05 May 2022

உடையவர் திருநட்சத்திரம்...

 ஆதிசேஷன் அம்சமான சுவாமி  இராமானுஜரின்  1005 - வது திருநட்சித்திரம்  இன்று

  சித்திரையில் திருவாதிரை ....

மேல்கோட்டை  ஸ்வாமி எம்பெருமானார் உத்ஸவ காட்சிகள் ....










திருவரங்கம் நம்பெருமாள்,  ஸ்ரீ ராமானுஜருக்கு சாத்திய திருநாமம் -  "உடையவர்"

   திருவரங்கத்துக்கு வந்திருந்த ஸ்ரீ ராமானுஜரின் கைங்கர்ய சிறப்பைக்  கண்டு  சிலாகித்த ஸ்வாமி நம்பெருமாள், இவர் அதாவது ஸ்ரீ ராமானுஜர் பூவுலகான லீலாவிபூதிக்கும்  மேலுலகமான (வைகுண்டம் என அழைக்கப்படும்)  நித்ய  விபூதிக்கும் உடையவர் என அருளிச்செய்தார். மேலும் இவர்க்கு மட்டுமல்லாது இந்த ஸ்வாமியை பின் பற்றுபவர்க்கும், அவரது அடி தொழுவோர்க்கும் அவரைச் சார்ந்தவர்க்கும் கூட வைகுண்ட ப்ராப்தி  உண்டென்று அருளிச் செய்து, ஸ்ரீ ராமானுஜருக்கு "உடையவர்" என்ற திருநாமத்தை சூட்டினார்.





எம்பெருமானார்  (சித்திரை – திருவாதிரை)


அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே ..!





எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே

எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே

பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே

பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே

தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே

தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே

தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே

சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே





திருநக்ஷத்ரம்  : சித்திரை, திருவாதிரை

அவதார ஸ்தலம்  : ஸ்ரீபெரும்பூதூர்

பெற்றோர்:  கேசவ சோமயாஜி, காந்திமதி அம்மையார்

துணைவியார்: தஞ்சமாம்பாள்

ஆசார்யன்  : பெரிய நம்பி

சிஷ்யர்கள்  : கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 சிம்ஹாசனாதிபதிகள், 700 சந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் சிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.


பரமபதித்த இடம்  : ஸ்ரீரங்கம்

எம்பெருமானார் அருளிச்செய்தவை  : நவரத்தினங்களாகக் கருதப்பட்ட ஒன்பது (9) க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

அவை ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம்,சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம்.













சுவாமி இராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்

பிறப்பு, பிங்கல வருடம், சித்திரை-   1017, திருவாதிரை நட்சத்திரம், தசமி திதி, வியாழக்கிழமை,

காது குத்துதல்  -1022

உபநயனம் - 1025

திருமணம் - 1033

காஞ்சிபுரத்தில் இல்லறத்தவராக  -  1034

காசி யாத்திரை -  1035

ஆளவந்தாரைச் சந்தித்தல் - 1041

சந்நியாசம் ஏற்றல் -  1047

கோஷ்டியூர் நம்பிகளைச் சந்தித்தல்  - 1049

திருப்பதி, திருமலையில் வசித்தல் - 1051

ஸ்ரீபாஷ்யம் எழுதிய காலம் -  1051-1055

திருப்பதி, திருமலையில் சேவை -  1057

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்  -  1058-1089

திக்விஜய யாத்திரை  -  1089-1095

கூர்மக்ஷேத்திர சேவை  -  1094-1095

மைசூர் விஜயம் -  1097-1098

செல்லப்பிள்ளைக்காக தில்லி -  1101-1104

தொண்டனூர் ராஜ குரு  - 1110

ஸ்ரீரங்கம் திரும்புதல் -  1111-1112

வைகுண்டம் திரும்புதல் -   1138

 



 

இராமானுச நூற்றந்தாதி




ஐந்தாம் பாசுரம் - எம்பெருமானாருடைய திருநாமங்களைச் சொல்லுவோம் என்று முதலிலே சொன்னவர் இப்பொழுது அதைத் தொடங்க, அப்பொழுது தவறான பார்வை கொண்ட குத்ருஷ்டிகள் [வேதத்தின் பொருளை மாற்றி உரைப்பவர்கள்] நம்மை நிந்திக்கலாம் என்று சொல்லி, அதிலிருந்து பின்வாங்கி, அதற்குப் பிறகு தானே தன்னை ஸமாதானம் செய்து கொண்டு, எடுத்த கார்யத்தில் ஈடுபடுகிறார்.


எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா

மனக் குற்ற மாந்தர் பழிக்கில், புகழ் அவன் மன்னிய சீர்,

தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா

இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்வு இது என்றே


நம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த செல்வம் எம்பெருமானாரே என்று இசையாத மனோதோஷத்தை உடைய மனுஷ்யர்கள் என் முயற்சியைப் பார்த்து நிந்தித்தார்களாகில் அதுவே எனக்குக் கொண்டாட்டமாகும். எம்பெருமானாருடைய பொருந்தியிருக்கும் திருக்கல்யாண குணங்களுக்குத் தகுதியான ப்ரேமத்தை உடையவர்கள், பக்தியோடே கூடிய செயல்களையுடையதென்று அவருடைய திருநாமங்களைச் சொல்லக்கூடிய என்னுடைய பாசுரங்களில் குற்றத்தைக் காணமாட்டார்கள்.




ஆறாம் பாசுரம் - கீழ்ப் பாசுரத்தில் தான் செய்யக்கூடிய பாசுரங்கள், பக்தியின் வெளிப்பாடு என்றார். ஆனால் அந்த எம்பெருமானாரின் பெருமைக்குத் தகுந்த பக்தி தன்னிடத்தில் இல்லை என்று தன்னைத் தானே நிந்தித்துக்கொள்கிறார்.


இயலும் பொருளும் இசையத்தொடுத்து ஈன் கவிகள் அன்பால்

மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்,

பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்

முயல்கின்றனன் அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே


வார்த்தைகளும் அர்த்தங்களும் பொருந்தத் தொடுத்து, உயர்ந்த கவிஞர்கள் மிகுந்த ப்ரேமத்தாலே அறிவழிந்து எம்பெருமானாரை கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட எம்பெருமானாரை பக்தியில்லாத என்னுடைய பாபிஷ்டமான மனதாலே, சொல்லப்பட்ட விஷயத்தில் நிறைந்திருக்கிற கவிகளிலே, அவருடைய எல்லையில்லாத பெருமையைப் பேசுவதாக என்னுடைய அறிவுகேட்டாலே முயல்கின்றேன்.







ஏழாம் பாசுரம் - தன்னுடைய தாழ்ச்சியைப் பார்த்துப் பின்வாங்கியவர் தனக்குக் கூரத்தாழ்வான் திருவடி ஸம்பந்தம் இருப்பதை நினைத்துப் பார்த்து இது தனக்குக் கடினமல்ல என்று நிர்ணயித்து இதைத் தொடங்குகிறார்.


மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்

குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்

பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி, அல்லா

வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே


பேச்சுக்கு நிலமல்லாத பெரிய புகழையுடையவராய், மிகவும் பலம் வாய்ந்த தீமையை நடத்துவதான பிறவி, ஞானம், அனுஷ்டானம் ஆகியவற்றாலே வரும் செருக்கு என்னும் படுகுழியைக் கடந்திருப்பவராய், நமக்குத் தலைவரான கூரத்தாழ்வானுடைய திருவடிகளைச் சென்றடைந்தேன். ஆனபின்பு, பாபங்களில் இருந்து நம்மைக் கரைசேர்க்கும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை ப்ரீதியாலே தூண்டப்பட்டுப் பாடி, நம் ஸ்வரூபத்துக்குச் சேராத வழிகளைத் தப்புகை எனக்கு இனி ஒன்றும் கடினமில்லை.










தொடரும்...

முந்தைய பதிவுகள்...




உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖



No comments:

Post a Comment