21 September 2024

திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில்

சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில்  உள்ளது. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற  திருக்கோவில் இது. 

பெருமாளின் 108 திருப்பதிகளுள் 61 வது திவ்ய  தேசம்.








மூலவர் -  நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர்

தாயார்- அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி

தல விருட்சம் - வெப்பால மரம்

தீர்த்தம் - சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி

புராண பெயர் - நீர்மலை, தோயாத்ரிகிரி

இது ஒரு மலைக்கோயில் ஆகும்.

 சுமார் 200 அடிஉயரம் உள்ள மலை இது. மலையடிவாரத்திலும், மலையின் மேலும் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. இங்கு எம்பெருமான் நான்கு திருக்கோலங்களில், மூன்று அவதார பெருமைகளோடு காட்சி அளிக்கிறார். 

நின்றான்(நீர்வண்ணன்), இருந்தான்(நரசிம்மன்), கிடந்தான்(ரங்கநாதன்), நடந்தான்(த்ரிவிக்ரமன்) என்ற நான்கு திருக்கோலங்களில் இந்த எம்பெருமான் நரசிம்மன், த்ரிவிக்ரமன், இராமபிரான் என்ற அவதாரங்களாக திருநீர்மலையில் காட்சி தருகிறார்.


தாமரை மலர் பீடத்தில் ஹஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பில் சாளக்கிராம மாலையுடன் நீர்வண்ண எம்பெருமான், மலையடிவாரத்தில் காட்சி தருகிறார்.

 நீர் சூழ்ந்த மலையின் நடுவில் காட்சி கொடுப்பதால், இவருக்கு நீர்வண்ணன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த எம்பெருமான் நீல வண்ணத்தில் இருப்பதால், நீலவண்ணப்பெருமாள் என்றும் பெயர் உண்டு.

இராமன் தனி சன்னதியில் மலையடிவார கோவிலில் தரிசனம் தருகிறார். வால்மீகி இராமரை வணங்கிய நிலையில் சுயம்புவாக இந்த சந்நிதியில் உள்ளார்.


தல வரலாறு

ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். 

அப்போது சுவாமி “போக சயனத்தில்’ ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார்.

 அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.




தல பெருமை

நீர் பெருமாள்:  ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். 

ராமபிரானுக்கு தனி  சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.




பொதுவாக கோவில்களில் சுவாமி, கோபுரம், கொடிமரம், பலிபீடம் என்று எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும். வால்மீகிக்கு நீர்வண்ணனாகவும், ராமனாகவும் காட்சி அளித்ததால் இரண்டு எம்பெருமான்களுக்கும் மரியாதை செய்யும் வண்ணம், கோபுரம் ராமர் சன்னதிக்கு எதிராகவும், கொடிமரம் நீர்வண்ணனுக்கு எதிராகவும் அமைக்கப்பட்டு உள்ளது.





ஒரே தலத்தில் நான்கு பெருமாள்:

இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். 

கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். 

தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். 

நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

மலைமேல் உள்ள நரசிம்மர் பாலநரசிம்மராக காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்மனும் த்ரிவிக்ரமனும் பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின், அவதார பயன் கிடைத்தபின், மகிழ்ச்சியுடன் ஸ்ரீ வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது என்கிறார்கள். அதாவது வீற்று இருந்த திருக்கோலத்தில் பாலநரசிம்மராகவும், நடந்த நிலையில் உலகளந்த திரிவிக்ரமனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.


மேலும்,  மலைமேல் சயன திருக்கோலத்தில், ரங்கநாதனாகவும், மலையடிவாரத்தில் திருமணக் கோலத்தில் இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் போகும் முன் உள்ள சீதாராமனாகவும், நின்ற திருக்கோலத்தில் நீர்வண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.


பொதுவாக மூலவரும் உற்சவரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு, மலைமேல் உள்ள மூலவரான ரங்கநாதரின் உற்சவரான அழகிய மணவாளன் வருடத்தில் மூன்று முறை தான் மலைமேல் காட்சி அளிக்கிறார். மற்ற நாட்களில் மலையடிவார கோவிலிலே தான் இருக்கிறார்.

 சித்திரை ப்ரம்மோத்ஸவத்தின் போது கொடியேற்றம் நாள் அன்றும், விடையாத்தி (உற்சவ கடைசி நாள்) நாளன்றும், பங்குனி திருக்கல்யாண வைபவத்தின் போதும் மட்டும் மலைமேல், அழகியமணவாளன் மூலவருடன் காட்சி அளிக்கிறார்.









குழந்தை நரசிம்மர்: நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். 

இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான்.

 எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். 

இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.


மலைக்கு செல்லும் வழி 






மலை மேல் 














தோயம் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். இங்குள்ள மலைக்கு தோயாத்ரி, நீரால் சூழப்பட்ட மலை என்று பெயர்.


திரு நீர் மலை என்று பிரித்துப் பார்த்தால் நீர் என்பது எம்பெருமானின் நீர்மை என்ற குணத்தை குறிக்கும். நீர்மை என்பது எளிமை, அல்லது அடியார்களைக் கண்டால் உருகும் தன்மை. மலை என்பது எம்பெருமானின் உறுதியை குறிக்கும், அதாவது அடியார்களை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு உள்ள உறுதியை குறிக்கும். நீர் என்பது எம்பெருமானின் சௌலப்யத்தையும் (எளிமை), மலை என்பது எம்பெருமானின் பரத்துவத்தையும் (உயர்ந்தவன்) என்பதையும் குறிப்பதாக கொள்ளலாம்.


மூலவர் அரங்கநாதர் மலைக்கோவிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோவிலிலும் காட்சி தருகின்றனர். சுயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவருக்குத்தான். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம்.



கோவில் அமைப்பு: காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல் என்னும்  அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி  உள்ளது.




மலை அடிவார கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது.

உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது. அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். 

பிரகாரத்தில் முதலில் தாயார் சந்நிதி. தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்று அழகான தமிழ்ப் பெயர். பிறகு பரமபதவாசல். அதை அடுத்து ஆண்டாள் சந்நிதி. ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு துளசி மாடம் இருக்கிறது.

அணிமாமலர் மங்கை  தாயார் 


நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு அருகே செங்குத்தான திசையில் கல்யாண ராமர் சந்நிதி.  ராமர் சந்நிதிக்கு எதிரே தனி மண்டபத்தில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.




தைமாதம், ரதசப்தமி அன்று ஒரே நாளில் ரங்கநாதர் ஏழு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அன்று சூரிய உதயத்திற்கு முன்பு சூரிய பிரபை வாகனத்தில் புறப்பட்டு தீர்த்தக்கரையில் சூரிய உதயத்தின் போது, எம்பெருமானின் பாதம் முதல் கேசம் வரை படிப்படியாக தீபாராதனை காண்பார். இது எம்பெருமானுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவார்கள். பின்னர் அன்று, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம் என்று தொடர்ந்து, சந்திரப்பிரபையுடன் என்று அன்றைய திருவிழா நிறைவுபெறும். ரதசப்தமி திருவிழா திருமலையிலும் சிறப்பாக ஏழு வாகன புற்பாடுகளுடன் நடைபெறுகிறது.


வைகுண்ட ஏகாதசியின் போது அழகிய மணவாளன் சொர்க்கவாசல் கடக்கிறார். மாசி மகத்தின் போது கருடவாகனம் காண்பதும் அவரே. பங்குனி உத்திரத்தில் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


ஆனியில் ஒரு நாள் உற்சவம் நரசிம்மருக்கும், ஆடியில் ஒருநாள் உற்சவம் உலகளந்த பெருமாளுக்கும் நடைபெறுகிறது. அப்பொழுது அவர்கள் மலையடிவார கோவிலுக்கு எழுந்தருளி கருடசேவையும் சாதிக்கிறார்கள்.


பங்குனியில் நீர்வண்ண பெருமாளுக்கு மலை அடிவாரத்தில் ப்ரம்மோத்ஸவம். சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் நீர்வண்ணனுக்கும் அணிமாமலர் மங்கை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.




புஷ்கரணியின் பெயர்  மணிகர்ணிகா. இந்த புஷ்கரணிக்குள், நான்கு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். க்ஷீர புஷ்கரணி (ரங்கநாதர்), காருண்ய புஷ்கரணி (நீர்வண்ணர், ராமர்), சித்த புஷ்கரணி (திரிவிக்கிரமர்), ஸ்வர்ண புஷ்கரணி  (சாந்த நரசிம்மர்).மேலும்  இங்கு உள்ள திருக்குளம் மூன்று ஏக்கர் பரப்பில், நடுவில் நீராழி மண்டபத்துடன் அமைந்து உள்ளது.






2-4  அன்று ஆயர் குல கொடி

திருநீர்மலை 


 அன்று ஆயர் குல கொடியோடு அணி மா

 மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு

என்றானும் இரக்கம் இலாதவனுக்கு 

உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ்

நன்று ஆய புனல் நறையூர், திருவாலி,

 குடந்தை, தடம் திகழ் கோவல்நகர்,

நின்றான, இருந்தான், கிடந்தான், நடந்தாற்கு 

இடம் மா மலை ஆவது நீர்மலையே 1

1078   


காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு 

அரை அன்னது, கண்டு அவன் நிற்க*முனே

 மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் 

அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து 

ஆண்டான்*அவுணன் அவன் மார்வு அகலம்

 உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய் 

 நீண்டான்* குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு 

இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  2

1079



அலம், மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  

அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 

புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*

  பொறை தீர, முன் ஆள் அடு வாள் அமரில்* 

பல மன்னர் பட, சுடர் ஆழியினைப்*  

பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 

நில மன்னனும் ஆய், உலகு ஆண்டவனுக்கு 

இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 3

1080


  








 ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள்  அணிமாமலர் மங்கை தாயார்  திருவடிகளே சரணம் ...


அன்புடன்
அனுபிரேம்💖💖💖

3 comments:

  1. இந்தக் கோவில்தான் நான் சேவித்த 106 திவ்யதேசங்களில் கடைசியாகச் சேவித்தது. இன்னும் சில வாரங்களில் எழுத இருக்கிறேன் (பெரும்பாலும் படங்கள் வாயிலாக). நீங்கள் திவ்யதேசம் பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். படங்களும் அழகு (நரசிம்மரை சாந்த நரசிம்மர் என்று குறிப்பிட்டனர்)

    ReplyDelete
  2. சிறப்பான ஆலய தரிசனம். மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete