஹிதராக இருப்பதால் அனைத்து புரோஹிதர்களும் அவனுக்கு வரி கட்டுமாறு அல்லது வாதத்துக்கு வந்து தன்னை ஜெயிக்குமாறு கூறினான். 

இதைக் கேட்டவுடன் மஹாபாஷ்யபட்டர் வருத்தப்பட, யமுனைத்துறைவர் இந்த பிரச்னையை தாம் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். 

மஹாபாஷ்ய பட்டரோ சிறுவனான உன்னால் பெரும் வித்வானான ஆக்கியாழ்வானை எப்படி வெல்ல முடியும் என்று பரிதவித்தார். 

பெரிய மரமாக இருந்தாலும் சிறிய வாள் அறுத்துவிடாதா? அடுத்து ஆணவம் கொண்ட ஆக்கியாழ்வானை ஆணவமே அழிக்கும்; அதில் தான் ஒரு கருவி” என்றார்.


அரண்மனையிலிருந்து வந்தவர்களிடம் யமுனைத்துறைவர், “அல்பமான விளம்பரத்தை விரும்பும் கவிஞனை அழித்துவிடுவேன்” என்ற ஒரு ஸ்லோகத்தை அந்த பிரதிநிதிகளிடம் கொடுத்து அனுப்பினார். 

இதைப் பார்த்த ஆக்கியாழ்வான் மிகவும் கோபமடைந்து, அவனது வீரர்களை அழைத்து, யமுனைத்துறைவரை ராஜாவின் தர்பாருக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டான். 

யமுனைத் துறைவர் அந்த வீரர்களிடம், “நானும் வித்வான் தானே… எப்படி நடந்து வருவது.? பல்லக்கு அனுப்பி தக்க மரியாதையுடன் அழைத்தால் தான் வருவேன்” என்று கூறினார். 

இதைக் கேட்ட ராஜா ஒரு பல்லக்கை அனுப்ப, யமுனைத்துறைவரும் ராஜ தர்பாருக்கு வந்தார். வாதம் தொடங்குவதற்கு முன், யமுனைத்துறைவரின் மலர்ந்த முகம் கண்டு, இந்த சிறுவன்தான் வெற்றிபெறுவார் என்று உறுதியாக ராஜாவிடம் கூறினாள், ராணி.


“இல்லை ராணி, அவன் சிறுவன். பச்சிளம் பாலகன். இப்போதுதான் பாடம் படித்து வருகிறான். எப்படி ஜெயிக்கமுடியும்?” என ராஜா சொல்ல, வாக்குவாதம் வளர்ந்தது. 

கடைசியில் ராணி, “அப்படி அவர் தோற்றால், நான் ராணியல்ல. ராஜாவின் சேவகியாக இருப்பேன். சரி. ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?”. என்று பதிலுக்கு கேட்க, ராஜாவும், “பாதி ராஜ்யத்தை யமுனைத்துறைவருக்குத் தருவதாகக் கூறினார்.


ஆக்கியாழ்வான் தன்னுடைய வாதத்திறமையை நினைத்து, யமுனைத்துறைவர் எதைக்கூறினாலும் அதை தன்னால் மறுத்துப்பேசமுடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார். 

யமுனைதுறைவர் 3 கேள்விகளை கேட்டு அதை மறுத்து பேசுமாறு கூறினார்.


1.உன் தாய் மலடி அல்ல

2.இந்த ராஜா பேரரசர்

3.இந்த ராணி பதிவிரதை

இதைக் கேட்ட ஆக்கியாழ்வான் ஒரு வார்த்தையும் பேசாமல் நின்றார். 

ராஜா என்ன செய்வாரோ என்று பயந்து இதை அவரால் மறுத்துப்பேச முடியவில்லை. ஆனால் யமுனைத்துறைவரோ மிகச் சுலபமாக இந்த 3 கேள்விகளுக்கும் மறுத்துப்பேசி பதில் அளித்தார்.


ஆக்கியாழ்வனுடைய தாயார் மலடி தான். ஏனெனில் அவளுக்கு ஒரு குழந்தை மட்டுமே உள்ளது. (ஸாமான்ய ஶாஸ்த்ரத்தில் ஒரு குழந்தை மட்டுமே உடைய பெண்மணியை மலடி என்றே கூறுகிறது)

இந்த ராஜா பேரரசன் அல்ல. ஏனெனில் இவர் உலகத்தையே ஆளவில்லை, உலகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஆள்கிறார்.

சாஸ்த்ரப்படி நடக்கும் திருமணங்களில், குறிப்பிட்ட சில மந்திரத்தின் மூலம் மணமகள் தேவர்களுடன் திருமணம் ஆன பின்னரே அவளுடைய கணவனுடன் திருமணம் நடக்கும். இதனால் ராணி   பதிவிரதை இல்லை என்று நிரூபித்தார்.

ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவருடைய உண்மையான திறமையை உணர்ந்தார். யமுனைத்துறைவர் சாஸ்த்ரத்திலிருந்து சிறப்பாக விளக்கி ஆக்கியாழ்வனை தோற்கடித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டினார். 

ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவருக்கு சிஷ்யரானார். ராணி, எம்மை ஆளவந்தீரோ! என்று கூறி, யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்று பெயர் கொடுத்தார். ராணியும் அவருக்கு சிஷ்யை ஆனாள். ஆளவந்தாருக்கும் பாதி ராஜ்யம் கிடைக்கிறது, அவரும் தன்னை நிர்வாகப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டார்.


வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதாயப் பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  

ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 

 அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார்.

 பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரிய பெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப் பேரரசரானார்.

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு   'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம். 

 இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. 

 ஆளவந்தார்  அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம்,  மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.





கோவிலின் அமைப்பு -

கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே செல்லும் போது கொடிமரத்தை காண்கிறோம் . அதன் பிறகு பலி பீடம் பின்பு பெரிய திருவடியான கருடாழ்வார் இருக்கிறார் .அவரை கடந்து உள்ளே சென்றால் இக்கோயில் உருவாக காரணமான மதங்க முனிவர் தனி சன்னதியில் உள்ளார் . நம்மாழ்வாரை வணங்கியவாறு மதுரகவியாழ்வார் உள்ள சந்நதியை காண்கிறோம் . பின்பு நாத முனிகள் சன்னதி , நரசிம்மர் சன்னதி ,ஸ்ரீராமர் சன்னதி தி ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் .

இந்தத் திருக்கோவிலில் ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ வராகரையும் நாம் தரிசிக்கலாம். பிராகாரத்தில் ஆளவந்தார் சந்நிதியை வணங்கி விட்டு தாயார் சந்நிதிக்குச் செல்வோம். இங்கு தாயார் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் என்னும் திருப்பெயரோடு அருள்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்று அழைக்கப் படுகிறாள். அடுத்து ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் ஆகியோரையும் வணங்குகிறோம்.













ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -

-ஸ்ரீ கூரத் ஆழ்வான்-

(திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழி வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணங்குகிறேன்)

கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன்
மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது.
பல நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம்.


"லக்ஷ்மி நாத சமாரம்பாம்" தனியன் ஏற்படுத்திய ஸ்தலம் என்பார்கள்

இங்கு நடுவில் ஸ்ரீ வீர நாராயணன், இடதுபுறம் நாத முனி சன்னதி (தெற்கு நோக்கி), வடக்கே ஆளவந்தார்  சன்னதி (முகம்) அவரது வலது (நாதமுனிகள் சன்னதிக்கு நேர் எதிரே) மற்றும் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார்  சன்னதிக்கு இடையில் அவரது வலதுபுறத்தில் மரகதவல்லி தாயார் சன்னதி உள்ளது.






கண்டராதித்த சோழன் கால கல்வெட்டில் வீரநாராயண விண்ணகர் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.

ஜடாவர்ம சுந்தரபாண்டியன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் பெருமாளின் பெயர் மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.

கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டில் அழகிய மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.

பாஞ்சராத்ர ஆகம தென்கலை சம்பிரதாயத் திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.

இவ்வூரில் அமைந்துள்ள வீராணம் ஏரி மிகவும் புகழ்பெற்றது . கடல் போல் காட்சியளிக்கும் இந்த வீராணம் ஏரியை கட்டியது முதலாம் பராந்தக சோழன் ஆவார் . அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தில் இந்த வீராணம் ஏரி பற்றி சிறப்பாக சொல்லியிருப்பார்கள் .

 இவ் காட்டுமன்னார்கோயில் கல்வெட்டுகளில் சதுர்வேதிமங்கலம் என்று இத்திருத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் பராந்தக சோழன், தனது ஆட்சியின் போது (கி.பி. 907 முதல் 935 வரை), சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளத்தை உருவாக்கி, அதற்கு 'வீர நாராயணன் ஏரி' என்று பெயரிட்டுள்ளார்.  'வீர நாராயணன்' என்பது அவரது வீரத்திற்காக அவருக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்.

வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தையும் உருவாக்கினார். இந்த கிராமம் நான்கு வேதங்களை நன்கு அறிந்த அறிஞர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. வீராணம் குளத்தின் வலது ஓரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் இப்போது காட்டுமன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.


ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் அவதார ஸ்தல திருமாளிகையில் 

 ஸ்ரீமந் நாதமுனிகள் ஆவணி மாஸ அனுஷம் திருநக்ஷத்திரம் திருமஞ்சனம்






திருவாய்மொழி
ஐந்தாம் பத்து


எட்டாம் திருவாய்மொழி – ஆராவமுதே

பேறுகிட்டாமையால் ஆராவமுதாழ்வாரிடத்தில் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமருதல்

ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  1

3418



எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   2

3419


என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே* 3

3420


செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*. 4

3421



அழுவன், தொழுவன், ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
தழுவல் வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.  5

  3422


சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடி சேரும்- 
ஊழ் கண்டிருந்தே*  தூராக் குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.6

3423


அரி ஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.7

3424


களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்*  களை கண் மற்று இலேன்* 
வளைவாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 
தளரா உடலம், எனது ஆவி*  சரிந்து போம்போது* 
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  8

3425



இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*. 9

3426


வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2) 10

3427



உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 
குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2) 11


3428







ஸ்ரீ மரகதவல்லி சமேத  ஸ்ரீ வீரநாராயண பெருமாள் திருவடிகளே சரணம்..




அன்புடன்
அனுபிரேம்💓💓💓

No comments:

Post a Comment