இராமானுஜர் நூற்றந்தாதி
திருவரங்கத்து அமுதனாருக்கு இராமானுஜரின் வைபவத்தை உலகோர் அரிய சொல்லவேண்டும் என்று ஆசை. சொன்னால் 'இவரைப்போல் உண்டா?' என்று பாடியாக வேண்டும். ஆனால், இராமானுஜரோ ஏற்றுக்கொள்ள மாட்டார். இருந்தாலும் ஆச்சாரிய வைபவத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
ஒரு நூற்றியெட்டு பாடல்கள் - இராமானுஜர் எப்படிப்பட்டவர், எப்படிப்பட்டவர் என்று பாடினார்.
பாடிக்கொண்டு போய் இராமானுஜர் திருமுன்பு கொடுத்தார். அனுமதி வாங்கவேண்டுமல்லவா?!
அவரிடம் கொடுத்தார்.
இராமானுஜர் அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். "இந்த மாதிரி ஒரு தனி மனிதனைப் பற்றிய வைபவங்கள் எல்லாம் இதில் எழுதக்கூடாது" என்றார். அதை அப்படியே தூக்கி, ஓலைச்சுவடியை எடுத்து உள்ளே வைத்துவிட்டார் இராமானுஜர்.
'இந்த பாடல் இனி வெளியே போகவே போகாது போலும், நாம் ஏதோ அவரிடம் கொடுத்தால் அவர் ஏதோ சுருட்டி உள்ளே வைத்துவிட்டாரே?' என்று யோசித்தார் திருவரங்கத்து அமுதனார்.
'இவர் அனுமதி கொடுப்பார் என்று பார்த்தால், அனுமதி கொடுக்க மாட்டேன் என்கிறாரே!' ரொம்ப சாமர்த்தியமாக யோசித்தார்.
இராமானுஜர் வைபவத்தை சொல்ல வேண்டும். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் திருவரங்கத்து அமுதனார்.
தனியாக ஓரிடத்திற்குப் போனார்.
ஸ்ரீரங்கத்திலே காட்டழகிய சிங்கர் சன்னிதி என்று சொல்வார்கள்.
குருபரம்பர வைபவத்தில் இந்த சம்பவம் பற்றி இல்லாமலும், பல கதைகள், செவி வழிச் செய்திகளாக ஆச்சாரியார்கள் சொல்லிக் கொண்டு வருவது.
அதைப்போல் இப்பொழுது ஒரு செய்தி.
காட்டழகிய சிங்கர் சன்னதியில் இருந்து கொண்டு, தன் சிஷ்யர்களை வைத்துக்கொண்டு, அடியார்களோடு, இராமானுஜர் நூற்றந்தாதியில் ஒவ்வொரு பாட்டாக எழுதுகிறார் திருவரங்கத்து அமுதனார்.
இப்பொழுது முன்னெச்சரிக்கையாக என்ன பண்ணினார் என்றால், ஒவ்வொரு ஆழ்வாரின் பெருமையையும் - பாடலையும் முதல் இரண்டு வரியாலே சொல்லுவர்.
அடுத்த இரண்டு வரியாலே அந்த ஆழ்வாரின் திருவடி சம்பந்தம் பெற்றவர் இராமானுஜர் என்று எழுதுவார்.
அடுத்த பாட்டிலே இன்னோரு ஆழ்வார் வைபவத்தை முதல் இரு வரிகளில் எழுதிக்கொள்ளுவார்.
அடுத்த இரண்டு வரியாலே அந்த ஆழ்வார் திருவடிகளைப் பற்றியவர் இராமானுஜர் என்று எழுதுவார்.
அப்படிச் சொல்லும் பொழுது இராமானுஜர் வைபவத்தையும் சேர்த்துச் சொல்லி விடுவோம். இதேபோல் இராமானுஜர் நூற்றியெட்டு வைபவம் எழுதினார்.
அதைக்கொண்டுபோய் இராமானுஜரிடம் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்ட இராமானுஜர் பார்த்தார் , 'பேயாழ்வார் திருவடிகளைப் பற்றியவர், குருகைப்பிரான் திருவடிகளை பற்றியவர், பூதத்தாழ்வார் திருவடிகளைப் பற்றியவர், திருமழிசைப்பிரான் கலையால் காண்பவர், நாதமுனிகளை அனுபவிப்பவர், ஆளவந்தார் தான் இவருக்கு எல்லாம், ஆண்டாளே இவருக்கு எல்லாம்' என்று இருந்தது.
திரும்ப திரும்ப படித்தார்.
இதைப்படித்துவிட்டு, வேண்டாம் என்று சொல்ல முடியுமா? இப்பொழுது தனிமனிதனான என்னைக் கொண்டாடினால் வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால், என் ஆச்சாரியாரின் பேரைச்சொல்லி எனக்குப் பெருமை சொன்னால், நான் இல்லையென்று சொன்னால், ஆச்சாரிய சம்பந்தத்தை இல்லை என்று ஆக்கிவிடுமோ இல்லையோ! ஆச்சாரிய அபிமானம் அவசியம் வேண்டும்.
ஆண்டாள் ஒரு பாசுரத்திலே, அபிமானம் கூடாது, அகங்காரம் கூடாது என்று பாடியுள்ளாள். ஆனால், ஆண்டாளின் தகப்பனாரான பெரியாழ்வாரோ அபிமானத்துடனோடு கூடிய சம்பந்தம் வேண்டும் என்று பாடியுள்ளார்.
'எனக்கு' என்று இருக்கும் அபிமானம் கூடாது.
ஆனால், பாகவத சம்பந்தத்தாலே ஏற்படும் அபிமானம் அவசியம் வேண்டும்.
நாம் இராமானுஜர் சம்பந்தி என்று சொல்வதில் என்ன குறை? 'அடியேன் இராமானுஜதாஸன்' அப்படியே சொல்லிக் கொள்ள வேண்டும்.
ஆணும் சொல்லலாம், பெண்ணும் சொல்லலாம், அதுவும் பஞ்சசம்ஸ்காரம் பெற்றுக் கொண்ட அத்துணை பேரும் சொல்ல வேண்டும்.
இந்த சாதி, இந்தக் குலம், இந்தக் கோத்ரம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை.
இது எல்லாவற்றிற்கும் மேல் ஸ்ரீ வைஷ்ணவன். 'அடியேன் இராமானுஜதாஸன்' என்று மட்டுமே அனைவரும் சொல்வார்கள்.
இராமானுஜதாஸன் என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சென்றால் ஜெய, விஜயர்கள் எதையும் சோதிக்காமல் உடனே உள்ளே விட்டு விடுவார்கள்.
இல்லையெனில், கர்மா என்ன என்று சோதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த அத்தனை வைபவத்தையும் உள்ளடக்கியது தான் இராமானுஜ நூற்றந்தாதி.
இராமானுஜர் வைபவத்தினை நேரிடையாக எழுதாமல், அவருடைய ஆச்சாரியார்களை பற்றி சொல்லி, ஆழ்வார்களைச் சொல்லி, சம்பந்தம் பெற்றவர் என்று சொன்னார் திருவரங்கத்து அமுதனார்.
இராமானுஜ சம்பந்திகளுக்கு காயத்ரி மந்திரத்தைப் போன்றது இந்த "இராமானுஜ நூற்றந்தாதி".
இராமானுச நூற்றந்தாதி
முதல் பாசுரம் - தம் திருவுள்ளத்தைக் குறித்து “எம்பெருமானார் திருவடிகளை நாம் பொருந்தி வாழும்படி அவர் திருநாமங்களை எப்பொழுதும் சொல்லுவோம் வா” என்கிறார்.
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லுவோம், அவன் நாமங்களே
நெஞ்சே! தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பெரிய பிராட்டியார் எம்பெருமானின் திருமார்பின் இனிமையைக் கண்ட பின்பு அந்தத் தாமரையைக் கைவிட்டு அந்தத் திருமார்பிலேயே நித்யவாஸம் செய்யும்படியானவனுடைய திருக்கல்யாண குணங்களால் நிறைந்திருக்கும் திருவாய்மொழியில் ஈடுபட்டிருப்பவரான நம்மாழ்வாருடைய திருவடிகளை அடைந்து அதனால் உஜ்ஜீவனத்தை அடைந்தவர் ராமானுஜர்.
பலவிதமான சாஸ்த்ரங்களைக் கற்றிருந்தும் அதின் உட்பொருளை அறியாமல் இருந்தவர்கள், பின்பு அவற்றினுடைய உட்பொருளை நன்றாக உணர்ந்து நிலைத்துநிற்கும்படி வந்து அவதரித்த எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளை, இதுவே நமக்குக் குறிக்கோள் என்று அறிந்த நாம், பொருந்தி வாழும்படியாக அவருடைய திருநாமங்களைப் பேசுவோம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் -- திருவதார உற்சவத்தில் திவ்ய தரிசனம்.
இரண்டாம் பாசுரம் -- கீழ்ப் பாசுரத்தில் தன்னுடைய நெஞ்சைப் பார்த்து எம்பெருமானுடைய திருநாமங்களைச் சொல்லலாம் என்று சொல்ல அந்த நெஞ்சம் எம்பெருமானார் திருவடிகளை நன்றாக அனுபவித்துக்கொண்டு மற்ற விஷயங்களை விரும்பாமல் இருந்ததைப் பார்த்து, இதென்ன ஆச்சர்யம் என்கிறார்.
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்,
உள்ளாது என்நெஞ்சு ஒன்று அறியேன், எனக்கு உற்ற பேர் இயல்வே
தேன் மிகுந்த பொழிலையுடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள கோயிலிலே (திருவரங்கத்தில்) சயனித்திருப்பதாலே அதுவே அடையாளமாக இருக்கக்கூடிய பெரிய பெருமாள். என்னுடைய நெஞ்சானது அந்தப் பெரிய பெருமாளின் தாமரை போன்ற திருவடிகளை தங்கள் மனதிலே எப்பொழுதும் வைக்காத சாஸ்த்ரத்தைக் கற்றுக் கொள்ளும் மனிதப் பிறவியில் பிறந்தும் அதற்கு பாக்யம் இல்லாமல் இருப்பவர்களை விட்டகன்றது.
என் நெஞ்சானது அதற்குப் பிறகு திருக்குறையலூரில் அவதரித்த திவ்யப்ரபந்தங்களைத் தருவதாகிய பெரிய நன்மையைச் செய்தவரான திருமங்கை ஆழ்வாருடைய திருவடிகளின் கீழே விட்டு நீங்காத அன்பை உடையவரான எம்பெருமானாருடைய நிரவதிகமான சீல குணத்தைத் தவிர வேறொன்றையும் சிந்திக்கிறதில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது என்பது எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்💖💖
உடையவர் புகழ் வாழி வாழி விளக்கம் நன்று நூற்றந்தாதி
ReplyDeleteபதவுறை அருமை சாத்து முறை பாசுரம் 3 சேவை ஆகும்
மற்றவை 2 மட்டும்
படங்களும் விளக்கங்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஎம்பெருமானார் நூற்றந்தாதி பிறந்த கதையும் தகவல்களும் விளக்கம் எல்லாம் அருமை. படங்கள் செம.
ReplyDeleteகீதா