11 September 2024

பாரதியார்... சில நினைவுகள்

 மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று ...






வந்தே மாதரம் – ஜய
வந்தே மாதரம்


ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம் (வந்தே)

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன்தேசத்தவர் உவந்தே சொல்வது (வந்தே)

ஒன்றாய் நின்று இனி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவோம். (வந்தே)



 வங்கத்தில் தோன்றிய "வந்தேமாதரம்" எனும் சொல் தமிழகத்தில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதி ஆகியோரால் முழங்கப்பட்டு அந்த முழக்கங்களே முதல் இருவரையும் சிறையில் அடைத்ததையும் வரலாறு சொல்லுகிறது. 

அந்த வந்தேமாதரம் எனும் மந்திரச்சொல்லை நாம் சொல்ல வேண்டிய, இல்லை இல்லை முழங்கவேண்டியதன் அவசியத்தை பாரதி ஒரு கவிதையில் சொல்லுகிறார். 

இந்த பாரத புண்ணிய பூமி பழம்பெரும் பூமி; 
நாமதன் மக்கள் இந்நினைவகற்றாதீர் என்று மக்களுக்கு உரைத்தவர் பாரதி.

 அந்த பாரத பூமியின் மண் எத்தகையது தெரியுமா? இந்த புனிதமான மண்ணில்தான் நம் தந்தையும் தாயும், அவர்களது முன்னோர்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தனர்.

 அந்தப் புனித மண்ணில் அவர்கள் சிறு பிள்ளைகளாக ஓடியாடி விளையாடியதையும், அறிவிலே தேர்ச்சி பெற்று வளர்ந்து நின்றதையும், திருமணமாகி இன்புற்று வாழ்ந்ததையும்,

 பின்னர் முதுமையடைந்து மாண்டுபோன பின்பு இதே மண்ணில் அவர்கள் பூந்துகளாக மாறி மண்ணோடு மண்ணாகக் கலந்து கிடப்பதையும்,

 அத்தகைய புனிதமான மண்ணை சிந்தையில் இருத்தி வந்தனை கூறி வாயுற வாழ்த்தேனோ, இதை "வந்தேமாதரம்" "வந்தேமாதரம்" என்று வணங்கேனோ என்கிறார்.

 உலகிலே கர்மபூமி எனப் புகழ்பெற்று புனித நதிகளால் வளமூட்டி, வானுயர்ந்த மலைகளும், காடுகளும், வனங்களும், நதி தீரங்களும், புண்ணியத் தலங்களும் சூழ்ந்து கிடக்கும் இந்த புண்ணிய நாட்டை வணங்குவோம் என்று உரக்கக் குரல் கொடுத்த அந்த மகாகவியை இந்த நினைவு நாளில் வணங்கி அவன் வழி நடப்போம். 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?















வளர்க கவியின் புகழ்.....!


அன்புடன்
அனுபிரேம் 🍀🍀🍀








2 comments:

  1. பாரதியின் நினைவுகூர்தல் பதிவு நன்று. ஒவ்வொரு வருடமும் நீங்கள் மறப்பதில்லை. வாரணாசி, திருவல்லிக்கேணி நினைவு வந்தது

    ReplyDelete