06 May 2022

ஸ்ரீ பாஷ்யகாரர்

ஸ்ரீ பாஷ்யகாரர் -  சுவாமி ராமானுஜர் ஆளவந்தாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க , பெருமாளின் ஆசியுடனும் ஆழ்வார் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை வழிகாட்டியாய் வைத்துக்கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் (பாஷ்யம்) எழுதினார். அந்த விரிவுரைகளைக் கேட்ட ஸ்ரீ சரஸ்வதிதேவி, இவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ எனும் திருநாமம் சூட்டினார்.






ஸ்ரீ பெரும்புதூரில் ஸ்ரீ இராமானுஜர் ஹாரத்தில் காணப்படும், திருக்கச்சிநம்பிகளின் வாயிலாக  பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்....

1. “அஹமேவ பரம் தத்வம்"

நாராயணனே பரம் பொருள்.

2. “தர்சனம் பேத ஏவ”

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”

சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”

அந்திம காலத்தில் சரணமடைந்தவன், நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

5. “ஸரீர அவஸாநே  முக்தி"

சரீர முடிவில் மோட்சமுண்டு 

6. “மஹாபூர்ணம் ஸமாஸ்ரயே”

பெரிய நம்பிகளையே குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

      இந்த  “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். நம்பிகள் மூலம் காஞ்சி தேவப்பெருமாளிடம் பெற்ற இந்த ஆறு வார்த்தைகள் தான் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைப் போக்கை தீர்மானித்தது. 



















ஸ்வாமி ராமானுஜரின் மூன்று திருமேனிகள்....

1) தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
2) தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்)
3) தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்)

1) தானான திருமேனி -

தானான திருமேனி திருவரங்கத்தில் உள்ளது. இராமனுசர் பரமபதம் அடைந்த பின்னர் அவர் பூத உடலை திருப்பள்ளி(புதைத்தல்) படுத்தினர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், துறவிகளை எரிப்பது கிடையாது.மாறாக திருபள்ளிப் படுத்துவார்கள். அவ்வாறு திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி இத்திருமேனியை தானான திருமேனி என்று பெயர்.

2) தானுகந்த திருமேனி -


119ம் வயது நிரம்பிய போதிலும் ஶ்ரீராமானுஜர் ஶ்ரீரங்கத்தில் பகவத் கைங்கர்யத்தில் ஈடுப்பட்டு வந்தார். அவரது அர்ச்சா திருமேனியை அவதார ஸ்தலமான ஶ்ரீபெரும்புத்தூரில் பிரதிஷ்டை செய்ய சீடர்கள் ஆவல் கொண்டனர். முதலியாண்டான் புதல்வர் கந்தாடையாண்டான் வழி ஶ்ரீராமானுஜரின் நியமனமும் பெறப்பட்டது. 

அர்ச்சா திருமேனி பூர்த்தியானதும் ஶ்ரீ ராமானுஜர் அத்திருமேனியை ஆரத்தழுவினார். விரும்பி தழுவிய திருமேனி என்பதால் ‘தானுகந்த திருமேனி’ என கொண்டாடப்படுகின்றது இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.


3) தமருகந்த திருமேனி -

தமர் உகந்த திருமேனி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்தில் உள்ளது. இவ்விடத்தில் சுமார் 12 ஆண்டுக் காலம் தங்கி இருந்து கைங்கர்யம் மேற்கொண்டார். திருவரங்கம் செல்வதற்காக இவ்வூர் சீடர்களிடம் விடைபெற்றபோது, இராமானுசரை பிரிந்து வாழ முடியாது என்று அவர்கள் கூற, அவர்கள் குறையைப் போக்குவதற்காக, சிற்பியை வரவழைத்து, தன் உருவத்தை சிலையாக வடிக்கச்செய்து, தன் சக்திகளை பாய்ச்சினார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இதனால் இச்சிலை தமருகந்த திருமேனி என்று அழைக்கப்படுகிறது.




1. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ,  2. திருவரங்கம் எம்பெருமானார், 3. திருப்பதி உடையவர்
4. திருவல்லிக்கேணி எதிராஜன், 5. தொண்டனூர் இராமானுஜன், 6. மேல்கோட்டை பாஷ்யகாரர்




ஸ்ரீ பெரும்புதூர் சுவாமி  இராமானுசர்  திருத்தேர்- 





 எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை மனத்தால் நினைத்து, வாயால் அவரின் நாமங்களைச் சொல்லி, அவர் திருவுள்ளம் உகந்த விஷயங்களைச் செய்தல் உத்தமமான கைங்கர்யம்...

எம்பெருமானார் உகந்த கைங்கர்யங்களை அறிவது எவ்வாறு எனில்...

அவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே, அவர் அருளிச்சென்ற திருவாக்கைக் கொண்டே அறியலாம்.

அவர் தம்முடைய திருவடி சம்பந்தம் பெற்ற அனைவருக்காகவும், அருளிச் சென்ற திவ்ய ஆக்ஞைகளை (கட்டளைகளை) அறிந்து, அதன் படி நடத்தல், "அடியேன் ராமாநுஜ தாஸன்!" என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவருக்கும், ஸ்ரீ பாகவதருக்கும் தலையாய கடமை.


அந்த திவ்ய ஆணைகளை சிஷ்யர்களுக்கு உபதேசித்து, அதைக் கடைப்பிடிக்கச் செய்வதே, எம்பெருமானார் தரிசனமாகிய இந்த ஸம்ப்ரதாயத்தில் உள்ள அனைத்து ராமாநுஜ ஜீயர்களின் மற்றும் ஆசார்யர்களின் தலையாய பணி.

"உத்தராக ஆசார்யர் எம்பெருமானாரே" அவரின், திருவடி சம்பந்தத்தால் பேற்றை (பரமபதத்தை) பெறுகிறோம், என்பதை அனைத்து பூர்வாசார்யர்களும் அறுதியிட்ட ரகசியம், பிற்பட்டவர்களுக்கும் அருளிச் சென்ற விஷயம்.

சரணாகதிக்குப் பின், எஞ்சிய வாழ்க்கை, ஞான பக்தி வைராக்கியங்கள் விளையும் படியான ஆத்ம யாத்திரையாக அமைய வேண்டும். மாறாக, சம்சாரத்தில் உழலும், சமான்ய வாழ்க்கையாக இருக்கலாகாது.

எம்பெருமானார் நியமித்த ஆறு கட்டளைகள் -

1. ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும், வாசிப்பித்தும் போருகை.
இயலாதெனில்,

2. அருளிச்செயல்களாகிய திவ்யப் பிரபந்தங்களை ஓதியும் ஓதுவித்தும் போருகை.
இதுவும் முடியாவிடின்,

3. திவ்யதேசங்களில் எம்பெருமானுக்கு, அமுதுபடி, சாத்துப்படி முதலானவற்றைச் செய்து, நடத்திக்கொண்டு போருகை.
இதுவும் முடியவில்லையாயின்,

4. திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு வாழ்தல்.
இதற்கும் யோக்யதையில்லையாயின்,

5. தினமும் த்வயத்தின் அர்த்தத்தை அறிந்து வைத்துக்கொண்டு,  த்வய அர்த்த அனுசந்தானம் செய்து கொண்டிருத்தல்.
இதில் எதுவுமே செய்ய இயலாதவர் எனில்,

6. எம்பெருமானுடைய அடியவனான பரம பாகவதன் (ஞான, பக்தி, வைராக்யம் உடைய) ஒருவனிடத்தில் அடிபணிந்து, அவனுடைய அபிமானத்தினைப் பெறுதல்.


ஒவ்வொரு ஸ்ரீ பாகவதரும் ஸ்ரீ வைஷ்ணவரும்,  மேற்கூறிய ஆறு கைங்கர்யங்களுள் தங்களால் இயன்றவற்றைச் செய்தல் அவசியம். இயலாவிடில் அடுத்தடுத்த சொன்ன எளிதானவற்றையாவது செய்தாக வேண்டும்.



ஸ்ரீரங்கம் - உடையவர் 



 திருப்பதி - எதிராஜர் 


 
சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் ஸ்வாமி எம்பெருமானார்



இராமானுச நூற்றந்தாதி

எட்டாம் பாசுரம் -  பொய்கையாழ்வார் அருளிச்செய்த திவ்யப்ரபந்தத்தைத் தம்முடைய திருவுள்ளத்திலே வைத்துக்கொண்டிருக்கும் பெருமையையுடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார்.


வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி, ஒன்றத்

திரித்து, அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே

2798 / 8


சேதனரை வருந்தப்பண்ணும், கண்ணுக்குப் புலப்படும் வெளிவிஷயங்களில் ஈடுபடுத்தும் அறியாமை என்னும் இருளைப் போக்கும்படியாக எங்கள் ப்ரபன்ன குலத்துக்கு விரும்பத்தக்கவராய் இருப்பவர் பரம உதாரரான பொய்கையாழ்வார். 

அவர் வேதாந்தத்தினுடைய அர்த்தத்தையும் அழகிய தமிழ் வார்த்தைகளையும் கூட்டி நன்றாகச் சேரும்படி செய்து அன்று திருவிடைகழியிலே ஆயன் எம்பெருமான் வந்து நெருக்கினபோது “வையம் தகளியா” என்று தொடங்கி அருளிய முதல் திருவந்தாதி என்கிற திருவிளக்கைத் தம் திருவுள்ளத்திலே வைத்துக்கொண்டிருக்கும் அதிகமான பெருமையைக் கொண்ட எம்பெருமானார் எங்களுக்கு நாதர்.


ஒன்பதாம் பாசுரம்  -- பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திருவுள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களைச் சொல்லுமவர்கள் வேதத்தை ரக்ஷித்து லோகத்திலே ஸ்தாபிப்பவர்கள் என்கிறார்.


இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட ஞானம் என்னும்

நிறை விளக்கேற்றிய பூதத் திரு அடி தாள்கள் நெஞ்சத்து

உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்

மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே

2799 / 9


நமக்குத் தகுந்த தலைவனானவனை காண்பதற்கு உறுப்பான ஹ்ருதயத்தைப் பற்றிக்கிடக்கிற அறியாமை என்னும் இருளானது நசிக்கும்படியாக இரண்டாம் திருவந்தாதியில் “அன்பே தகளியா” என்று தொடங்கி பரஜ்ஞானமாகிற பரிபூர்ண தீபத்தை ஏற்றியவர் ஸ்ரீபூதத்தாழ்வாராகிற ஸ்வாமிகள். 

அவருடைய திருவடிகளைத் திருவுள்ளத்திலே நிரந்தரவாஸம் பண்ணும்படி வைத்து அனுபவிக்கும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை எப்பொழுதும் சொல்லும் நல்லவர்கள், பாஹ்ய [வேதத்தை நம்பாதவர்கள்] குத்ருஷ்டிகளால் அழிக்க முடியாதபடி வேதத்தை ரக்ஷித்து இந்த லோகத்திலே நன்றாக ஸ்தாபிப்பவர்கள்.


பத்தாம் பாசுரம் -- பேயாழ்வார் திருவடிகளை எப்பொழுதும் கொண்டாடும் தன்மையை உடைய எம்பெருமானார் விஷயத்தில் அன்புடையார்கள் திருவடிகளைத் தங்கள் தலையிலே தாங்குபவர்கள் எல்லாக் காலத்திலும் உயர்ந்தவர் என்கிறார்.


மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்

தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்

பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்

சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே

2800 / 10


பேர்க்கப் போகாதபடி நின்ற அறியாமை என்னும் பேரிருள் முதல் இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய விளக்காலே முழுவதும் அழிந்தபின்பு திருக்கோவலூரிலே திருமாமகளுடன் க்ருஷ்ணாவதாரத்தில் தன் அடியார்களிடத்தில் பவ்யமாக இருந்த ஸர்வேச்வரனைத் தான் கண்ட விதத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தவர், தமிழுக்குத் தலைவரான பேயாழ்வார். 

அவருடைய விரும்பத்தக்க திருவடிகளை புகழும் எம்பெருமானார் விஷயத்தில் அன்பைத் தங்களுக்கு ஆபரணமாக அணிந்திருப்பவர்களுடைய திருவடிகளை தங்கள் தலையிலே தரிக்கும் செல்வத்தை உடையவர்கள் எல்லாக் காலத்திலும் உயர்ந்தவர்.


திருப்பதி ஸ்ரீ எம்பெருமானார் -ஸ்ரீ கோவிந்தராஜர் சன்னதி.



ஸ்ரீரங்கம் ஸ்வாமி ராமானுஜர் திவ்ய சேவை.


தொடர்ந்து சுவாமி ராமானுஜரின் திவ்ய  தரிசனத்தை  கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல ...


முந்தைய பதிவுகள்...



உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖

No comments:

Post a Comment