01 September 2024

71. சூளுறவு கொண்டேனோ திருக்கோடியூராரைப் போலே.

71. சூளுறவு கொண்டேனோ திருக்கோடியூராரைப் போலே.







சுவாமி ராமானுஜருக்கு மொத்தம் ஐந்து குருமார்கள். அவர்களில் ஒருவர் திருக்கோட்டியூர் நம்பி. இவர் ஆளவந்தாரின் சீடர் ஆவார். ஆளவந்தார் இவரிடம் சில ரகசிய அர்த்தங்களைக் கூறியிருந்தார். அவற்றை ராமானுஜருக்கு உபதேசிக்க வேண்டும் என்றும் கூறினார்.


திருக்கோட்டியூர் நம்பி அந்த அர்த்தங்களை ராமானுஜரிடம் கூறாமல் காலம் தாழ்த்தினார். அதற்குக் காரணம் இருந்தது. உபதேசங்கள் தப்பானவர்களுக்குச் செல்லக் கூடாது. அதனால் அவர்கள் சிஷ்யனுக்கு உண்மையிலேயே தீவிரமான பக்தியும் ஆர்வமும் இருக்கிறதா என்று பரீட்சை செய்துவிட்டுத் தான் கற்றுக்கொடுப்பார்கள்.


ஒரு முறை திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கம் வந்தார். 

திருவரங்கன் அர்ச்சகர் மூலமாக ‘வாரும் திருக்கோட்டியூர் நம்பியே! நம் ராமானுஜருக்கு ரகசிய அர்த்தங்களை உபதேசிக்க வேண்டும். அவர் அதற்குத் தகுதியானவர்!” என்றார். 

நம்பி கேட்டுக்கொண்டார் ஆனால் அர்த்தங்களை உபதேசிக்காமல் திருக்கோட்டியூர் சென்றுவிட்டார்.


ராமானுஜர் திருக்கோட்டியூருக்கு நடந்து சென்றார். திருக்கோட்டியூர் ஊர் எல்லைக்குள் நுழைந்தவுடன் எதிரே வந்தவரிடம் “இங்கே திருக்கோட்டியூர் நம்பி இல்லம் எங்கே இருக்கிறது ?” என்று கேட்டார் அவரும் வழியைச் சொல்ல, உடனே ராமானுஜர் நின்ற இடத்திலிருந்து கீழே விழுந்து நம்பியின் இல்லம் இருக்கும் இடம்வரை சேவித்துக்கொண்டே சென்றார்.


நம்பியின் இல்லத்தை அடைந்தார். நம்பி அவரிடம் “என்ன விஷயம் ?” என்று கேட்டார். 

ராமானுஜர் ”ரகசிய அர்த்தம் தெரிந்துகொள்ள வேண்டும். அதை எனக்கு நீங்கள் போதிக்க வேண்டும்” என்றார். 

நம்பி அவரிடம் ”பிறகு வாரும்” என்றார். ராமானுஜர் திருக்கோட்டியூரிலிருந்து திருவரங்கம் திரும்பினார்.

சிறிது காலம் கழித்து மீண்டும் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்றார். மறுபடியும் நம்பிகள் ”பிறகு வாரும்” என்று திரும்ப அனுப்பினார்.


ராமானுஜர் பதினேழாவது முறை சென்றபோது நம்பி “அடுத்த முறை வரும்போது ரகசிய அத்தங்களை சொல்லுகிறேன். ஆனால் நீர் தண்ட பவித்திரத்துடன் மட்டும் வர வேண்டும்!” என்றார்.

“அப்படியே செய்கிறேன்!” என்று புறப்பட்டார் ராமானுஜர்.


ராமானுஜர் பதினெட்டாவது முறை திருக்கோட்டியூருக்கு முதலியாண்டான், கூரத்தாழ்வானுடன் சென்றார்.

 நம்பிகள் ”என்ன ராமானுஜரே! தண்ட பவித்திரத்துடன் உம்மை மட்டும் தானே வரச் சொன்னேன் ? ஆனால் நீரோ கூட மற்றவர்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய்” என்றார்.


ராமானுஜர் நம்பியை வணங்கி “இதோ இங்கே இருக்கும் முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் அடியேனுக்குத் தண்டமும், பவித்திரமுமாக எப்போதும் பிரியாமல் இருப்பவர்கள்” என்றார்.


நம்பி “இப்போது உபதேசம் செய்வது மிகவும் ஆழ்ந்த பொருள். இந்த உபதேசம் மிகப் புனிதமானது.இவற்றைத் தகுதி இல்லாத யாருக்கும் உபதேசிக்கக் கூடாது. நான் எப்படி உம்மைப் பரிசோதித்து இதைக் கொடுக்கிறேனோ அதே போல நீரும் செய்ய வேண்டும். இது என் கட்டளை!” என்று ரகசிய அர்த்தங்களை உபதேசித்தார்.


ராமானுஜர் ”அப்படியே செய்கிறேன்” என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.


அர்த்தங்களைப் பெற்றுக் கொண்ட ராமானுஜர் திருக்கோட்டியூர் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கே பெருமாளைச் சேவித்து பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு பிரதட்சணமாக வரும்போது நரசிம்மர் சந்நிதியில் குழுமியிருந்த வைணவர்களைப் பார்த்தார். அவர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் நம்பிகள் சொன்ன ரகசிய அர்த்தங்களை உபதேசித்தார்.


இந்த விஷயம் நம்பிகளின் காதுகளுக்கு எட்டியது. திருக்கோட்டியூர் நம்பி கோயிலுக்கு விரைந்து வந்தார். ராமானுஜர் அவரை வணங்கினார்.


நம்பிகள் கோபமாக “இந்த ரகசியங்களைத் தகுதியில்லாத ஒருவருக்கும் சொல்லக் கூடாது என்று உம்மிடம் சொன்னேன் அல்லவா ?” என்றார்


“ஆம் சுவாமி!” என்றார் ராமானுஜர்


“குருவின் வார்த்தையை மீறிய சீடனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா ?” என்றார்

ராமானுஜர் ”குருவின் வார்த்தையை மீறிய சீடனுக்கு நரகம் நிச்சயம்!” என்று பதில் அளித்தார்

“அது தெரிந்துமா இப்படிச் செய்தீர் ?” என்றார்


“நான் ஒருவன் நரகம் சென்றால் பரவாயில்லை. ஆனால் இங்கே என்னிடம் கேட்ட பல வைணவர்கள் நற்கதி அடைவார்களே!” என்றார்.


ராமானுஜரின் கருணை உள்ளத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்த நம்பி “எம்பெருமானை விட உமது கருணை உள்ளம் பெரியது. வாரும் எம்பெருமானாரே!” என்று ஆரத்தழுவிக்கொண்டார்.


"திருக்கோட்டியூர் நம்பிகளைப்போல சிறந்த ஆன்மாவாக  இருந்தாலும் இராமானுஜரையே சூளருகைக்க (சூளுறவு என்றால் ஆணையிட்டு அதை மீறமாட்டேன் என்று சத்தியம் செய்வது)   வைத்தபின் தான் சம்பரதாயத்தின் மஹா அர்த்தத்தை கூறுவேன் என்ற மனதிடத்துடன் இருந்தேனா?" என்று கூறுகிறாள்   திருக்கோளூர் பெண்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே








திருவாய்மொழி - இரண்டாம் பத்து

2-4 ஆடி ஆடி

ஆடி ஆடி* அகம் கரைந்து,* இசை பாடிப் பாடிக்* கண்ணீர் மல்கி,* எங்கும் நாடி நாடி* நரசிங்கா என்று,* வாடி வாடும்* இவ் வாள் நுதலே. 1 3042 வாள் நுதல்* இம் மடவரல்,* உம்மைக் காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல் வாணன்* ஆயிரம் தோள் துணித்தீர்,* உம்மைக் காண* நீர் இரக்கம் இலீரே. 2

3043


72. திருப்புலியூர்

ஸ்ரீ பொற்கொடி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மாயப்பிரான் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

4 comments:

  1. Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete
  2. படங்களைப் பதிவிற்கேற்றார்ப் போலக் கொண்டு வந்தது சிறப்பு.

    ReplyDelete