28 September 2024

ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்

 ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயில்  

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். விருத்தாச்சலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மனிதர்களால் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்திகளில் ஒன்று. இத்தகைய தானே தோன்றிய மூர்த்திகளை “ஸ்வயம் வியக்தம்” என்று வழங்குவார்கள்.











மூலவர்   – ஸ்ரீ பூவராஹன்

உற்சவர் – ஸ்ரீயக்ஞவராஹன்

தாயார்   –  ஸ்ரீ அம்புஜவல்லித்  தாயார்

விமானம் - பாவன விமானம்

தல விருட்சம்  –அரசமரம்

தீர்த்தம்  –  நித்யபுஷ்கரணி

பழமை  –  1000 வருடங்களுக்கு முன்









தல வரலாறு-


ஜயன், விஜயன் ஆகிய இருவரும் தங்களது முதல் பிறவியில், கஷ்யபரின் இரு மகன்களாகப் பிறந்தனர். கஷ்யபர் அவர்களுக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்தபோது, இயற்கையின் சீற்றங்களான பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.


ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரும் கடுந்தவம் மேற்கொண்டு, ஏறக்குறைய சாகா வரத்தைப் போன்ற ஒரு வரத்தை பிரம்மாவிடம் பெற்று, கர்வத்தினால் மூவுலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர்.

ஹிரண்யாக்ஷனின் வருகையைக் கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர்.

இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான்.

சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தினுள் சென்றபோது, அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.

பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன் வருண தேவரைத் தன்னுடன் சண்டையிடும்படி கேட்டுக் கொண்டான்.

ஹிரண்யாக்ஷனின் கர்வத்தைக் கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டதென்றும், விஷ்ணுவே சண்டையிடுவதற்குத் தகுதியான நபர் என்றும் அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணுவின் இருப்பிடத்தை நாரதரின் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.


ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதக கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர்.

பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்த போது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது.



அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தின் அளவை அதிகரித்து கொண்டே செல்வதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர்.

 பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தைக் கைவிட்டு உறுமிக் கொண்டிருந்த வராஹரைப் பார்த்து துதி பாடினர்.

இயல்பாக பன்றிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதக கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு, வராஹர் நுகர்ந்து கொண்டே நீருக்கடியில் சென்றார்.

பூலோகத்தையே தன் சிறு கோரைப்பற்களால் தாங்குமளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது.

ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனைத் தன் கோரைப்பற்களால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அற்புத  சக்தியினால் மிதக்க வைத்தார்.





கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் பாம்பைப் போல சீறினான். தன் கையில் இருந்த கதையினால் வராஹரைத் தாக்க ஹிரண்யாக்ஷன் முயன்றான்.

அப்போது வராஹருக்கும் ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது.

சில சமயம் ஹிரண்யாக்ஷனின் கை ஓங்குவதைக் கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதையை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.

அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதையினால் வராஹரைத் தாக்க முன் வந்தான்.

கதை, சூலம் ஆகிய ஆயுதங்கள் மட்டுமின்றி அவர்கள் இருவரும் கைகளாலும் சண்டையிட்டனர்...

யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன் பல மாயாஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயாஜாலங்களையும் நொடிப் பொழுதில் அழித்தார். தன் மாயாஜால வேலைகள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்த ஹிரண்யாக்ஷன் தனது பலமான இரு கைகளால் பகவானைத் தழுவி நசுக்க முன் வந்தான்.

வராஹ பகவான் அவனது காதில் பலமாக அறைவிட்டபோது, ஹிரண்யாக்ஷன் விழி பிதுங்கி, கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.


பிரம்மாவும் இதர தேவர்களும் அங்கு விரைந்து பூமழை பொழிந்தனர்.

ஹிரண்யாக்ஷனின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவனது நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும் ஞானிகளும் பகவானின் திருப்பாதங்களைத் தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிட்டியது.





கோவில் அமைப்பு -

ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.


விண்ணை முட்டும் கம்பீரமான கோபுரம் ஏழு நிலையுடன் பார்க்கப் பரவசம் தரும்.

நீண்ட சந்நதி தெரு. கோபுரத்துக்கு முன்னால் உயர்ந்த பீடத்துடன் கூடிய கருடக் கொடி மரம். மேலே அம்பாரியில் அமர்ந்த நிலையில் கருடாழ்வார். உள்ளே அழகிய சிறிய நான்கு கால் மண்டபம். இடதுபுறத்தில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு தனிச் சந்நதி. உள்ளே முதலில் நூற்றுக்கால் மண்டபம். அகன்ற பெரிய மண்டபம். 

கோபுரத்தின் முதல் நிலையை கோஷ்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருவடியைப் பார்க்கலாம்.

திருவடிகளைச் சேவித்த பின்னர்தான் வராகப் பெருமாளை வணங்கிச் செல்வது வழக்கம். நூற்றுக்கால் மண்டபத்தின் வலப்புறம் நம்மாழ்வார் சந்நதி. நேராக கொடிமரம், பலிபீடம், வேலைப்பாடமைந்த கருடாழ்வார் சந்நிதி ஆகியவையும் இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் அமைந்துள்ளன.










 புருஷசூக்த மண்டபம் -

இதைக் கடந்து சென்றால் அடுத்து இருப்பது  மிக அற்புதமான புருஷசூக்த மண்டபம். அது முழுக்க முழுக்க கலைப் பொக்கிஷமாக சிற்பக்கூடம் ஆக அமைந்திருக்கும் எழிலான மண்டபம்.

அங்கே உயிர் ஓவியங்களாக கண்ணில் நிலைபெற்று நின்றிருக்கும் பல சிற்பங்களை  நாம் காணலாம்.

இந்த  புருஷசூக்த மண்டபம், பதினாறு கால் மண்டபமாக  உள்ளது. சிற்ப அழகு மிளிரும் நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. 

72 பரதநாட்டிய நிலைகளுக்கான  சிற்பங்கள்  நுழைவு வாயில் மற்றும் கோவில் வளாகத்தின் பிற இடங்களில் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் காணப்படும் பெண்களின் நீளமாகப் பின்னலிட்ட  ஜடையும், ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் போன்ற அலங்கார  அணிகலன்களின் அழகும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். நம் முன்னோர்களின் சிற்பத் திறனுக்கும், பொறியியல் வல்லமைக்கும் இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.


ஒவ்வொரு தூணிலும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள்.

















 அதையும் தாண்டி உள்ளே சென்றால் விசாலமான மகா மண்டபம். அதற்குள் மிக அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய திருஉண்ணாழியும் அர்த்த மண்டபமும் காணலாம். இதற்கு உள்ளேதான்  வராகப் பெருமாள் இடுப்பில் கை  வைத்துக்கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார்.

இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும்.  

அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.


ஸ்ரீ பூவராகசுவாமி மேற்கு நோக்கியபடி  இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும்.


இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டுகளில் இவர் “ஆதி வராக நாயனார்” என்றே குறிப்பிடுகிறார்.அருகே சந்தான கோபாலனையும் காணலாம். பற்பல உற்சவத் திருமேனிகளும் இங்கு உள்ளன.



தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார்.

இரு கரங்களிலும் மலர் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அம்புஜ வல்லித்   தாயாருக்கு,  ஊஞ்சல் மண்டபமும், அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் கொண்ட தனிக்கோயில் அமைப்பிலேயே சந்நதி உள்ளது. திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் தாயார் சன்னதி போலவே ஆண்டாளுக்கும் தனிச் சன்னதி உண்டு.











பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்து வந்து ஆதிசேஷன் மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச் செய்து, தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரச மரம்) துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீ முஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்றார்.

 பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீ பூவராகன் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.




.
 முஸ்தாபிசூரணம்

ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு  முஸ்தாபிசூரணம்  என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம். 

பகவான் திவ்யமான பன்றி ரூபத்தில்  வீற்றிருப்பதால் பெருமாளுக்கு  கோரைக் கிழங்கு  விசேஷமாக நிவேதனம் செய்யப்படுகின்றது. இதிலிருந்து தயாரிக்கப்படும் முஸ்தாபிசூரணம் எனப்படும் தீரா நோய்களையும் தீர்க்கும் மருந்து மகாபிரசாதமாக இங்கு வழங்கப்படுகிறது.

 கோரைக்கிழங்கு,  அரிசி மாவு,  பூரா சக்கரை (குழவு சீனி), ஏலக்காய் பொடி, நெய் முதலியவற்றைக்கொண்டு இந்த முஸ்தாபிசூரணம்   தயார் செய்யப்படுகிறது.

தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் முடிந்த பின்னர்  கோரைக்கிழங்கு லட்டு (முஸ்தா சூரணம்) பிரசாதமாக வழங்கப்படுகிறது.




கோவிலின் உட்புறம் ...

மூலவரையும் உற்சவரையும் வணங்கி விட்டு திருவலமாக வந்தால் குழந்தை அம்மன் சந்நதி என்றும் வழங்கப்பெறும் தாய்மார் எழுவரின் திருவுருவங்களைக் காணலாம்.

இங்குள்ள அம்புஜவல்லி தாயாரின் தோழிகள் என இவ்வெழுவரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். குழந்தை இல்லாதவர்களும், திருமணத்தடை இருப்பவர்களும் இந்த சப்த கன்னிகைகளை வணங்குகின்றனர். இதனையடுத்து தெற்கு நோக்கிய அழகான விஷ்வக் சேன மூர்த்தி சந்நதி. வட கிழக்கு மூலையில் அமைந்துள்ள யாகசாலை.

தொடர்ந்து வேதாந்த தேசிகர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சன்னதிகள். தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி இடம்பெற்றுள்ளது. இவற்றைச் சேவித்துக் கொண்டுவந்தால், தாயார் சந்நதியை அடையலாம்.


தாயார்   சந்நதிக்கு அடுத்து ராமானுஜருக்குச் சந்நதி உள்ளது. அதனை அடுத்து உடையார் மண்டபம் என்று வழங்கப்பெறும் விழா மண்டபம். அதில் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தது மிக அழகான முறையில் காட்சிதரும் வேணுகோபாலன் சன்னதியும்,அதனை ஒட்டி வடபுற கோபுரவாசல் சொர்க்க வாசலாகவும்  அமைந்துள்ளது.











பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். 

ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில், அவ்வூர் வழியாகச் சென்றார், மத்வ மதத்தைச் சார்ந்த யாத்ரிகர் ஒருவர். 

அவர், முஷ்ணத்திற்கு சென்று பூவராக ஸ்வாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அவருக்கு நவாப்பற்றி தெரியவரவே, சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க, நவாப் பூரண குணமடைந்தாராம். 

அது முதல் நவாப், பூவராகப் பெருமானிடம் பக்தி கொண்டு, அவருக்குத் தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளும் போது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மானம் செய்து, அங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார். 

இன்றும் முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராக சுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும்பொழுது, முகமதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். 

அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசைகளுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல்புறம் வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள்.





அதைப்போலவே ஐரோப்பியர்கள் குறிப்பாக தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக 1826 ஆம் ஆண்டு பணிபுரிந்த ஹைட் என்பவர் சில அணிகலன்களையும் தேர்த் திருவிழாவிற்கு தேர்வடம் ஆக இரும்புச் சங்கிலியும் இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.





கோவிலின் வெளிப்புறம் ...























பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*பண்டு ஒரு நாள்
 மாசு உடம்பில் நீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 
தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)   

614


ஏனத்தின்உரு ஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
வானத்தில் அவர் முறையால்*  மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள* 
கானத்தின் கடல் மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
ஞானத்தின் ஒளி உருவை*  நினைவார் என் நாயகரே. (2)  

1100



பார் ஆர் அளவும் முது முந்நீர்*  பரந்த காலம்,* வளை மருப்பின்-
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*
கூர் ஆர் ஆரல் இரை கருதி*  குருகு பாய, கயல் இரியும்*
கார் ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

1720


தீது அறு திங்கள், பொங்கு சுடர், உம்பர்
 உம்பர்*  உலகு ஏழினோடும் உடனே,* 
மாதிர மண் சுமந்த வட குன்றும், நின்ற*  
மலை ஆறும் ஏழு கடலும்*
பாதமர் சூழ் குளம்பின் அக மண்ட லத்தின்* 
 ஒரு பால் ஒடுங்க, வளர் சேர்,* 
ஆதி முன் ஏனம் ஆகி, அரண் ஆய மூர்த்தி* 
 அது நம்மை ஆளும் அரசே. 

1984







  
ஸ்ரீ பூவராக சுவாமி திருவடிகளே சரணம்..





அன்புடன்
அனுபிரேம்💓💓💓



3 comments:

  1. Superrrrrr😍😍

    ReplyDelete
  2. அருமையான பதிவு ஶ்ரீ முஷ்ணம் சென்று சேவித்த உணர்வு

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு. படங்களும் தகவல்களும் நேரில் சென்று பார்த்த உணர்வினைத் தந்தன. நன்றி. தொடரட்டும் பக்தி உலா.

    ReplyDelete