04 June 2020

சுவாமி நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம்

இன்று   சுவாமி நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம்  (வைகாசியில் – விசாகம்)........







ஆழ்வார்  வாழி திருநாமம்



மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே







நம்மாழ்வார்


பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி
தந்தை : காரி
தாய் : உடையநங்கை

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி

எழுதிய நூல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்






திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.ஆகவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். 

அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது.

 திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.





ஆழ்வார்களுள் இவரை அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.

அதன்படி,


பூதத்தாழ்வாரை  சிரசாகவும் ,

பொய்கை,பேயாழ்வார்களை   திருக்கண்களாகவும்,
 
பெரியாழ்வாரை   திருமுகமாகவும்,
 
திருமழிசையாழ்வாரை  திருக்கழுத்தாகவும் ,

குலசேகராழ்வாரையும்  திருப்பாணாழ்வாரையும் திருக்கைகளாகவும்,

தொண்டரடிப்பொடியாழ்வாரை  திருமார்பாகவும் ,

திருமங்கையாழ்வாரை திருநாபிக்கமலமாகவும்,

மதுரகவியாழ்வாரைத்  திருவடிகளாகவும், 

எம்பெருமானரைத்  திருவடி நிலைகள் என்னும் பாதுகையாகவும் வழங்குவது மரபு .  










திருவாய் மொழி
முதற் பத்து
இரண்டாம் திருவாய்மொழி - வீடுமின்

பக்தியுடன் எம்பெருமானடைய பிறர்க்கறிவுறுத்தல்


வீடுமின் முற்றவும் *
வீடுசெய்து *உம்முயிர்
வீடுடையானிடை *
வீடு செய்ம்மினே. (2)
1 2686


மின்னின் நிலையில *
மன்னுயிராக்கைகள் *
என்னுமிடத்து *இறை
உன்னுமின்நீரே.
2 2687



நீர்நுமதென்றிவை *
வேர்முதல்மாய்த்து *இறை
சேர்மின், உயிர்க்கு *அதன்
நேர்நிறையில்லே.
3 2688



இல்லதும் உள்ளதும் *
அல்லது அவனுரு *
எல்லையில் அந்நலம் *
புல்குபற்றற்றே.
4 2689


அற்றதுபற்றெனில் *
உற்றதுவீடுஉயிர் *
செற்றதுமன்னுறில் *
அற்றிறைபற்றே.
5 2690



பற்றிலன் ஈசனும் *
முற்றவும் நின்றனன் *
பற்றிலையாய் *அவன்
முற்றிலடங்கே.
6 2691








அடங்கெழில் சம்பத்து *
அடங்கக்கண்டு *ஈசன்
அடங்கெழில் அஃதென்று *
அடங்குக உள்ளே.
7 2692



உள்ளம் உரைசெயல் *
உள்ளஇம்மூன்றையும் *
உள்ளிக்கெடுத்து *இறை
யுள்ளிலொடுங்கே.
8 2693


ஒடுங்கஅவன்கண் *
ஒடுங்கலும் எல்லாம் *
விடும்பின்னும் ஆக்கை *
விடும்பொழுது எண்ணே.
9 2694


எண்பெருக்கு அந்நலத்து *
ஒண்பொருள்ஈறில *
வண்புகழ் நாரணன் *
திண்கழல்சேரே. (2)
10 2695



சேர்த்தடத் *தென்குரு
கூர்ச்சடகோபன்சொல் *
சீர்த்தொடையாயிரத்து *
ஓர்த்தஇப்பத்தே. (2)
11 2696








ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


ஏரார் வைகாசி * விசாகத்தின் ஏற்றத்தைப்*
பாரோர் அறியப் பகருகின்றேன் ** சீராரும்
வேதம் தமிழ் செய்த * மெய்யன் எழில் குருகை *
நாதன் அவதரித்த நாள் *  (14 )

உண்டோ வைகாசி * விசாகத்துக்கு ஒப்பொரு நாள் *
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் ** உண்டோ
 திருவாய்மொழிக்கு ஒப்பு * தென் குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்குமூர் * (15)








நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!


அன்புடன்
அனுபிரேம்...



10 comments:

  1. அருமையாக கோர்த்திருக்கிறீர்கள்.

    இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது என் மனைவி, பசங்களைத் திருப்பிச் சொல்லச் சொல்லி கண்ணிநுண் சிறுத்தாம்பினால் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

    இன்றைய பாசுரமாக 'வீடுமின் முற்றவும்' எடுத்துக்கொண்டது மிகச் சிறப்பு.

    காரிமாறப்பிரான், நம் பண்டை வல்வினைகளை பாற்றி அருளவேணும்.

    ReplyDelete
  2. ஆழ்வார் திருநகரி சென்றிருந்த நினைவுகள் வந்துவிட்டன. புஷ்கரத்துக்கும் சென்றிருந்தேன். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று முறை சென்றிருக்கிறேன்.

    அவர் பாடிய பெருமாள்களை (திவ்யதேச மூலவர்கள்) சுதைச் சிற்பமாக திருப்புளியமரத்திற்கு படிகளில் ஏறும் இடத்திற்குப் பக்கத்தில் வடித்துவைத்திருக்கிறார்கள். காலத்தில் சிறிது சிதைவுற்றிருந்தாலும் காணவேண்டியவை. அதுபோல நம்மாழ்வார் சன்னிதியைச் சுற்றி அருகிலுள்ள மண்டபத்தில் சிற்பங்களும் மிக அழகாக இருக்கும்.

    இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லையாயின் அடுத்த முறை குடும்பத்தோடு செல்லும்போது பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பா ,பசங்களுடன் , நம்மாழ்வார் திரு நட்சித்திரத்திற்கு இரு நாட்களாவது இங்கு தங்கி இருந்து பார்க்கணும் ன்னு 3 வருசமா முயற்சிக்கிறோம் ஆனா முடியல ..

      அப்பா நிறைய முறை அங்கு மடத்தில் 10 நாட்கள் தங்கி சேவித்து இருக்கிறார் ....

      போன வருடம் இதே நாள் அங்கு செல்ல டிக்கெட் எல்லாம் பதிவு செய்தும் போக முடியவில்லை ..

      சரி ஆழ்வார் அழைக்கும் போது செல்லாம் என்று காத்திருக்கிறோம் ...

      Delete
  3. சிறப்பான பாசுரங்களுடன் படங்களும் சேர்த்து இன்றைய பதிவு மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார் ..

      Delete
  4. வித விதமான போக்களை கொண்டு தொடுக்கப் பட்ட அழகான மாலை , போட்டோக்கள் அவற்றின் நடுவே வைக்கப் பட்ட மேலும் அழகூட்டும் கலர் கலர் அலங்காரங்கள் . சூப்பர்

    ReplyDelete
  5. ஆழவார் திருநகரி சென்று பல வருடம் ஆசு.
    இன்று உங்கள் தளத்தில் தரிசனம் செய்தேன்.
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
    Replies
    1. ஆழ்வார் திருவடிகளே சரணம்...

      Delete